“பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 'கும்பல் படுகொலை' நடைமுறையில் இருந்ததாக கேள்விப்பட்டவில்லை” என்று, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசியதற்கு, “கும்பல் படுகொலையின் தந்தை ராஜீவ் காந்தி தான்” என்று, பாஜக தற்போது பதிலடி கொடுத்து உள்ளது இந்திய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பொற்கோயிலில் அத்து மீறி நுழைந்த இளைஞர் ஒருவர் சமீபத்தில் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு அம்மாநில முதலமைச்சர் அதிரடியாக உத்தரவிட்டு உள்ளார்.

இந்த நிலையில் தான், இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, நேற்றைய தினம் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்று தெரிவித்திருந்தார். 

அதில், “கடந்த 2014 ஆம் நரேந்திர மோடி ஆட்சிக்கு வரும் வரை, ‘கும்பல் கொலை’ என்ற வார்த்தையை யாரும் கேள்விப்பட்டது இல்லை. நன்றி மோடிஜி” என்று, குத்திக்காட்டும் விதமாக, சுட்டிக்காட்டி இருந்தார். 

குறிப்பாக, அந்த டிவிட்டின் இறுதியில் “நன்றி மோடிஜி” என்று, ஹேஷ்டேக் போட்டு ராகுல் காந்தி சுட்டிக்காட்டியிருந்தார். இது, இணையத்தில் பெரும் வைரலான நிலையில், பலரும் பல விதமான கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

இதனால், இணையத்தில் காங்கிரஸ் - பாஜக இடையேயான வார்த்தை யுத்தம் தொடங்கி நடந்துகொண்டு இருந்தது.

இந்த நிலையில் தான், இந்த வார்த்தைப் போரின் உச்சமாக ராகுல் காந்தியின் ‘கும்பல் கொலை’ என்ற கருத்திற்கு, பாஜகவின் ஐடி பிரிவு தலைவர் அமித் மால்வியா தனது டிவிட்டரில் தொடர்ச்சியான டிவிட்டுகள் போட்டு, பதிலடி கொடுத்து உள்ளார். 

அதன்படி, அமித் மால்வியா பதிவிட்டுள்ள டிவிட் பதிவில், “அகமதாபாத் (1969), ஜல்கான் (1970), மொராதாபாத் (1980), நெல்லி (1983), பிவாண்டி (1984), டெல்லி (1984), அகமதாபாத் (1985), பாகல்பூர் (1989), ஹைதராபாத் (1990), கான்பூர் (1992), மும்பை (1993) நேரு-காந்தி பரிவாரத்தின் கண்காணிப்பில் 100 க்கும் மேற்பட்டோர் இறந்த சிறிய பட்டியல் இது” என்று, சுட்டிக்காட்டி உள்ளார்.

அதே போல், அவரது மற்றொரு டிவிட் பதிவில், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் மரணத்தை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறை குறித்து ராஜீவ் காந்தி பேசிய வீடியோ ஒன்ற பதிவேற்றம் செய்து, “சீக்கியர்களின் இரத்தத்தை உறைய வைக்கும் இனப்படுகொலையை நியாயப்படுத்தும் கும்பல் படுகொலையின் தந்தை ராஜீவ் காந்தியே” என்று, பதிவிட்டு இருந்தார்.

மேலும், “காங்கிரஸ் தெருக்களில் இறங்கி ரத்தத்துக்கு ரத்தம் பழி வாங்குதல் போன்ற முழக்கங்களை எழுப்பியது என்றும், பெண்களை பலாத்காரம் செய்து, சீக்கிய ஆண்களின் கழுத்தில் எரியும் டயர்களை சுற்றியது என்றும், வடிகால்களில் வீசப்பட்ட கருகிய உடல்களை நாய்கள் தின்றன” என்றும், தனது பதிவில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.