பாஜக தேசிய செயலாளர் பதவியிலிருந்து ஹெச்.ராஜா நீக்கம்?
By Nivetha | Galatta | Sep 26, 2020, 06:15 pm
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாஜகவின் தேசிய நிர்வாகிகள் பட்டியலில் தமிழக பாஜகவைச் சேர்ந்த யாரும் இடம்பெறாதது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
பாரதிய ஜனதா கட்சி தேசிய அளவில் புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. பாஜக தலைவர் நட்டா வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய அளவில் இணை செயலாளர்கள், துணைச் செயாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டுள்ளார். இந்த புதிய பட்டியலில் தமிழகத்தில் இருந்து ஹெச். ராஜா பெயர் நீக்கப்பட்டுள்ளது. புதிய நிர்வாகிகளுக்கு தேசிய தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். முன்னாள் முதல்வர்கள் ராமன் சிங், வசுந்தர ராஜ சிந்தியா உள்ளோட்டோர் தேசிய நிர்வாகிகளாக இடம் பிடித்துள்ளனர். பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த பாஜக தலைவர்கள் எவரும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஹெச்.ராஜா போன்றவர்கள் தமிழகத்தில் இருந்து தேசிய தலைவரகளாக இடம்பெற்றிருந்த நிலையில், தேசிய நிர்வாகிகள் பட்டியலில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். பாஜக இளைஞர் அணி தலைவராக கர்நாடகாவை சேர்ந்த தேஜஸ்வி சூர்யா எம்.பி நியமிக்கப்பட்டுள்ளார். அங்கு இளைஞரணி தலைவராக இருந்த பூணம் மகாஜன் நீக்கப்பட்டுள்ளார். கட்சியின் துணைத் தலைவர் பொறுப்புக்கு சத்தீஸ்கரை சேர்ந்த பாஜக எம்எல்ஏ ராமன் சிங், பிகாரைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ராதா மோகன் சிங், ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே உள்ளிட்ட 11 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். தேசிய பொதுச் செயலாளர் பதவிக்கு உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த அருண் சிங் எம்.பி., மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த கைலாஷ் விஜய்வர்கியா உள்ளிட்ட ஒன்பது பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதில் முக்கியமாக, இதுநாள்வரை கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் பதவியை வகித்துவந்த முரளிதர ராவின் பெயர், புதிதாக வெளியிடப்பட்டுள்ள தேசிய பொதுச் செயலாளர் பட்டியலில் இடம்பெறவில்லை. தமிழகத்து்க்கான கட்சியின் மேலிட பொறுப்பாளராக முரளிதர ராவ் பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று, கட்சியின் முக்கியமான பொறுப்புகளில் ஒன்றாக கருதப்படும் தேசியச் செயலாளர் பதவிக்கு மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த வினோத் தவடே, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சத்ய குமார், ஜம்மு -காஷ்மீரை சேர்ந்த நரேந்திர சிங் உள்ளிட்ட 13 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், இதுநாள்வரை கட்சியின் தேசியச் செயலாளர் பொறுப்பை வகித்துவந்த ஹெச்.ராஜாவுக்கு மீண்டும் அந்த வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், தேசிய செய்தித் தொடர்பாளர் பொறுப்புக்கு உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த எம்.பி. அனில் பலூனி, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சம்பித் பத்ரா, பிகாரைச் சேர்ந்த எம்.பியும், மத்திய அமைச்சருமான ராஜீவ் பிரதாப் ரூடி, ராஜஸ்தானை சேர்ந்த எம்.பி ராஜவர்தன்சிங் ரத்தாேர், டெல்லி மாநிலத்தைச் சேர்ந்த கே.கே. சர்மா உள்பட மொத்தம் 23 பேர நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த பட்டியலிலும் தமிழகத்தைச் சேர்ந்த பாஜக தலைவர்கள் யாரும் இடம்பெறவில்லை. தேசிய நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக, சில மாதங்களுக்கு முன்பே தமிழகத்தைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவர்களான பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், ஹெச். ராஜா உள்ளிட்டோர் தங்களது ஆதரவாளர்களுடன் தனித்தனியாக டெல்லிக்குச் சென்று அமித் ஷா, ஜே.பி.நட்டா ஆகியோரை சந்தித்ததாக தகவல்கள் வெளியாகின.
கட்சியின் மூத்தத் தலைவர்களுக்கு இடையே நிலவும் கோஷ்டி பூசலால், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கடும் அதிருப்தியில் இருப்பதாகவும், தமது இந்த அதிருப்தியை கட்சித் தலைமைக்கு அவர் தெரியப்படுத்திவிட்டார் என்றும் கட்சி வட்டாரங்களில் தகவல் கசிந்தது குறிப்பிடத்தக்கது.