பீகார் மாநிலத்தில் முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இதன் ஆட்சிக்காலம் வரும் நவம்பர் 29ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. அதற்குள் சட்டமன்ற தேர்தலை நடத்தி புதிய உறுப்பினர்களைத் தேர்வு செய்ய வேண்டியது அவசியம். கொரோனா நோய்த்தொற்று காரணமாக தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்தன. ஆனால் உரிய சுகாதார நடவடிக்கைகளுடன் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

அதன்படி 243 உறுப்பினர்கள் கொண்ட பீகார் மாநில சட்டமன்றத்தின் பதவிக்காலம் நவம்பர் 29ம் தேதியுடன் முடிவடையை உள்ளது. இதையடுத்து புதிய உறுப்பினர்களை தேர்வு செய்ய தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
 
கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில் பீகார் மாநில தேர்தல் தேதியை அறிவிக்கிறோம். பீகாரில் சட்டசபையின் பதவிக்காலம் நவம்பர் 29 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. பீகார் சட்டமன்றத்தில் 243 உறுப்பினர் பதவிகள் உள்ளன. அதில் 38 இடங்கள் எஸ்சி வகுப்பினருக்கும், இரண்டு இடங்கள் எஸ்.டி. வகுப்பினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. 

பீகார் மாநிலத்தில் வாக்காளர்கள் எண்ணிக்கை 6.2 கோடியில் இருந்து 7.2 கோடியாக உயர்ந்துள்ளது. மொத்தம் 7.29 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 16 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

பீகார் மாநில சட்டமன்றத் தேர்தலின்போது நெரிசலை தவிர்க்கும் வகையில் வாக்குப்பதிவு ஒரு மணி நேரம் நீட்டிக்கப்படுகிறது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். இருப்பினும், இது இடதுசாரி ஆயுதக் குழுக்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இது பொருந்தாது. ஒரு வாக்குச்சாவடிக்கு 1500 வாக்காளர்கள் என்று இருந்ததை இப்போது 1000 வாக்காளர்களாக குறைத்துள்ளோம். 

பீகார் மாநிலத்தில் 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் நவம்பர் 7 ஆகிய நாட்களில் வாக்குப்பதிவு நடத்தப்படும். 3 கட்ட தேர்தல்களிலும் பதிவான வாக்குகள் நவம்பர் 10ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். 

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கு முன்பு நடந்த சட்டமன்ற தேர்தலான 2015ஆம் ஆண்டு பீகார் தேர்தல் ஒரு பார்வை:

``கடந்த 2015ஆம் ஆண்டு நடந்த பீகார் சட்டமன்ற தேர்தலில் ஒருங்கிணைந்த ஜனதா தளக் கட்சியின் நிதிஷ்குமார், ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்டார். இந்த மகாகத்பந்தன் கூட்டணி அபார வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. முதலமைச்சராக நிதிஷ் குமார் பதவியேற்றார்.

ஆனால் லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தார் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளால் அடுத்த இரண்டு ஆண்டுகளில் கூட்டணி உடைந்தது. இதனால் நிதிஷ்குமார் - லாலு இடையிலான 25 ஆண்டுகால நட்பில் விரிசல் ஏற்பட்டது. பின்னர் பாஜக உடன் கூட்டணி சேர்ந்து நிதிஷ்குமார் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டார்.

எனவே வரும் சட்டமன்ற தேர்தலில் இதே கூட்டணி தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது நிதிஷ்குமாரின் ஒருங்கிணைந்த ஜனதா தளம், சிரக் பஸ்வானின் லோக் ஜன்சக்தி கட்சி, முன்னாள் முதலமைச்சர் ஜித்தன் ராம் மாஞ்சியின் இந்துஸ்தானி ஆவாம் மோர்சா ஆகியவை கைகோர்க்கும் என்று கூறப்படுகிறது. இருப்பினும் தொகுதி பங்கீட்டில் கூட்டணி கட்சிகளிடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது" என்று கூறியுள்ளார் அவர்.