மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டு பஞ்சாப், அரியானா, உத்திரப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் பல்லாயிரக்கணக்கானோர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுடன் மத்திய அரசு பல கட்ட பேச்சு வார்த்தை நடத்தி உடன்பாடு ஏற்படாததால் மீண்டும் நாளை பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்றுடன் 13 வது நாளாகத் தொடரும் விவசாயிகள் போராட்டமானது, நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டமாக நடைபெற்று வருகிறது.

மேலும், இன்று நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளதால், இதற்கு காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், சமாஜ்வாடி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும், எதிர் கட்சிகளும், நாட்டில் செயல்பட்டு வரும் பல்வேறு முக்கிய தொழிற்சங்கங்களும், வணிகர்கள் சங்க அமைப்புகளும் ஆதரவு தெரிவித்து உள்ளன. 

வட மாநிலங்களில் முழு அடைப்பு போராட்டம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதையொட்டி அங்கு முழு அடைப்பு போராட்டம் நடைபெறாது என அம்மாநில அரசு தெரிவித்து உள்ளது.

தமிழகத்தைப் பொறுத்த வரை, திமுக கூட்டணி கட்சிகள் முழு அடைப்பு போராட்டத்தை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளன. அதன் படி, தமிழகத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகத் தமிழகத்திலும் போராட்டம் சற்று தீவிரம் அடைந்து உள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் விவசாயிகளுக்கு ஆதரவாக தற்போது போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

முக்கியமாக, “உழவு என்பது தொழில் மட்டுமல்ல, நம் அனைவரின் உரிமை” என்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.

விவசாயிகளுக்கு ஆதரவாகத் தமிழகத்தின் தலைநகர் சென்னையில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

திருச்சியில் விவசாயிகளுக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்தியவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

திருவாரூர் மற்றும் திருத்துறைப்பூண்டியில் சுமார் 2 ஆயிரம் கடைகளை மூடி விவசாயிகளுக்கு வியாபாரிகள் ஆதரவு தெரிவித்து, போராட்டத்தில் குதித்து உள்ளனர்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகத் தஞ்சை, மதுரை, புதுக்கோட்டையில் பல்வேறு பகுதிகளில் கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால், அந்த பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டத்தால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மாநில அரசு மேற்கொண்டுள்ளது. அனைத்து பேருந்துகள், ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

இதன் காரணமாக, தமிழகத்தில் பாதுகாப்பு பணியில் ஒரு லட்சம் போலீசார் ஈடுபடுத்தபடுவார்கள் என்றும், சென்னையில் மட்டும் சுமார் 10 ஆயிரம் போலீசார் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

விவசாயிகள் டெல்லி போராட்டத்துக்கு ஆதரவாக புதுச்சேரி மாநிலத்தில் முழு அடைப்பு நடந்து வருகிறது. புதுச்சேரியில் விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டத்தில் அம்மாநில முதல்வர் நாராயணசாமி கலந்து கொண்டார். போராட்டம் காரணமாக, புதுச்சேரியில் ஆட்டோக்கள், பேருந்துகள் இயங்கவில்லை.  

புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள், டெம்போக்கள் ஓடவில்லை. டீக்கடைகள், ஓட்டல்கள் மூடப்பட்டுள்ள நிலையில் போலீசார் 
தீவர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டத்தையொட்டி தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

குறிப்பாக, வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் விவசாயிகள் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதனால் பெரும்பாலான மாநிலங்களின் இயல்பு வாழ்க்கை பெரும்பாலும் பாதிக்கப்பட்டு உள்ளது.