பப்ஜி மதன் வழக்கில் 1,600 பக்கங்கள் கொண்ட  குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது சைபர் கிரைம் போலீஸ், அவரது மனைவி கிருத்திகாவை 2 வது குற்றவாளியாக சேர்த்துள்ளனர்.

தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை, சட்ட விரோதமாகப் பதிவிறக்கம் செய்து, “பப்ஜி விளையாட்டில் உள்ள ட்ரிக்ஸ்” பற்றி பேசுவதற்காகக் கடந்த 2019 ஆம் ஆண்டு மதன் என்ற இளைஞர், யூடியூப் சேனல் ஒன்றை உருவாக்கினார். தமிழ்நாட்டில் கடந்த 2 ஆண்டுகளாகக் கல்வி நிலையங்கள் மூடப்பட்டு உள்ளதால், சமூக வலைத்தளங்களில் சிறுவர், சிறுமிகள் அதிகம் மூழ்கி இருந்தனர். இப்படியான சிறுவர் சிறுமிகளைக் குறிவைத்து ஆன்லைன் கேமான பப்ஜி, ப்ரீ ஃபையர் உள்ளிட்ட விளையாட்டில் நேரத்தைச் செலவிட்டு வந்தவர்களை, மதன் தன் பக்கம் அதிகமான கவனத்தை ஈர்த்தார்.

 ஆன்லைனில் விளையாடும் போது, தன்னுடன் விளையாடும் சக போட்டியாளர்களை மிகவும் தரக்குறைவான வார்த்தைகளில் திட்டுவதை வாடிக்கையாகவே கொண்டிருந்த யூடியூபர் மதன், ஆன்லைனில் விளையாடும் பெண்களிடம், ஆபாசமாக பேசியதாகவும் தெரிகிறது.

பப்ஜி மதன் மீது கிட்டதட்ட 120 புகார்கள் ஆன்லைன் மூலமாகப் பதிவு செய்யப்பட்ட நிலையில், தர்மபுரியில் பதுங்கியிருந்த பப்ஜி மதனை சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். 

இது தொடர்பாக வழக்குப் பதியப்பட்ட நிலையில், பப்ஜி மதன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து, தன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி, மதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், “எனது செயல்பாடுகளால் மாநிலத்தின் சட்டம் ஒழுங்குக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், பப்ஜி விளையாடுவது ஒரு போதும் பொது அமைதிக்குக் குந்தகம் ஏற்படுத்தும் செயல் எனக் கூற முடியாது என்றும்” கூறியிருந்தார்.

இந்த மனு மீது சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பதில் அளிக்க வேண்டும் என்றும், நீதிபதி கூறியிருந்தார். எனினும், இந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், பப்ஜி விளையாட்டை பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்ட புகாரில் கைதான மதன் மீது, “1600 பக்க குற்றப்பத்திரிகையை” நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்துள்ளனர். 

ஆபாசமாக பேசி வீடியோ பதிவேற்றம் செய்த வழக்கில், குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள மதன் மற்றும் அவரது மனைவி கிருத்திகா மீதான குற்றப் பத்திரிகையை, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார் தற்போது தாக்கல் செய்துள்ளனர்.  

அத்துடன், “32 சாட்சியங்கள் தற்போது விசாரிக்கப்பட்டு இருப்பதாகவும், அவர்களிடம் இருந்து எழுத்துப் பூர்வமாக புகார்கள் பெறப்பட்டு உள்ளதாகவும்” இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில் போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஆனால், பப்ஜி மதன் மீது 150 க்கும் மேற்பட்டோர் ஆன்லைன் மூலமாக புகார் அளித்திருப்பதாகவும், இதில் 32 பேர் மட்டும் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்திருப்பதாகவும் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. 

மேலும், “கொரோனா காலத்தில் உதவி செய்வதாக 2,848 பேரிடம் 2.89 கோடி ரூபாய் பண மோசடி செய்து உள்ளதாகவும்” காவல் துறை தரப்பில் பப்ஜி மதன் மீது குற்றம்சாட்டப்பட்டு இருக்கிறது. 

குறிப்பாக, “மதனின் மனைவியை 2 வது குற்றவாளியாக சேர்த்துள்ள போலீசார், கணவன் - மனைவியான இருவரின் மீதும் மோசடி பிரிவின் கீழ் வழக்குப் பதிவும் செய்துள்ளனர். 

முக்கியமாக, “பப்ஜி மதனுக்கு எதிராக 1600 பக்கங்கள் கொண்ட இந்தக் குற்றப்பத்திரிகையை, சுமார் 45 நாட்களில் 30 சாட்சிகளின் வாக்குமூலத்தின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் தயாரித்திருப்பதாகவும்” தகவல்கள் வெளியாக உள்ளன.

அதே நேரத்தில், “பப்ஜி மதனின் ஆடியோவை ஆய்வு செய்ய ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ள சைபர் கிரைம் போலீஸ், ஆடியோவை ஆய்வு செய்த பிறகு இந்த வழக்கில் இன்னும் கூடுதலான குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்ய முடிவு செய்திருப்பதாகவும்” தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனால், பப்ஜி மதனுக்கு எதிராக 1600 பக்கங்கள் கொண்ட இந்தக் குற்றப்பத்திரிகையின் எண்ணிக்கையானது, இன்னும் உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.