அயோத்தியில் ராமர் ஆலயம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா கோலாகலமாக தொடங்கியது. வேத மந்திரங்கள் முழங்க ராமர் கோயில் பூமி பூஜை விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. பூமி பூஜையை தொடர்ந்து பிரதமர் மோடி, ராமர் கோயில் கட்டுமான திட்டத்துக்கான அடிக்கல் நாட்டினார். 

இந்தியாவில் வரலாற்று நிகழ்வாக பார்க்கப்படும், அயோத்தியில் ராமர் ஆலயம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று வெகு சிறப்பாக நடந்துகொண்டு இருக்கிறது. ராமர் பிறந்த மண் என்று கூறப்படும் அயோத்தியில் கோயில் கட்டும் பணியாது, நீண்ட கால சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்ற பார்க்கப்படுவதால், அன்று அயோத்தியே நகரமே திருவிழாவைப் போல் கொண்டாடி வருகிறது.

இதன் காரணமாக, எங்குப் பார்த்தாலும் வண்ண விளக்குகள், மலர் தோரணங்கள் என்று விழாக்கோலம் பூண்டுள்ளது அயோத்தி நகரம். 

இந்தியாவின் புகழ்பெற்ற ஆலயங்கள் அமைந்துள்ள வாரணாசி, டெல்லி, ஹரித்துவார் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து ஏராளமான பண்டிதர்கள், வேத விற்பன்னர்கள் அயோத்திக்கு வரவழைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த சிறப்பு பூஜையில் கடவுள் சிவன், பார்வதி, விநாயகர் உள்ளிட்ட தெய்வங்களை அழைக்கும் விதமாக பல்வேறு கட்ட யாகங்கள் அதிகாலை முதலே தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்த விழாவில் கலந்துகொள்வற்காக, டெல்லி விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 9.30 மணிக்கு புறப்பட்டு, காலை 10.35 மணிக்கு லக்னோ விமான நிலையத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வந்தடைந்தார். லக்னோ விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி அயோத்தி வந்தடைந்தார்.

அயோத்தி சாகேத் மகா வித்யாலயாவில் அமைக்கப்பட்டு உள்ள ஹெலிகாப்டர் தளத்திற்கு மிகச் சரியாக 11.30 மணிக்கு பிரதமர் மோடி வந்தடைந்தார்.

அங்கிருந்து சுமார் 11.40 மணி அளவில், அனுமான் கரி கோயிலுக்கு சென்று பிரதமர் மோடி வழிபடு நடத்தினார். அயோத்தி ஹனுமன் கர்கி கோயிலில் பிரதமர் மோடி தரிசனம் செய்து, அந்த கோயிலில் வலம் வந்தார். இதனைத் தொடர்ந்து 11.55 மணிக்கு அங்கிருந்து புறப்பட்ட பிரதமர் மோடி, ராம ஜென்ம பூமிக்கு சரியாக நண்பகல் 12 மணிக்கு வருகை தந்தார்.

அங்கு, “ராம் லல்லா விராஜ்மன்” என்று அழைக்கப்படும் குழந்தை ராமரை வழிபட்டு, பிரதமர் நரேந்திர மோடி பூஜை செய்தார். அதன் பிறகு, அந்த வளாகத்தில் பாரிஜாத மரக்கன்றை பிரதமர் நட்டு வைத்தார். அதன் தொடர்ச்சியாக, நடைபெற்ற பூமி பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்றார்.  

வேத மந்திரங்கள் முழங்க ராமர் கோயில் பூமி பூஜை விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. பூமி பூஜையை தொடர்ந்து பிரதமர் மோடி, ராமர் கோயில் கட்டுமான திட்டத்துக்கான அடிக்கல் நாட்டினார். ராமர் கோயில் பூமி பூஜையில் பங்கேற்கும் பிரதமர் நரேந்திர மோடி, சுமார் 3 மணி நேரம் அங்கேயே இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

விழா மேடையில் பிரதமர் மோடி உள்ளிட்ட 5 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்தி பென் பட்டேல், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ராமர் கோயில் கட்டுவதற்கான அறக்கட்டளையின் தலைவர் மகந்த் கோபால் தாஸ் ஆகியோருக்கு மட்டுமே இந்த விழா மேடையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக சுமார் 200 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் விழா ஏற்பாட்டினை செய்பவர்கள் என்றும், சிறப்பு பூஜை நடத்துபவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

அயோத்தியில், ராமர் கோயிலுக்கான அடிக்கல் நாட்டும் விழா நடைபெறுவதையொட்டி, அயோத்தி நகரம் முழுவதும் தற்போது காவல் துறையினரின் முழு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டு உள்ளது. இதனால், கடுமையான சோதனைக்கு பின்னரே மக்கள் அந்த பகுதிகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

மிகவும் பிரமாண்டமான முறையில் நடைபெற்று வரும் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவானது, உலகம் முழுவதும் உள்ள ராம பக்தர்கள் இடையே மகிழ்ச்சியையும், ஆனந்தத்தையும் ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.