“நடிகர் ஷாருக்கான் மகனை வழக்கில் சிக்க வைத்த அதிகாரி மீது நடவடிக்கை!” மத்திய அரசு அதிரடி உத்தரவு..
“நடிகர் ஷாருக்கான் மகனை வழக்கில் சிக்க வைத்த போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கபடி” நிதியமைச்சகத்துக்கு, மத்திய அரசு அதிரடியாக உத்தரவு பிறப்பித்து உள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், மும்பையில் இருந்து கோவா புறப்பட்டுச் சென்ற சொகுசு கப்பலில் போதை பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட 16 பேர் கைது செய்யப்பட்டனர்.
அதாவது, சொகுசு கப்பல்களை வைத்திருக்கும் சில நிறுவனங்கள், அடிக்கடி பணக்காரர்களுக்காக பல்வேறு வகையான கடல் பயண சுற்றுலாக்களை நடத்துவது வாடிக்கையாக நடந்து வரும்.
அதிலும், சில தனியார் அமைப்புகளும், சொகுசு கப்பல்களை வாடகைக்கு பெற்று கடல் சுற்றுலாக்களை நடத்துவதுண்டு.
அந்த வகையில் தான், மும்பையில் இருந்து கோவாவுக்கு 3 நாள் சுற்றுலாவாக கார்டிலியா என்ற சொகுசு கப்பலில் பயண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதற்காக, 6 பேர் இந்த சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்தனர். இணைய தளம் வாயிலாகச் சுற்றுலாப் பயண நுழைவுச்சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. அப்போது, இந்த சொகுசு கப்பலில் போதை பாரட்டி நடப்பதாகப் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இந்த தகவலின்படி, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மும்பை மண்டல இயக்குனர் சமீர் வான்கடே தலைமையிலான அதிகாரிகள், மும்பையிலிருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் சாதாரண பயணிகள் போன்று டிக்கெட் எடுத்து பயணம் செய்தனர்.
அதன்படி, மும்பையில் இருந்து கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி புறப்பட்டு அந்த கப்பல், அரபிக் கடலில் 2 இரவுகள் கழித்துவிட்டு, கோவா வழியாக மீண்டும் அக்டோபர் 4 ஆம் தேதி காலை மும்பை திரும்பும் வகையில், அந்தச் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நாடு முழுவதிலும் இருந்து 800 க்கும் மேற்பட்டவர்கள் அந்த கப்பலில் சுற்றுலாச் செல்ல முன்பதிவு செய்திருந்தனர்.
இந்த கப்பல் சுற்றுலாவில் பல கோடீஸ்வரர்கள் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், திரையுலகப் பிரபலங்கள், மாடலிங் உலகைச் சேர்ந்தவர்கள் என்று பல்வேறு தரப்பினரும் பயணம் செய்தனர். இந்த சூழலில் தான், போதைப் பொருள் தடுப்பு பிரிவைச் சேர்ந்த 20 அதிகாரிகள், சுற்றுலாப் பயணிகள் போல மாறுவேடத்தில் அந்தக் கப்பலில் சென்றனர்.
அவர்கள் கப்பலில் உள்ள பயணிகளைக் கண்காணித்த படி இருந்த நிலையில், நேற்றிரவு கப்பலில் நடன விருந்து தொடங்கியது.
அப்போது, அவர்களும் பயணிகளும் உற்சாகமாக நடனமாடினார்கள். அந்த சமயத்தில் போதைப் பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதை மாறுவேடத்தில் இருந்த காவல் துறையினர் கண்டுபிடித்தனர்.
மேலும, இதனை யார் விநியோகம் செய்வது என்பதை மாறுவேடத்தில் இருந்தபடியே ஆய்வு செய்தனர். சுமார் 7 மணி நேரம் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் அந்த கொகுசு கப்பல் முழுவதையும் ஒரு இடம் கூட விடாமல் சோதித்தனர். அப்போது 8 இளைஞர்கள் போதைப் பொருட்களை தொழிலதிபர்களின் மகன்கள், மகள்களுக்குக் கொடுப்பது தெரிய வந்தது.
இதையடுத்து, அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தியதில் இந்த விருந்தில் போதைப்பொருள் பயன்படுத்தியவர்கள், போதைப்பொருள் வைத்திருந்தவர்கள் என மொத்தமாகப் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யான் கான் உள்பட 16 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
ஷாருக்கான் மகன் ஆர்யன் கானை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அப்போது கைது செய்தனர்.
இதனையடுத்து, “நடிகர் ஷாருக்கான் குறிவைக்கப்படுகிறாரா?” என்ற கேள்வியும் எழுந்தது. பின்னர், ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் ஜாமீனில் வெளியே வந்தார்.
குறிப்பாக, “ஆர்யன்கான் குற்றமற்றவர்” என்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த விசாரணையில் நடந்த தவறுகளை போதைப்பொருள் தடுப்பு பிரிவு தலைவர் எஸ்.என். பிரதான் ஒப்புக்கொண்டார்.
சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அந்த அதிகாரி உறுதி அளித்திருந்தார்.
மேலும், “ஆர்யன் கான் பிடிபட்டதும், அவரை விடுவிக்க சமீர் வான்கடே 25 கோடி ரூபாய் பேரம் பேசியதாக குற்றச்சாட்டு” எழுந்தது.
அவர், “ஆர்யன் கானை வேண்டும் என்றே போதைப் பொருள் வழக்கில் சிக்க வைத்ததாக கூறப்படுகிறது என்றும், இதனால் தரக்குறைவான விசாரணைக்காக சமீர் வான்கடே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும், மத்திய நிதியமைச்சகத்துக்கு மத்திய அரசு தற்போது அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது.
குறிப்பாக, “சமீர் வான்கடே ஐஆர்எஸ் அதிகாரி என்பதால், அவர் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் நிதியமைச்சகத்துக்கு இருப்பதாகவே” தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
முக்கியமாக, “சமீர் வான்கடே போலி சாதி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தார்” என்ற குற்றசாட்டும் அவர் மீது உள்ளது.
“இந்த குற்றச்சாட்டுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும், மத்திய அரசின் வட்டாரங்கள் கூறுகின்றன.
இதனிடையே, சமீர் வான்கடே மராத்தி நடிகை கிராந்தி ரெட்கரின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.