பெண்ணும் பெண்ணும் காதலித்து கல்யாணம் செய்த நிகழ்வு இரு பெண்களின் பெற்றோர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது பெண்களின் உலகம் என்பதற்கு, மேலும் வலுசேர்க்கிறது இந்த ஒரு பாலின கல்யாணம். 

காலம் மாறிப்போச்சு என்பதற்கு, இரு பாலின திருமண முறையிலும் பொருந்திப் போகிற காலகட்டம் இது. இது, வளர்ச்சியா? அழிவின் தொடக்கமாக என்பதை, அறிவியலாளர்களும், அறிஞர் பெருமக்களும் தான் பட்டிமன்றம் நடத்தித் தீர்ப்புக் கூற வேண்டும். அந்த அளவுக்கு நாகரிகம் என்ற பெயரில், புதுமையான விசயங்கள் நிறையவே உட்புகுந்துகொண்டு, பண்பாட்டுப் பாரம்பரியத்தை மாற்றம் காண செய்து வருகிறது. அதற்கு, ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற இந்த காதல் கல்யாணமும் ஒரு உதாரணம்.

ஆந்திர மாநிலம் கர்னூலை சேர்ந்த காத்தூன் என்பவரின் மகளான 20 வயதான சிம்ரன் என்ற இளம் பெண்ணும், அந்த பகுதியில் உள்ள பார்வதி அம்மா என்பவரின் மகளான 21 வயதான புஷ்ப லதா என்ற இளம் பெண்ணும், சிறு வயது முதலே நெருங்கிய தோழிகளாகப் பழகி வந்தனர். 

இளம் பெண் புஷ்ப லதா தனது படிப்பை பாதியிலேயே நிறுத்திக்கொண்ட நிலையில், வீட்டில் தனியாக இருந்து வந்த நிலையில், அவருடைய நெருங்கிய தோழியான இளம் பெண் சிம்ரன் மட்டும் அந்த பகுதியில் உள்ள கல்லூரியில் முதலமாண்டு படித்து வந்தார்.

இரு பெண்களும் சிறுவயது தோழிகள் என்பதால், எப்போதும் எங்கு சென்றாலும் ஒன்றாக சென்று சுற்றி வருவது வழக்கம். 

இப்படிப்பட்ட சூழ்நிலையில், தோழிகள் இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு தங்களது வீட்டில் இருந்து மாயமானார்கள். அவர்கள் இருவரையும் அவரது பெற்றோர் அந்த பகுதி முழுவதும் தேடிப் பார்த்து உள்ளனர். எங்குத் தேடியும் அவர்கள் இருவரும் கிடைக்காத நிலையில், அவர்களது பெற்றோர்கள் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், மாயமான இரு பெண்களையும் தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில், இளம் பெண் புஷ்பா, தனது தோழி சிம்ரனின் அம்மா கத்தூனின் செல்போனுக்கு, வாட்ஸ்ஆப்பில் ஒரு செய்தி ஒன்றை அனுப்பி இருந்தார்.

அதில், “நாங்கள் இருவரும் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தோழிகளாக இருந்து வந்த நிலையில், எங்களுக்குள் இருந்த நட்பு, காதலாக மாறி உள்ளது என்றும், எங்களுக்குத் தனித் தனியாகத் திருமணம் ஆனால், நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பிரிந்து எங்களது கணவன் வீடுகளுக்கு செல்ல நேரிடும் என்பதால், பயந்து போன நாங்கள் இருவரும் ஒன்றாக அமர்ந்து பேசி நல்ல முடிவு எடுத்தோம் என்றும், அதன் படி, நாங்கள் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொள்ள முடிவு எடுத்துள்ளதாகவும்” கூறியுள்ளார்.

“இதற்காகவே, இது வரை பெண்ணாக இருந்த புஷ்பா, தனது உடை மற்றும் சிகை அலங்காரத்தை ஆண்களைப் போல மாற்றிக்கொண்டதோடு, தனது கல்லூரி காதலியான இளம் பெண் சிம்ரனை திருமணம் செய்துகொண்டதாகவும்” அதில், தெரிவித்து உள்ளார்.

குறிப்பாக, “இனிமேல் எங்களை நீங்கள் தேட வேண்டாம் என்றும், எங்களை நீங்கள் நிம்மதியாக வாழ விடுங்கள்” என்றும், அந்த பெண் செய்தி அனுப்பி இருந்தார்.

மேலும், புதிய வாழ்க்கையைத் தொடங்கும் ஆர்வத்தில், இளம் பெண் புஷ்பா, தனது வீட்டில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது.

“நாட்டுல அவன் அவன் கல்யாணத்துக்கு பொண்ணு கிடைக்காமல் அல்லாடுறான். இங்க என்னடானா, பொண்ணுங்களை பொண்ணுங்களே கல்யாணம் பண்ணிகிட்டு இருக்காங்க. இந்த நிலைமை இப்படியே போச்சுனா, ஆண்கள் கால முழுவதும் கண்ணி கலையாமல் இருக்க வேண்டியது வரும் என, ஆண் வர்க்கம் கலங்கிப் போய் உள்ளதை, பெண் வர்க்கம் உணர வேண்டும் என்கிற கூக்குரல்களும்” சமூக வலைத்தளங்களில் எழுந்துள்ளன.