கடந்த ஜூன் மாதம் கிழக்கு லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கில் சீன துருப்புக்களுடன் ஏற்பட்ட மோதலில், ஒரு காலாட்படை பட்டாலியன் கட்டளை அதிகாரி உட்பட 20 இந்திய வீரர்கள் (Indian soldiers) கொல்லப்பட்டனர். அந்த பகுதியில் கடந்த 40 நாட்களாக இரு நாடுகளின் வீரர்களுக்கு இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது. 

இதுபற்றி வெளிவந்த ஆரம்ப அறிக்கையில், ஒரு அதிகாரி மற்றும் இரண்டு வீரர்கள் கொல்லப்பட்டதாக இந்திய இராணுவம் அறிவித்தது. ஆனால் அன்று மாலையில், இராணுவத்தின் தரப்பில் வெளியிடப்பட்ட செய்தியில், உயரமான நிலப்பரப்பில் பூஜ்ஜிய வெப்பநிலையில் (Zero Temperatures)நடந்த மோதலில் 17 இந்திய வீரர்கள் கடுமையாக காயமடைந்து நாட்டிற்காக உயிர் தியாகம் செய்துள்ளனர் எனக் கூறப்பட்டது.
மேலும் இருநாட்டு வீரர்களும் ஒருவருக்கொருவர் கற்கள், கம்பி மற்றும் ஆணி பதித்த ஆயுதங்களால் சுமார் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக தாக்கிக் கொண்டனர் என கூறப்பட்டது. உயிர்சேதம் ஏற்பட்டதை தொடர்ந்து, விவகாரம் விஷ்வரூபம் எடுத்தது.

இதையடுத்து, இந்தியா - சீனா இடையே ராணுவ மட்டத்திலும், தூதரக மட்டத்திலும் பல்வேறு சுற்று பேச்சுவார்த்தை நடைபெற தொடங்கியது. எனினும், குறிப்பிட்ட அளவு தூரம் மட்டுமே சீன படைகள் பின்வாங்கியுள்ளன என்று சொல்லப்பட்டது. இதனால், எல்லையில் தொடர்ந்து பதற்றம் அதிகரித்த வண்ணமே இருந்தது.

சொல்லப்போனால் 1962- ஆம் ஆண்டுக்கு பிறகு லடாக் எல்லையில் மிகவும் தீவிரமான சூழல் நிலவுகிறது  என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். இது குறித்து ஜெய்சங்கர் கூறியதாவது:- “சமீபத்தில் நடந்த உயிரிழப்புகள் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாதவையாகும். இதன் காரணமாக இரு நாட்டு எல்லையில் உள்ள படைகளின் எண்ணிக்கையும் முன்னெப்போதும் இல்லா அளவில் உள்ளது. இருநாட்டு ராணுவ மற்றும், ராஜதந்திர பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு ஆக்கிரமிப்புகள் சில இடங்களில் மட்டுமே திரும்பப்பெறப்பட்டுள்ளன..இரு அண்டை நாடுகளுக்கிடையிலான உறவுக்கு எல்லைப் பகுதிகளில் அமைதி என்பது இன்றியமையாததது என்பதை இந்தியா சீனாவுக்கு தெளிவாக தெரிவித்துள்ளது” இவ்வாறு அவர் கூறினார். 

இதையடுத்து எல்லையில் போர்ப்பதற்றம் அதிகரித்தது. இரு  தரப்பும் படைகளை குவிக்கத் தொடங்கின. தொடர் பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு படைகளை விலக்கிக்கொள்ள ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்பின்னர் எல்லையில் அமைதி திரும்பத் தொடங்கியது.  தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
 
இந்நிலையில், ஒப்பந்தத்தை மீறி லடாக்கில் தற்போது சீன ராணுவம் மீண்டும் அத்துமீறலில் ஈடுபட்டதாக இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாதம் 29ம் தேதி நள்ளிரவில் சீன ராணுவம் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், எல்லையில் நிலைமையை மாற்ற ஆத்திரமூட்டும் செயல்களை மேற்கொண்டதாகவும் இந்திய ராணுவ செய்தித்தொடர்பாளர் கர்னல் அமான் ஆனந்த் தெரிவித்தார்.

இந்திய வீரர்கள் பாங்காங் சோ ஏரியின் தெற்கு கரையில் சீன ராணுவத்தின் செயல்பாட்டை முன்கூட்டியே நிறுத்தி, நமது நிலைகளை வலுப்படுத்தவும், சீன படைகளின் நோக்கங்களை முறியடிக்கவும் நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் கர்னல் அமான் ஆனந்த் கூறினார்.

தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பாக ராணுவ தளபதிகள் அளவிலான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

ஏற்கெனவே காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜ்வாலா, தான் சார்ந்த காங்கிரஸ் கட்சி சார்பில் கூறுகையில் “மத்திய அரசின் தோல்வியின் காரணமாக இதயத்தை நொறுக்கும் ஒரு நாளை நாடு காண நேர்ந்தது. ஆனால் பிரதமர் நரேந்திர மோடியும் அவரது அரசும் தொடர்ந்து மவுனம் காத்து வருகிறது. சீனா இந்தியாவின் நிலத்தைக் கைப்பற்றிய இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். ஆனால் பிரதமர் மோடியும், ராணுவ மந்திரியும் மவுனமாக இருப்பதை தவிர வேறு என்ன செய்தார்கள்? ராகுல் காந்தி மற்றும் பிற எதிர்க்கட்சி தலைவர்கள் லடாக் எல்லை விவகாரம் குறித்து தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வந்தனர். ஆனால் தோல்வியுற்ற மற்றும் கவனக்குறைவான மத்திய அரசு எதிர்க்கட்சிகளின் அரசாங்கங்களை கவிழ்க்கவும் உண்மையை நாட்டிலிருந்து மறைக்கவும் மும்முரம் காட்டியது. மேலும் “இப்போது நாட்டையும், நாட்டு மக்களையும் நம்பிக்கையில் கொண்டு செல்வது பிரதமர் மோடி மற்றும் அவரது அரசின் பொறுப்பாகும்“ என்று மத்திய அரசின் மீது குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.