கேரளாவில் பள்ளி மாணவர்களின் ஆன்லைன் வகுப்பில் மர்ம நபர்கள் சிலர் ஆபாச வீடியோக்கள் பகிர்ந்ததால் ஆசிரியர்களும், மாணவர்களும் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

கொரோனா என்னும் பெருந் தொற்று காரணமாக, இந்தியா முழுவதும் பொது முடக்கம் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால், பள்ளி மற்றும் கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டு உள்ளன.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், மாணவர்களின் எதிர்கால நலன் கருதியும், பாடங்கள் தடைப்படக் கூடாது என்பதற்காகவும், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் ஆசிரியர்கள் பாடங்களை நடத்தி வருகின்றனர். 

ஆனால், இப்படி ஆன்லைன் வகுப்பில் பாடம் நடத்துவது புரியவில்லை என்றும், ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ள செல்போன் இல்லை என்றும், பெற்றோர் ஏழ்மையின் காரணமாக செல்போன் வாங்கித் தரவில்லை என்றும், அடுத்தடுத்து சில மாணவ செல்வங்கள் தற்கொலை செய்துகொண்டனர். இதனால், நாடு முழுவதும் கடும் அதிர்வலைகள் ஏற்பட்டன. 

இதனையடுத்து, நாடு முழுவதும் ஆன்லைன் வகுப்புகளை ரத்து செய்ய வேண்டும் என்று, எதிர் கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுக்கத் தொடங்கின. எனினும், நாடு முழுவதும் ஆன்லைன் வகுப்பில் தொடர்ந்து நடந்த வண்ணம் தான் உள்ளன.

இந்நிலையில், ஆன்லைன் வகுப்பில் தற்போது புதிய பிரச்சனை எழுந்துள்ளது, பலரும் தலைவலியை ஏற்படுத்தும் விதமாக அமைந்து உள்ளது.

அதாவது, ஆசிரியர்கள் பாடம் நடத்தக் கூடிய வீடியோ கான்பரன்சிங் செயலிகளான 'ஜூம்' மற்றும் 'வாட்ஸ் ஆப்' போன்ற டிஜிட்டல் தளங்களுக்குள் சிலர்  

ஊடுருவி நுழைந்து ஆபாச வீடியோக்கள் மற்றும் படங்களை அனுப்பி வைத்து ஆசிரியர்களையும், மாணவர்களையும் திக்குமுக்காட வைக்கின்றனர்.

அதன்படி, கேரளாவில் நேற்று மட்டும் 3 இடங்களில் இது போன்ற ஆபாச அத்து மீறல்கள் சம்பவங்கள் நடந்துள்ளது ஆசிரியர்கள், மாணவர்கள் மட்டும் இல்லாது, பெற்றோர்களையும் முகம் சுழிக்க வைத்து உள்ளன.

குறிப்பாக, கேரளாவில் பரப்பனாங்காடி பள்ளியில் ஆன்லைன் வகுப்பு நடைபெற்று உள்ளது. அப்போது, ஆசிரியர் மற்றும் மாணவர்கள் தங்களது செல்போன் மூலமாக வாட்ஸ்ஆப் குழுவில் இணைந்து, அதில் பாடம் நடத்திக்கொண்டு இருந்தனர். அப்போது, மாணவர்கள் அனைவரும் படத்தை கவனித்துக்கொண்டு இருந்துள்ளனர்.

இந்நிலையில், திடீரென்று அந்த வாட்ஸ்ஆப் குழுவில் ஊடுருவி நுழைந்த மர்ம நபர்கள், தொடர்ச்சியாக அடுத்தடுத்து ஆபாச வீடியோக்களை பதிவிட்டுக் கொண்டே வந்தனர். அத்துடன், மாணவர் ஒருவர் அப்போது ஸ்கிரீன் ரெக்கார்டிங் செய்திருந்ததால், குழுவுக்குள் வீடியோக்கள் பகிரப்பட்டு உள்ளது. இந்த வீடியோக்கள் அனைவருக்கும் பரவி உள்ளன.

இதனைப் பார்த்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். வீட்டில் இருந்து பாடத்தைக் கவனித்த வந்த மாணவர்கள் சிலர், 

இது குறித்து தங்களது பெற்றோர்களிடம் கூறி உள்ளனர். இதனால், பெற்றோர்களும் இந்த வீடியோக்களைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்த நிலையில், பிள்ளைகளின் முன்பு முகம் சூழிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

மேலும், இது தொடர்பாகச் சம்மந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்கள், குழந்தைகள் நல ஆணையத்தில் புகார் அளித்தனர். அத்துடன், இது தொடர்பாகக் காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த சம்பவம் குறித்து கேரளாவில் செய்தியாளர்களிடம் பேசிய காவல் துறை உயர் அதிகாரி ஒருவர், “இது போன்ற டிஜிட்டல் செயலிகள் ஒவ்வொன்றையும் கண்காணிப்பது சிரமம் என்றும், அது சாத்தியம் இல்லாதது விசயம் என்பதால், ஆசிரியர்களும், மாணவர்களும், பெற்றோர்களும் தான் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார். 

இதனிடையே, பள்ளி மாணவர்களின் ஆன்லைன் வகுப்பில் மர்ம நபர்கள் சிலர் ஆபாச வீடியோக்கள் பகிர்ந்த சம்பவம், கேரளாவில் 3 இடங்களில் நிகழ்ந்து உள்ளது. இதனால், ஆசிரியர்களும், மாணவர்களும் கடும் அதிர்ச்சியடைந்தனர்.