பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நுரையீரலில் புற்றுநோய் தாக்கியிருப்பது கடந்த வாரம் கண்டறியப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.

இதற்கான சிகிச்சைக்காக அவர், மும்பை கோகிலாபென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.  தற்போது அவருக்கு நுரையீரல் புற்றுநோய் மூன்றாம் கட்ட நிலையில் உள்ளதால், மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளதாக, சஞ்சய் தத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

தனது வீட்டிலிருந்து புறப்படும் முன், எனக்காக பிரார்த்தியுங்கள் என கூறினார். முகக்கவசத்துடன் வீட்டிலிருந்து வெளியேறும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன், சஞ்சய் தத்துக்குச் சமீபத்தில் மூச்சுத்திணறலும் லேசான நெஞ்சு வலியும் ஏற்பட்டது. இதனால் உடனடியாக மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று இல்லை என்பது உறுதியானது.

``நான் நன்றாக இருக்கிறேன். மருத்துவர்களின் உதவியால் ஓரிரு நாள்களில் வீட்டுக்குத் திரும்பிவிடுவேன்" என்று தகவல் தெரிவித்திருந்தார் அவர். அதேபோல, அடுத்தடுத்த நாள்களில் பிறகு மருத்துவமனையிலிருந்து வீட்டுக்குத் திரும்பினார். 

இதையடுத்துதான், நுரையீரல் புற்றுநோயால் சஞ்சய் தத் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுபற்றி, திரைப்பட நிபுணர் கோமல் நடா தன்னுடைய ட்விட்டரில் பக்கத்தில்,  ``நுரையீரல் புற்றுநோயால் சஞ்சய் தத் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் குணமாக அனைவரும் பிரார்த்தனை செய்வோம்" என்று கூறியிருந்தார்.

எனினும் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதாக வெளியான செய்தி குறித்து சஞ்சய் தத் எதுவும் விளக்கம் அளிக்கவில்லை. ஆனாலும் சஞ்சய் தத் உடல்நிலை குறித்து வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று அவருடைய மனைவி மான்யதா கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில் சஞ்சய் தத்தின் உடல்நிலை குறித்து மான்யதா கூறியதாவது:

``தன் வாழ்க்கையில் ஏராளமான ஏற்ற இறக்கங்களை சஞ்சய் தத் சந்தித்துள்ளார். உங்கள் அன்பினாலும் ஆதரவினாலும் அவர் அனைத்தையும் கடந்துள்ளார். இதற்காக நாங்கள் மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளோம். இப்போது எங்களுக்கு இன்னொரு சவால் ஏற்பட்டுள்ளது. உங்களுடைய அன்பு மற்றும் ஆதரவினால் இதையும் கடந்து செல்வோம்.

மும்பையில் ஆரம்பக்கட்ட சிகிச்சையை மேற்கொள்வோம். கரோனா அச்சுறுத்தல் விலகிய பிறகு வெளிநாட்டுக்குச் சென்று சிகிச்சை மேற்கொள்வது பற்றி பரிசீலிப்போம். தற்போது, சிறந்த மருத்துவர்களின் கைப்பிடியில் சஞ்சய் தத் உள்ளார். 

அவருடைய உடல்நலக்குறைவு பற்றி எதுவும் யூகிக்க வேண்டாம். அவருடைய உடல்நிலை குறித்து தொடர்ந்து தகவல் அளிப்போம்"என்றார்.

புற்றுநோய் பாதிப்பு குறித்த செய்தியை அறிந்தவுடன் பல முன்னணி நடிகர்களும் சஞ்சய் தத்தைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசி நலம் விசாரித்திருப்பதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து, தான் சினிமாவில் இருந்து ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்திருக்கிறார். சஞ்சய் தத் நடிப்பில் சதக் 2 படம் விரைவில் வெளியாகவுள்ளது. மேலும், இவர் கே.ஜி.எஃப் 2 படத்தில் நடிக்கவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல சம்ஷேரா, பூஜ்: தி பிரைட் ஆஃப் இந்தியா, பிரித்விராஜ், டோர்பாஸ் போன்ற படங்களிலும் அவர் நடிப்பதாக கூறப்பட்டு வந்தது. சிகிச்சைக்கு பின் அவர் நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட வந்த நிலையில், அவர் முழு ஓய்வை அறிவித்திருப்பது, பலருக்கும் அதிர்ச்சியை தந்துள்ளது.