“இந்தியாவில் கொரோனா 3 ஆம் அலை நவம்பர் மாதத்தில் ஏற்படும்” என்று, இந்திய மருத்துவக் கழகத்தின் முன்னாள் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் கொரோனா 2 ஆம் அலை தொற்று, கடந்த மே மாதம் மீண்டும் புதிய உச்சத்தில் இருந்து வந்த நிலையில், தற்போது படிப்படியாகக் குறைந்து வந்துகொண்டிருக்கிறது.

அத்துடன், “இந்தியாவில் கடந்த முடிந்த ஆகஸ்ட் மாதத்தில் கொரோனா 3 வது அலையைத் தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்றும், அதன் தொடர்ச்சியாக வரும் அக்டோபர் மாதத்தில் அது உச்சத்தில் இருக்கும்” என்றும், ஐஐடி வல்லுநர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு எச்சரிக்கையும் விடுத்திருந்தனர்.

அதன் தொடர்ச்சியாக, “இந்தியாவில் கொரோனா 3 ஆம் அலை அக்டோபர் மாதத்தில் உச்சம் பெறலாம்” என்று, மத்திய அரசின் நிபுணர்கள் குழு பிரதமர் அலுவலகத்தில் கடந்த மாதம் அறிக்கையும் அளித்திருந்தது.

ஆனால் தற்போது, தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக மேலும் ஊரடங்கு நீட்டித்துப் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், 9 ஆம் வகுப்பு முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன.

எனினும், உலகையே ஆட்டி படைத்துக்கொண்டிருக்கும் கொரோனா என்னும் கொடிய வைரஸ் தொற்று நோய், அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளில் தற்போது 3 வது அலையாகப் பரவிக்கொண்டு இருக்கிறது.
 
இந்த நிலையில் தான், இந்தியாவின் கொரோனா பரவல் தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் முன்னாள் தலைவரான மருத்துவர் அவினாஷ் போந்தவே, கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்டு பேசினார். 

அப்போது பேசிய அவர், இந்தியாவில் கொரோனா 3 ஆம் அலை பரவல் குறித்து தனது கருத்துகளை முன் வைத்தார்.

அதன் படி பேசிய அவர், “இந்தியாவில் அக்டோபர், நவம்பர் காலகட்டத்தில் கொரோனா தொற்றின் 3 அலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன” என்று, எச்சரித்தார். 

“ஆகவே, பொது மக்கள் அனைவரும் இந்தாண்டு முழுவதும் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டியது மிக அவசியம் என்றும், மகாராஷ்டிராவில் மட்டும் டெல்டா பிளஸ் ரக தொற்று அதிகளவில் காணப்படுகிறது” என்றும், அவர் குறிப்பிட்டார். 

“இந்தச் சூழலில் பொது மக்கள் முகக் கவசம் அணிவதைக் குறைத்து விட்டனர் என்றும், அலட்சியப் போக்கு மீண்டும் ஆபத்தில் பொது மக்களைத் தள்ளி விடும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன” என்றும், அவர் எச்சரிக்கையாகவே தெரிவித்தார். 

“இதனால், பொது மக்களிடம் விழிப்புணர்வு பரப்புரையை அரசு தொடர்ந்து எடுத்துச் செல்ல வேண்டும் என்றும், இந்தியாவில் கொரோனா 3 ஆம் அலை பாதிப்பு ஏற்படாமல் தடுக்க மத்திய மாநில அரசுகள் தடுப்பூசித் திட்டத்தை இன்னும் தீவிரமாக முன்னெடுக்க வேண்டும்” என்றும், அவர் வலியுறுத்தினார். 

முக்கியமாக, “இது வரை 81 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ள நிலையில், இந்தாண்டுக்குள் அனைவருக்கும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திவிட வேண்டும் என்ற இலக்கை அரசு கொண்டுள்ளது” வரவேற்கத்தக்கது” என்றும், அவர் பேசி உள்ளார்.

இதனால், தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கொரோனா அச்சம் சற்று ஓய்ந்திருந்த நிலையில், அதன் பீதி மீண்டும் பொது மக்களைத் தொற்றிக்கொள்ளும் நிலை உருவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.