23 வயது இந்திய பெண் ஒருவர், புல்வாமாமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதி உடன் தொடர்பில் இருந்தது தற்போது தெரிய வந்துள்ள நிலையில், இதில் அந்த இளம் பெண்ணின் தந்தையும் உடந்தையாக இருந்தது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 
 
இளைஞர்கள் தவறு செய்யும் போது, பெரியவர்கள் அதைக் கண்டித்துத் திருத்துவதும், வீட்டில் பிள்ளைகள் தவறு செய்யும் போது அதனைப் பெற்றோர்கள் கண்டுபிடித்து, திருத்தி நல்வழிப்படுத்துவதும் தான் உலக வழக்கம். அப்படிதான், இந்த சமூகம் முடிந்த அளவுக்கு நேர்மையாகப் பயணப்பட்டுக்கொண்டு இருக்கிறது.

ஆனால், பிள்ளைகள் தவறும் செய்யும் போது, அதனைத் தடுக்கவில்லை என்றால், அந்த குற்றத்தைத் தானும் செய்வதாகத் தான் அர்த்தம் என்ற கோட்பாடு, இந்த விசயத்திற்குப் பொருந்திப் போயிருக்கிறது.

இந்தியாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி புல்வாமாமில் நடைபெற்ற தாக்குதலை இந்திய மக்கள் யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க வாய்ப்பு இல்லை. 

அந்த புல்வாமா தாக்குதலானது, மத்திய ரிசர்வ் போலீஸ் படை அணி வகுப்பின் மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலாகும். இந்த தற்கொலைப்படை தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீசார் 40 பேர் சம்பவ இடத்திலேயே வீர மரணம் அடைந்தனர். இந்தியாவையே அதிர வைத்த இந்த கொடூர தாக்குதல் தொடர்பாகத் தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ. விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்துள்ளது.

குறிப்பாக, 13,500 பக்கங்கள் கொண்டு இந்த குற்றப்பத்திரிகை தாக்கம் செய்யப்பட்டு உள்ளது. இந்த குற்றப்பத்திரிகையில் சுமார் 19 பேர் குற்றம் சாட்டப்பட்டு உள்ளனர். 

முக்கியமாக, இந்த தற்கொலைப் படை தாக்குதலை நடத்திய ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகளுக்கு இந்தியாவைச் சேர்ந்த 23 வயது இளம் பெண் ஒருவர் உதவி செய்து, முக்கிய பங்கு ஆற்றினார் என்றும், அந்த இளம் பெண் அந்த தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்து வந்தார் என்றும், அந்த குற்றப் பத்திரிகையில் என்.ஐ.ஏ. விரிவாகக் கூறியுள்ளது.

மேலும், பாகிஸ்தானில் வெடி குண்டு தயாரித்த முக்கிய குற்றவாளியான முகமது உமர் பாரூக் என்ற தீவிரவாதி, கடந்த மார்ச் மாதம் காஷ்மீரில் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டான் என்றும், இந்த தீவிரவாதியுடன் இன்ஷா ஜான், என்ற 23 வயதான இந்திய பெண் தொடர்பில் இருந்து, அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தார் என்றும், என்.ஐ.ஏ. குறிப்பிட்டுள்ளது.

இவர்கள் இருவரும் தொலைப்பேசி மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக தங்களது தகவல்களைப் பரிமாறி உள்ளனர் என்றும், வாட்ஸ்ஆப் மற்றும் இன்னும் பிற சமூக வலைத்தளங்கள் மூலமாகப் பரிமாறப்பட்ட செய்திகளையும் அதிகாரிகள் தற்போது மீட்டு எடுத்து உள்ளனர் என்றும், அந்த குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தீவிரவாதி முகமது உமர் பாரூக், பல முறை இளம் பெண் இன்ஷாவின் வீட்டிற்கு வந்து சென்று உள்ளான் என்பதையும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இதில் ஆச்சரியமான தகவல் என்ன வென்றால், தீவிரவாதி உடன் தன் மகள் தொடர்பில் இருக்கிறார் என்பதை, இன்ஷாவின் தந்தை தாரிக் பிர்வும் ஏற்கனவே அறிந்து வைத்திருந்து உள்ளார். ஆனால், இதற்காகத் தனது மகளைக் கண்டிக்காத அவர், உமர் பாரூக் மற்றும் அவனது 2 கூட்டாளிகளின் வந்து செல்வதற்கும் இன்ஷாவின் தந்தை தாரிக் பிர் உதவி செய்துள்ளார் என்றும், என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், அந்த இளம் பெண் விட்டில் அதிரடியாகச் சோதனை செய்த போது, தீவிரவாதி பாரூக் - இளம் பெண் இன்ஷா ஜான் ஆகிய இருவரும் ஒன்றாகச் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிக்கி உள்ளன. இதில், இன்ஷா அதிநவீனத் துப்பாக்கிகளுடன் போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் புகைப்படங்களும் சிக்கி உள்ளன. இந்த சம்பவம், அதிகாரிகள் மட்டத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.