“ஐதராபாத் என்கவுன்ட்டர் முற்றிலும் போலியானது” என்று, விசாரணைக் குழு தந்த அதிர்ச்சி ரிப்போர்ட் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

அதாவது, தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு நாட்டையே உலுக்கும் வகையில், 26 வயதான பிரியங்கா ரெட்டி என்ற இளம் பெண் மருத்துவர், கடத்தப்பட்டு வாயில் மது ஊற்றப்பட்ட நிலையில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு, தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. 

“இந்த வழக்கில், அந்த மகா பாதக செயலை செய்த முகமது பாஷா என்ற ஆரீஃப், கேசவலு, சிவா, நவீன் ஆகிய 4 பேரையும், சிசிடிவி காட்சியின் உதவியுடன் ஒரே நாளில் போலீசார் அதிரடியாகக் கைது செய்ததாக” அறிவித்தனர்.

இதனையடுத்து, இந்த 4 பேரும் அடுத்த சில நாட்களில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, அவர்களை 7 நாள்கள் நீதிமன்றக் காவல் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அவர்கள் போலீசார் வாகனத்தில் ஏற்றுவதற்கு அழைத்துச் செல்லும்போது, அங்குக் கூடியிருந்த அனைவரும், இந்த 4 பேரையும் தூக்கில் போடும்படி முழக்கங்களை எழுப்பினர்.

இதனையடுத்து,  சிறையில் அடைக்கப்பட்ட அந்த 4 பேரிடமும் நீதிபதி நேரில் சென்று விசாரணை நடத்தினார். அதன் பின்னர், அந்த 4 பேரின் நீதிமன்றக் காவலை ரத்து செய்துவிட்டு, விசாரணைக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இதனைத்தொடர்ந்து, போலீசார் தங்களது பாணியில் மாறி மாறி விசாரணை நடத்தினர். இதனையடுத்து, நள்ளிரவு 12 மணி அளவில் ஆட்கள் நடமாட்டம் இருக்காது என்பதால், கொலை செய்ததை நடித்துக் காட்டும்படி, அந்த 4 பேரையும் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கே போலீசார் அழைத்துச் சென்றனர்.

நள்ளிரவு சுமார் 12 மணி அளவில் வந்த போலீசார், முதலில் டோல் கேட்டுக்கு அழைத்துச் சென்று அங்கு என்ன நடந்தது என்பதை நடித்துக்காட்டச் சொல்லி உள்ளனர். அதன்படி, அந்த 4 குற்றவாளிகளும் நடித்துக் காட்டி உள்ளனர்.

பின்னர், பஞ்சர் ஒட்டிய கடை, பெட்ரோல் வாங்கிய இடம், மது வாங்கிய கடை ஆகிய அனைத்து இடங்களுக்கும் அழைத்துச் செல்லப்பட்டு, போலீசார் விசாரணை மேற்கொண்டனர் என்றும், இறுதியாக அதிகாலை 4 மணிக்கு மேல் பிரியங்கா ரெட்டி எரித்துக் கொலை செய்யப்பட்ட சட்டான்பள்ளி பாலத்துக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தியதாகவும், அப்போது திடீரென்று முதல் குற்றவாளியான ஆரிஃப், ஒரு போலீசாரின் கையிலிருந்த துப்பாக்கியை மல்லுக்கட்டிப் பறித்தார் என்றும், இதனையடுத்து துப்பாக்கி முனையில் போலீசாரை அவன் மிரட்டியதாகவும் கூறப்பட்டது.

இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மற்ற 3 குற்றவாளிகளும், ஆளுக்கு ஒரு திசையில் தப்பி ஓட முயன்றனர் என்றும், அவர்கள் பின்னால் போலீசார் ஓடியதால், ஆரிஃப் மற்றொரு திசையில் தப்பி ஓட முயன்றுள்ளான் என்றும், அந்த பகுதி காட்டுப் பகுதி போல் இருந்ததால், தப்பி ஓடினால் மீண்டும் கைது செய்வது சிரமம் என்று கருதிய போலீசார், தப்பி ஓட முயன்ற 4 பேரையும் சம்பவ இடத்திலேயே என்கவுன்டர் செய்து உள்ளனர் என்றும், போலீசாரே அறிவித்தனர். இதில், 4 குற்றவாளிகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்று போலீசாரால் அறிவிக்கப்பட்டனர்.

“இந்த என்கவுண்ட்டா் சம்பவம் பற்றி விசாரணை நடத்த” உச்ச நீதிமன்ற நீதிபதி வி.எஸ். சிா்புா்கா் தலைமையில் 3 போ் விசாரணை ஆணையத்தை கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அமைக்கப்பட்டது. 

இது தொடர்பாக அந்த குழு விசாரணை நடத்திய நிலையில், இந்த விசாரணை தொடர்பான அறிக்கையை சமீபத்தில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. 

இந்நிலையில் தான், “ஐதராபாத் என்கவுண்ட்டர் சம்பவம் போலியானது என்றும், குற்றம்சாட்டப்பட்டவர்களை கொலை செய்யும் நோக்கிலேயே என்கவுன்ட்டர் நடத்தப்பட்டது” என்றும், உச்சநீதிமன்றத்தில் விசாரணை ஆணையம் அறிக்கை சமர்ப்பித்து இருக்கிறது. 

இதனையடுத்து, இந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட 10 போலீசார் மீதும், தற்போது கொலை வழக்குப் பதிவு செய்யவும் ஆணையம் பரிந்துரை செய்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கு, அந்த மாநில மக்கள் இடையே கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.