பணக்கார பெண்ணை காதலித்து அண்ணன் வீட்டை விட்டு ஓடிப்போன விவகாரத்தில், அவரது தங்கையைப் பெற்றோர் முன்னிலையிலேயே, காதலியின் அண்ணன் 8 பேருடன் சேர்ந்து கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் தான் இப்படி ஒரு கொடூரமான சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையம் பகுதியின் அருகே 20 வயது மதிக்க இளைஞர் ஒருவர், தனது பெற்றோர் மற்றும் 16 வயது தங்கை உடன் வசித்து வந்தார்.

அந்த 20 வயதான இளைஞன், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பணக்கார வீட்டு பெண்ணை காதலித்து வந்தார். அந்த பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த இளம் பெண்ணும், அந்த இளைஞனை காதலித்து வந்தனர்.

ஒரு கட்டத்தில், அந்த பணக்கார வீட்டு குடும்பத்தில், அந்த பெண்ணிற்குத் திருமணம் செய்ய முடிவு செய்தனர். அப்போது, அந்த பெண், தன்னுடைய காதல் விசயத்தைத் தனது பெற்றோரிடம் கூறி சம்மதம் கேட்டிருக்கிறார்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த பணக்கார பெற்றோர், தங்களது மகளின் காதலனை நேரில் அழைத்து கடுமையாக எச்சரித்து அனுப்பி உள்ளனர்.

ஆனாலும், அந்த இளைஞர் அவர்களது பேச்சை கேட்காமல் தன்னுடைய காதலில் உறுதியாக இருந்து உள்ளார். இதனால், “நாம் எப்படியும் திருமணம் செய்துகொள்ள வேண்டும்” என்று, காதலர்கள் இருவரும் உறுதியாக இருந்து உள்ளனர். இது தொடர்பாக திட்டம் போட்ட அந்த காதலர்கள் இருவரும், தாங்கள் ஏற்கனவே திட்டமிட்டபடி, இருவரும் தங்களது வீட்டில் இருந்து ஓட்டம் பிடித்தனர்.

இதனையடுத்து, தங்களது மகளை காணவில்லை என்று தவித்த அந்த பணக்கார குடும்பம், அந்த பெண்ணை அந்த பகுதியில் பல இடங்களிலும் தேடி உள்ளது. அத்துடன், அந்த பணக்கார பெண்ணின் அண்ணன், தனது நண்பர்கள் 7 பேருடன் சேர்ந்து, தனது தங்கையை தேடி, அந்த காதலன் வீட்டிற்கு வந்திருக்கிறார்.

ஆனால், அந்த வீட்டில் தனது தங்கையும், அந்த காதலனும் இல்லாத நிலையில், அந்த இளைஞனின் 16 வயது தங்கையும், அவரது பெற்றோரும் இருந்து உள்ளனர். இதனால், கடும் கோபம் அடைந்த பணக்கார பெண்ணின் அண்ணன், அவரது பெற்றோரைக் கடுமையாகத் தாக்கிவிட்டு, காதலனின் தங்கையை பிடித்து அந்த வீட்டில் உள்ள ஒரு தூணில் கட்டி வைத்து உள்ளார். 

பின்னர், அந்த 16 வயது சிறுமியை, அவரது பெற்றோர் முன்னிலையிலேயே, அந்த பணக்கார பெண்ணின் அண்ணன், தனது நண்பர்கள் 7 பேருடன் சேர்ந்து, மொத்தம் 8 பேரும் மாறி மாறி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர். இதனையடுத்து, அந்த 8 பேரும், அங்கிருந்து தப்பித்து ஓடிய நிலையில், இந்த விசயத்தைக் கேள்விப்பட்டு, அங்கு ஊரே திரண்டு உள்ளது.

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர், இது குறித்து அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமி, அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம், அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.