கடந்த ஜூன் மாதத்தில் தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக நம் மத்திய அரசு, டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளை தடை செய்திருந்தது. மேலும் ராணுவத்தில் பணிபுரிபவர்களுக்கு மட்டும் சில செயலிகளுக்குத் தடைவிதிக்கப்பட்டது. இந்த நடவடிக்கைக்காக, அரசின் மீது, பலரும் விமர்சனங்கள் வைத்திருந்தனர்.

பின்னர், அந்த செயலிகளுக்குப் போட்டியாக இந்தியா சார்ப்ல் செயலிகள் உருவாக்கப்பட்டது. அப்படி உருவாக்கப்பட்ட செயலிகளைக் கொண்டு, உலகின் நம்பர் ஒன் மொபைல் போன் உற்பத்தி மையமாக இந்தியா உருவாக வேண்டும் என்று, மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியிருந்தார். அதேபோல நாட்டில் தற்போது 200 புதிய செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறியிருந்தார் அவர். இதனால் இந்தியாவில் செயலிகளுக்கான சந்தையில் உள்நாட்டினுக்குச் சிறந்த வாய்ப்புகள் உள்ளதாகவும் சொல்லப்பட்டு வந்தது.
 
குறிப்பாக டிக்டாக் போன்ற செயலிகளால் தங்களது சந்தை மதிப்பை இழந்திருந்த ரோபோசோ, ஷேர்சாட் போன்ற உள்நாட்டு நிறுவனங்கள் மூலம் மீண்டும் தங்களின் சந்தை மதிப்பையும் வாடிக்கையாளர்களையும் அதிகரிக்க ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்நிலையில் டிக்டாக் செயலி தடை செய்யப்பட்டதை  நம்ப முடியாத வகையில் பயனாளர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக ரோபோசோ நிறுவனம் அறிவித்திருந்தது.

இதுபற்றி நிகழ்ச்சியொன்றில் பேசிய அமைச்சர், ``இந்தியர்களின் தரவுகளை வெளிநாட்டினர் திருட அனுமதிக்க முடியாது என்றும், அரசு அதன் இறையாண்மையில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது" என்று கூறியிருந்தார். நாடாளுமன்றத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவால் ஆராயப்பட்டு, தரவுகள் பாதுகாப்பு சட்டத்தை மத்திய அரசு கொண்டு வருகிறது என்று கூறியிருந்தார்.

இந்தியா - சீனா இடையில் எல்லையில் பதற்றங்கள் அதிகரித்து, லடாக்கின் கல்வான் பகுதியில் இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து,  சீனாவுடன் வர்த்தகத்தைக் குறைக்கவேண்டும், சீனப் பொருட்களைப் புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் இந்தியாவில் வலுவடைந்து வந்தன.

அதைத் தொடர்ந்துதான், இந்தியாவில் பரவலாகப் பயன்படுத்தப்படும் சீன நிறுவனங்களின், டிக்டாக்  ஹலோ, உட்பட 59 செயலிகளை தடைசெய்வதாக இந்திய அரசு, கடந்த மாதம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டதாகச் சொல்லப்பட்டது. இருப்பினும் எல்லைப் பிரச்னைக்கும் இதற்கும் தொடர்பில்லை எனச் சொல்லியது அரசு. இப்போதோ, இந்தியாவில் உற்பத்தி மையம் பெருகியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இரண்டுக்கும் தொடர்பு உண்டோ என்ற கோணத்தில் விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றது. 

இந்தியாவின் இந்த நடவடிக்கையைப் பார்த்த பிற நாடுகள், தாங்களும் இதைப் பின்தொடரலாம் என முடிவு செய்துள்ளனர். அந்த வரிசையில், ஆஸ்திரேலியாவில் சீன செயலிகள் தடை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இப்போது,அமெரிக்காவும் சீன செயலிகளைத் தடுக்கவிருப்பதாகக் கருத்துகள் பகிரப்பட்டு வருகிறது.

சீன செயலிகளை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில், இந்தியா தான் முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் இருப்பது அமெரிக்காதான்.

இதைத்தொடர்ந்து, செயலிகளுக்கான தடை உலகளவில் பல காரணங்களுக்காக தொடர்ச்சியாக செய்யப்பட்டு வருகின்றது. அப்படி, இன்றைய தினம் பப்ஜி விளையாட்டை முறைகேடாக விளையாடும் 2.2 மில்லியன் வீரர்களை தடை செய்துள்ளதாகவும், 1,424,854 சாதனங்களில் இருந்து பப்ஜி விளையாட்டை அணுகுவதற்கே தடை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோசடி யுக்திகளை விளையாட்டிலிருந்து அகற்றுவதன் நடவடிக்கையாக டென்சென்ட் உலகளவில் 2.2 மில்லியன் விளையாட்டு வீரர்கள் தடை செய்துள்ளதாக அறிவித்துள்ளது. பப்ஜி விளையாட்டில் வெற்றி பெற அவர்கள் முறையற்ற விளையாட்டை கையாளுகின்றனர் என்பதை முன்னிறுத்தி இந்தத் தடை பொருந்துமென்பது குறிப்பிடப்பட்டிருக்கிறது.

பப்ஜி தடைக்கு, பாதுகாப்பின்மைதான் காரணம் என சொல்லப்பட்டாலும், இதன் பின்னணியிலும் சீனா - இந்தியா எல்லைப் பிரச்னைதான் இருக்கிறதென சொல்லப்படுகிறது. சமீபத்தில் நடந்த லடாக் விவகாரத்திற்கு இந்தியாவின் பதிலடி இதுதான் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதை அவர்கள் கூற காரணம், தற்போது மத்திய அரசு பப்ஜி செயலிக்கு மட்டும் தடைவிதிக்கவில்லை. கூடவே கட் கட், பைடு, ரைஸ் ஆஃப் கிங்டம் உள்பட 118 சீன செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடைவிதித்துள்ளது. 118 செயலிகளில் ஒன்றுதான் பப்ஜி என்பதால், இதற்கும் சீனாவுடனான இந்தியாவின் பிரச்னைக்கும் தொடர்புள்ளதென்று பார்க்கப்படுகிறது.