டெல்லி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் இருந்த தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் இரவோடு இரவாக அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லி பல்கலைக்கழக ஆங்கிலப் பாடப் புத்தகத்தில் இருந்து தமிழ் நாட்டைச் சேர்ந்த பட்டியலின பெண் எழுத்தாளர்களின் படைப்புகள் இரவோடு இரவாக அதிரடியாக நீக்கப்பட்டு இருக்கின்றன. 

அதுவும், பல்கலைக்கழகத்தின் கல்விக் குழுவைச் சேர்ந்த 15 பேரின் மிக கடுமையான எதிர்ப்பையும் மீறி இந்த நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அதாவது டெல்லி பல்கலைக்கழகம், ஆங்கில இலக்கிய பாடத் திட்டத்தில் இருந்து எழுத்தாளர் மாகாஸ்வேதா தேவியின் “திரௌபதை” பாடத்தையும், எழுத்தாளர் பாமாவின் “சங்கதி” பாடத்தையும், சுகிர்தராணி எழுதிய “கைம்மாறு” மற்றும் “என்னுடல்” ஆகிய படைப்புகளை இரவோடு இரவாக அதிரடியாக நீக்கப்பட்டு உள்ளன. 

இதற்கு, அந்த குழுவில் உள்ள 15 உறுப்பினர்களும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த பிறகும், அந்த பல்கலைக்கழக மேற்பார்வைக் குழுவின் இந்த நடவடிக்கை கடும் அதிர்ச்சியை அளிப்பதாக உள்ளதாகப் பேராசிரியர்கள் பலரும் தெரிவித்து உள்ளனர். 

இந்த குழுவில் ஆங்கிலத் துறையைச் சேர்ந்த யாரும் உறுப்பினர்களாக இல்லாதது குறித்தும், பேராசிரியர்கள் பலரும் தங்களது ஏமாற்றத்தைத் தெரிவித்து உள்ளனர்.

அத்துடன், “இப்படியான படைப்புகளின் நீக்கத்திற்குப் பின்னணியில், கண்டிப்பாக அரசியல் காரணங்கள் இருப்பதாகவும்” கல்விக் குழு உறுப்பினர்கள் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

மேலும், இரவோடு இரவாக அதிரடியாக நீக்கப்பட்ட படைப்புகளுக்குப் பதில் சுல்தானாவின் “கனவுகள்” மற்றும் ராமாபாயின் படைப்புகள் புதிதாக அதில் சேர்க்கப்பட்டு உள்ளன.

இது தொடர்பாகக் கருத்து தெரிவித்து உள்ள எழுத்தாளர் சுகிர்தராணி, “எனது பாடம் நீக்கப்பட்ட தகவல், டி.வி.யில் வரும் செய்திகள் வாயிலாகத் தான் எனக்குத் தெரிய வந்தது என்றும். பல்கலைக்கழகத்திலிருந்து யாரும் எந்தவித தகவலையும் முறைப்படி என்னிடம் தெரிவிக்கவில்லை” என்றும், கவலைத் தெரிவித்தார்.

மாறாக, “ஒடுக்கப்பட்ட மக்களின் படைப்புகள் நீக்கப்பட்டிருப்பது எனக்கு அதிர்ச்சியைத் தரவில்லை என்றும், ஏனெனில் அது தொடர்ந்து நடப்பது தான்” என்றும், அவர் வேதனை தெரிவித்து உள்ளார்.

குறிப்பாக, “ஒடுக்கப்பட்டவர்களுக்கான குரல் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் குரலைக் காணாமல் ஆக்குவதை ஏற்றுக் கொள்ள இயலாது” என்றும், தன்னுடைய கருத்தை முன்வைத்து உள்ளார்.

அதே போல், “டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழ் எழுத்தாளர்களின் படைப்பு நீக்கப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது” என்று மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் தனது கண்டனத்தைத் தெரிவித்து உள்ளார். 

“பொது சமூகத்தில் அழுத்தமான சவனங்களை ஏற்படுத்திய படைப்புகளை மறுபடியும் சேர்க்க வேண்டும்” என்றும், அவர் வலியுறுத்தி உள்ளார். 

எம்.பி. சு. வெங்கடேசனை தொடர்ந்து, தமிழ் ஆர்வலர்கள் மற்றும் படைப்பாளர்கள் பலரும் இந்த நடவடிக்கைக்கு தங்களது எதிர்ப்புகளைத் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.