“வீட்டில் நாய், மாடு வளர்த்தால் ஆண்டுக்கு 10 ரூபாய் வரி செலுத்த வேண்டும் என்றும், தெருவில் வீட்டு நாய் மற்றவர்களை அச்சுறுத்தினால் 500 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்” என்றும், மதுரை மாநகராட்சி அறிவித்துள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
“மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள், தங்களது வீடுகளில் மாடு, எருமை, குதிரை நாய்களை போன்ற செல்ல பிரணிகளை வளர்ப்போர், தங்கள் செல்லப்பிராணிகளை 10 ரூபாய் பதிவுக் கட்டணம் செலுத்தி பதிவு செய்துக் கொள்ள வேண்டும்” என்று, மதுரை மாநகராட்சி புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.
அத்துடன், “பொது வெளியில் மக்கள் நடமாடும் சாலைகளில் ஆடு, மாடு, குதிரைகளை அலட்சியமாக விட்டால், பிறரை அச்சுறுத்தினால் அதன் உரிமையாளர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்” என்றும் மதுரை மாநகராட்சி அறிவித்துள்ளது.
அதாவது, மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆடு, மாடு, குதிரை, நாய்கள் போன்ற பல்வேறு கால்நடைகளை அதன் உரிமையாளர்கள், பொது வெளியில் சாலைகளில் அலட்சியமாக விட்டு விடுவதாகவும், இதனால் வாகனங்களில் செல்பவர்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி உயிரிழப்பு ஏற்படுவதோடு, கால்நடைகளும் காயமடைவதாகவும் தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன.
அத்துடன், “சாலையில் பொது வெளியில் அலட்சியாக விடப்படும் நாய்கள், பொது மக்கள் பலரையும் கடித்து காயம் ஏற்படுத்துவதாகவும்” மதுரை மாநகராட்சிக்கு தொடர்ந்து தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
இது குறித்து, மதுரை மாநகராட்சி தீவிர ஆலோசனை மேற்கொண்டு வந்த நிலையில், அதன் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில், புதிதாக பல்வேறு அறிவிப்புகளை தற்போது வெளியிட்டு உள்ளது.
அதன் படி, கடந்த 2011 ஆம் ஆண்டு மதுரை மாநகராட்சியின் மாமன்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தில் அடிப்படையில், நிர்ணயிக்கப்பட்ட அபராத தொகை மற்றும் உரிமம் வசூலிப்பு தொகையை மதுரை மாநகராட்சி அறிவித்து உள்ளது.
அதன் அடிப்படையில் “மதுரை மாநகரில் இறைச்சி - மீன், இறைச்சி கடைகள் வைத்திருப்பவர்கள் அந்த கடைகளின் அளவுக்கு, ஒரு சதுர அடிக்கு ஆண்டுக்கு 10 ரூபாய் என்ற அளவில் கட்டணம் செலுத்தி உரிமம் பெற வேண்டும்” என்றும், அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
அதே போல், “இனி பொது மக்கள் தங்களது வீடுகளில் நாய், மாடு, எருமை, குதிரை போன்ற பிரணிகளை வளர்த்தால், மாநகராட்சியில் ஆண்டுக்கு 10 ரூபாய் பதிவுக் கட்டணமாக செலுத்த வேண்டும்” என்றும், அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, “மதுரை மாநகராட்சிகு உட்பட்ட அனுமதிக்கப்படாத இடங்களில் விற்பனைக்காக ஆடு, மாடு வதை செய்தால் 5,000 ரூபாய் அபராதமும், தெருக்களில் ஆடு, மாடு, குதிரைகளை அலட்சியமாக விடும் உரிமையாளர்களுக்கு 1000 ரூபாய் அபராதமும், தெருக்களில் அச்சுறுத்தும் மற்றும் சுகாதாரசீர் கேடு விளைவிக்கும் வகையில் நாய்களை விட்டால் 500 அபராதமும் விதிக்கப்படும்” என்றும், அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
முக்கியமாக, “சுகாதார சீர்கேடு ஏற்படும் வகையில், திடக்கழிவுகளை கொட்டும் இறைச்சி கடைகளுக்கு 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்” என்றும், மதுரை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும், “இந்த அபராத விதிப்பு தொடர்பாக 15 நாட்களுக்குள் பொது மக்கள் தங்களுடைய கருத்துக்களை எழுத்துபூர்வமாக மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் தெரிவக்கலாம்” என்றும், மாநகராட்சி ஆணையர் கூறியுள்ளார்.