“பெண்களே உஷாராக இருங்கள்.. சினிமா பட பாணியில் என் கணவர் பெண்களை ஏமாற்றுகிறார்” மனைவி புகார்

“பெண்களே உஷாராக இருங்கள்.. சினிமா பட பாணியில் என் கணவர் பெண்களை ஏமாற்றுகிறார்” மனைவி புகார் - Daily news

“எனது கணவர் சினிமா பட பாணியில் பல பெண்களை ஏமாற்றி வருகிறார்” என்று, பாதிக்கப்பட்ட மனைவி கண்ணீர் மல்க புகார் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்து உள்ள பழைய ஆயக்குடி 6 வது வார்டு பகுதியைச் சேர்ந்த பாலச்சந்தரின் மகன் ராம்குமார், குஜராத்தில் உள்ள பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

இதனையடுத்து, அவரது பெற்றோர் அவருக்குத் திருமணத்திற்குப் பெண் பார்த்து வந்துள்ளனர். அதன் படி, திண்டுக்கல் மாவட்டம் பழைய ஆயக்குடியைச் சேர்ந்த மீனா என்ற இளம் பெண்ணை பார்த்து, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, இரு வீட்டார் முறைப்படி திருமணம் செய்து வைத்து உள்ளனர்.

திருமணத்திற்குப் பிறகு மகிழ்ச்சியாகச் சென்ற ராம்குமார் - மீனா தம்பதிகளுக்கு, 2 வயதில் தர்ஷா என்ற பெண் குழந்தை இருக்கிறது.

இந்த நிலையில், ராம்குமார் குஜராத்தில் உள்ள பைனான்ஸில் நிறுவனத்தில் சம்பாதித்த பணத்தை வைத்துக் கொண்டு, “எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று, பல பெண்களை ஏமாற்றி, பல பெண்களுடன் பழகி, பல பெண்களின் வாழ்க்கையில் விபரீதமாக விளையாடி வருகிறார்” என்றும், அவரது மனைவி மீனா பகிரங்கமாகக் குற்றம்சாட்டி உள்ளார்.

குறிப்பாக, “எனது கணவர் ராம்குமார், பல்வேறு ஊர்களுக்குச் சென்று அந்த ஊரில் கணவன் இல்லாத பெண்கள், தனியாக வசிக்கும் பெண்கள், பணத்திற்கு ஆசைப்படும் பெண்கள் என பல தரப்பில் பெண்களைக் குறி வைத்து வருகிறார் என்றும், அப்படி என் கணவனிடம் மாட்டும் பெண்களிடம் பழகி, அவர்களைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி, அந்த பெண்களின் வாழ்க்கையைச் சீரழிப்பதை என் கணவர் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்” என்றும், மீனா பகிரங்கமாகக் குற்றம்சாட்டி உள்ளார்.

கணவர் ராம்குமாரின் காதல் லீலைகளை அவரது மனைவி தட்டிக் கேட்ட நிலையில், அவர்களுக்குள் சண்டை அதிகரித்து உள்ளது.

இதனையடுத்து, சம்மந்தப்பட்ட மீனா, அங்குள்ள நந்தவனப்பட்டி அருகே சென்று கொண்டிருந்த போது, அங்கு வழி மறித்து நின்ற ராம்குமார், அவரை சரமாறியாக தாக்கிவிட்டு, அவர் கழுத்தில் அணிந்திருந்த தாலியை அறுத்துக்கொண்டு அவரது நகைகளையும் பறித்துக்கொண்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

இதில், படுகாயம் அடைந்த மீனாவை மீட்ட அப்பகுதி மக்கள், அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர். 

அத்துடன், கணவனால் தாக்கப்பட்ட மீனா, அங்குள்ள ஆயக்குடி காவல் நிலையத்தில் தன் கணவன் மீது, பகிரங்கமாகக் குற்றம்சாட்டி, அவருக்கு உள்ள பெண் சவகாசம் பற்றியும், அவர் எப்படி பெண்களிடம் பழகி ஏமாற்றி வருகிறார்” என்பது குறித்தும் புகார் அளித்திருக்கிறார்.

மேலும், இந்த புகார் மனுவில், “பல பெண்களின் வாழ்க்கையைச் சீரழித்து வரும் மோசடி நாயகனான என் கணவன் ராம்குமாரை கைது செய்து, சிறையில் அடைத்துத் தக்க தண்டனை வழங்க வேண்டும்” என்றும், பாதிக்கப்பட்ட அவர் மனைவி மீனா கண்ணீர் மல்க புகார் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், இது குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, “எனது கணவர் சினிமா பட பாணியில் பல பெண்களை ஏமாற்றி வருகிறார்” என்று, அவரது மனைவியே கண்ணீர் மல்க புகார் கூறியுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment