பதற்றமடைகிறது பாஜக! “இந்தியாவில் போட்டி நாடாளுமன்றமா?” ஒருங்கிணைந்த எதிர்க்கட்சிகள்!!

பதற்றமடைகிறது பாஜக! “இந்தியாவில் போட்டி நாடாளுமன்றமா?” ஒருங்கிணைந்த எதிர்க்கட்சிகள்!! - Daily news

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒரே அணியாக ஒருங்கிணைந்த நிலையில், போட்டி நாடாளுமன்றத்தை நடத்துவதற்கான திட்டம் குறித்தும் தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், மோடி தலைமையிலான பாஜக அரசு பதற்றமடைந்துள்ளது.

பெகாசஸ் உளவு சர்ச்சை விவகாரம் தற்போது இந்தியாவில் மிகப் பெரிய பிரச்சனையாக எழுந்துள்ளது. இந்தியாவில் எதிர்க்கட்சி தலைவர்கள், ஒன்றிய அமைச்சர்கள், மூத்த பத்திரிகையாளர்கள் உள்பட ஒட்டுமொத்தமாக 300 இந்தியர்களின் போன்கள் ஒட்டுக்கேட்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகி, ஒட்டுமொத்த இந்திய அரசியலை நடுங்க வைத்துள்ளது. 

இதனால், இந்திய அரசியலில் தற்போது அனல் பறக்கும் விவாதங்கள் அரங்கேறி, இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டங்கள் எல்லாம் பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக, நாடாளுமன்றம் இன்றுடன் 11 வது நாளாக முடங்கி உள்ளது. 

அத்துடன், “இந்த போன் ஒட்டுக்கேட்பு விவகாரத்தில், மத்திய அரசுக்குத் தொடர்பு உள்ளதா என்று, உரிய விளக்கம் அளிக்க வேண்டும்” என்று, காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தைத் தொடர்ந்து முடக்கி வருகின்றன.

ஆனால், இதற்குத் தீர்வு இன்னும் கிடைக்காத நிலையில், இன்றைய தினம் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தலைமையில் 17 எதிர்க்கட்சிகளுக்கு ராகுல் காந்தி அழைப்பு விடுத்து, அவர்களுடன் இன்று காலையில் முக்கிய ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையின் போது, பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம், வேளாண் சீர்திருத்தச் சட்டங்கள், பெட்ரோல் டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலை உயர்வு குறித்து இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. 

அத்துடன், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அப்போது ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

முக்கியமாக, பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக, போட்டி நாடாளுமன்றத்தை நடத்துவதற்கான திட்டம் குறித்தும் மிக முக்கியமாக ஆலோசிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனையடுத்தே, மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, நாடாளுமன்றத்திற்கு எதிர்க்கட்சி எம்.பி.க்களுடன் ராகுல் காந்தி சைக்கிள் பேரணி நடத்தினார். 

குறிப்பாக, வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாகவும் கடந்த வாரம் ராகுல் காந்தி டிராக்டர் பேரணி நடத்தியிருந்தார்.

அதே நேரத்தில், இந்த ஆலோசனைக்கூட்டம் குறித்துப் பேசிய புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி, “சோனியா காந்தியின் வழிகாட்டுதலின்படி தான் ராகுல் காந்தி இந்த கூட்டத்தை முன்னெடுக்கிறார் என்றும், அரசியல் கட்சி தலைவர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட முக்கிய நபர்களின் செல்போன்கள் ஒட்டுக்கேட்கப்பட்ட பெகாசஸ் விவகாரம், வேளாண் சட்டங்கள், பெட்ரோல் டீசல் விலை உயர்வு உள்ளிட்ட நாடு சந்திக்கும் மிகப்பெரிய சிக்கல்கள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க பாஜக தயாராக இல்லை” என்று, குற்றம்சாட்டினார்.

“அதனால் தான், இது போன்ற முடிவினை எதிர்க்கட்சிகள் எடுக்கவேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது என்றும், இந்த ஒருமித்த கருத்தினை உடைய எதிர்க் கட்சிகளின் ஒருங்கிணைப்பு வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வரை தொடரும் என நம்புகிறேன்” என்றும், கூறினார்.

அதே போல், எதிர்க்கட்சிகளைச் சமாளிப்பது குறித்த பாஜக எம்.பி.க்களின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 
கலந்துகொண்ட பிரதமர் மோடி பேசும்போது, “தினமும் முழக்கங்களை எழுப்பி நாடாளுமன்றத்தைச் செயல்படவிடாமல் எதிர்க்கட்சிகள் தடுக்கின்றன” என்று, பகிரங்கமாகக் குற்றச்சாட்டினார். 

“நாடாளுமன்றத்தை எதிர்க் கட்சிகள் தொடர்ந்து அவமதிப்பதாகவும்” பகிரங்கமாக, மோடி குற்றம்சாட்டினார்.

பின்னர், இந்த விவகாரம் பற்றிய பேசிய பாஜகவின் சி.பி.ராதாகிருஷ்ணன், “கொரோனா தான், மத்திய அரசு சந்திக்கும் சவாலாக உள்ளது என்றும், எதிர்க்கட்சிகள் பாஜகவுக்கு சவாலாக இல்லை” என்றும், குறிப்பிட்டார். 

“பாஜக அரசு பற்றிக் குறைகூற ஒன்றும் இல்லாத காரணத்தால், இப்போது இந்த விவகாரத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள் என்றும், இமாலய ஊழல்களைச் செய்தவர்கள் காங்கிரஸ் கட்சியினர் என்றும், ஆனால் பாஜகவின் அரசில் ஊழல் இல்லை என்பதால் வேறு ஏதாவது விவகாரத்தைப் பூதாகரமாக்குகிறார்கள்” என்றும், அவர் குற்றம்சாட்டினார். 

“ஆட்சியைப் பிடிக்கவேண்டும் என்பதற்காகக் காங்கிரஸ் எதையாவது செய்யவேண்டும் என இதைச் செய்கிறது” என்றும், அவர் விமர்சனம் செய்தார்.

இதனிடையே, மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக இது வரை தனித்தனியாகப் போராட்டம் நடத்திய எதிர்க் கட்சிகள் எல்லாம் தற்போது ஒரே அணியாக 
ஒருங்கிணைந்திருப்பது, பாஜகவை பதட்டம் கொள்ளச் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Leave a Comment