கணவனை பிரிந்து வாழும் இந்திய பெண்.. டெல்லியிலிருந்து இங்கிலாந்து பிரதமருக்கு தற்கொலை மிரட்டல் விடுத்த விநோதம்..

கணவனை பிரிந்து வாழும் இந்திய பெண்.. டெல்லியிலிருந்து இங்கிலாந்து பிரதமருக்கு தற்கொலை மிரட்டல் விடுத்த விநோதம்.. - Daily news

கணவனை பிரிந்து வாழும் இந்திய பெண் ஒருவர், டெல்லியில் இருந்துகொண்டு, இங்கிலாந்து பிரதமருக்கு தற்கொலை மிரட்டல் விடுத்து இமெயில் அனுப்பிய 
விநோத சம்பவம் அரங்கேறி உள்ளது. 

உலகம் முழுவதும் கொரோனா ஆட்கொண்டு உள்ள நிலையில், மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். இதில், பலர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருவதாகவும், இதில் சிலர் அதிலிருந்து விடப்பட முடியாமல் தற்கொலை செய்துகொள்வதும் உலகம் முழுவதும் தொடர்கதையாகி வருகிறது.

கொரோனா வைரஸ் நோய் தாக்கம் காரணமாக, இந்தியாவிலும் ஊரடங்கு நிலை தொடர்கிறது. இதனால், பலரும் வெளியே செல்ல முடியாமல் வீடுகளிலேயே முடங்கிப்போய் உள்ளனர்.

இப்படி, டெல்லியில் தன் கணவனை விட்டுப் பிரிந்து தனிமையில் வாழும் 43 வயது பெண்மணி ஒருவர், கொரோனா காரணமாக கடும் நிதி சிக்கலில் தவித்து வந்துள்ளார்.

அத்துடன், கடந்த சில வருடங்களாகவே அவர் தனிமையில் வசித்து வந்ததால், கடும் மன உளைச்சலுக்கும் அவர் ஆளாகி உள்ளார். மன உளைச்சல் மற்றும் கடும் நிதி நெருக்கடியால், அவர் கடந்த சில நாட்களாக உணவுகூட சாப்பிடவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், தனிமையில் வாழ்ந்து வந்த அந்த 43 வயது பெண், நேற்று தினம் இரவு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு அவசர அவசரமாக ஒரு இமெயில் அனுப்பி உள்ளார்.

அந்த இமெயிலில், “அடுத்து வரும் 2 மணி நேரத்திற்குள் எனக்கு உதவி கிடைக்கவில்லை என்றால், நான் நிச்சயம் தற்கொலை செய்துகொள்வேன்” என்று கூறியிருந்தார்.

இந்த இமெயிலை, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் உதவியாளர் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்துள்ளார். இதனையடுத்து, பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக, அவரை கண்டுபிடித்து அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்யுமாறு அவர் உத்தரவிட்டார்.

அதன்படி, இந்த தகவல் லண்டனில் உள்ள இந்தியத் தூதரகத்திற்குத் தெரிவிக்கப்பட்டது. அங்கிருந்து இந்த தகவல், வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்குத் தெரிவிக்கப்பட்டது. அங்கிருந்து டெல்லி போலீசாருக்கு அந்த இமெயில் குறித்த தகவல் அடுத்தடுத்து உடனுக்குடன் கூறப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, அந்த இமெயிலில் குறிப்பிடப்பட்டிருந்த டெல்லி ரோஹிணி பகுதியில் உள்ள வீட்டில் போலீசார் சோதனை செய்தனர். ஆனால், அந்த 

இமெயிலில் முகவரி தவறாக இருந்ததால், போலீசார் குழப்பம் அடைந்து, அந்த நள்ளிரவு நேரத்தில் பல்வேறு வீட்டின் கதவுகளைத் தட்டி உள்ளனர்.சுமார் 2 மணி நேரத் தேடுதலுக்குப் பிறகு, அந்த குறிப்பிட்ட பெண்மணியின் வீட்டை போலீசார் கண்டுபிடித்து உள்ளே சென்றனர். ஆனால், அந்த வீடு முற்றிலுமாக அலங்கோலமாகக் காணப்பட்டுள்ளது.

அந்த பெண் குளித்தே பல நாட்கள் இருக்கம் வகையில், அவர் காணப்பட்டுள்ளார். குறிப்பாக, அந்த வீட்டில் துர்நாற்றம் வேறு வீசி உள்ளது. 

இதனையடுத்து, அந்த பெண்ணை போலீசார் விசாரித்துள்ளனர். அப்போது, கணவனை விட்டுப் பிரிந்து அந்த பெண் தனிமையில் வாழ்ந்து வருவதால், இப்படி மன ரீதியாகப் பாதிக்கப்பட்டு இருப்பதை போலீசார் உணர்ந்தனர். 

இதனையடுத்து, அந்த பெண்ணுக்கு போதிய மருத்துவ உதவிகளைச் செய்து, மனநல மருத்துவர்களிடம் ஆலோசனைக்காக அந்த பெண் அனுப்பி வைக்கப்பட்டார்.

மேலும், டெல்லியில் மீட்கப்பட்ட பெண் தொடர்பாகத் தகவலானது, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு தெரிவிக்கப்பட்டு, அவருக்கும் நன்றியும் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

இதனிடையே, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு மெயில் அனுப்பிய பெண்ணின் வீட்டை கண்டுபிடிக்க நள்ளிரவு நேரத்தில் போலீசார் சுமார் 2 மணி நேரம் வீடு வீடாகத் தேடியதால், டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Comment