வசந்த் அன் கோ வசந்தகுமார் எம்.பி. மறைவு! தலைவர்கள் முதல் பிரபலங்கள் வரை கூறிய இரங்கட்பா இது! SPL

வசந்த் அன் கோ வசந்தகுமார் எம்.பி. மறைவு! தலைவர்கள் முதல் பிரபலங்கள் வரை கூறிய இரங்கட்பா இது! SPL - Daily news

வசந்த் அன் கோ உரிமையாளரும், கன்னியாகுமரி எம்.பி.யுமான வசந்தகுமார் உயிரிழந்ததற்கு நாட்டின் பல்வேறு முக்கிய தலைவர்கள் முதல் பிரபலங்கள் வரை கூறிய இரங்கட்பா பற்றி தற்போது பார்க்கலாம்.  

மளிகைக் கடை முதல் மக்களவை வரை, தன்னுடைய அயராது உழைப்பாள் உயர்ந்தவர் காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார். அவரது வாழ்க்கையை ஒரு முறை திரும்பிப் பார்த்தால், அதில் உள்ள ஒவ்வொரு படிக்கட்டுகளும் வியர்வை துளிகளால் கட்டப்பட்ட வெற்றிப்படிக்கட்டுகளாக நிமிர்ந்து பார்க்க வைக்கும். 
 
70 வயதான காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமாருக்கு, கொரோனா வைரஸ் தொற்று பரவி இருப்பது தெரிய வந்தது. இதனால், அவர் ஆகஸ்ட் 10 ஆம் தேதி முதல் கொரோனா பாதிப்புக்குச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உடல் நலம் தேறினார். ஆனாலும், கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட போதும், நுரையீரல் தொற்று காரணமாகப் பாதிக்கப்பட்டு, உயர் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் நேற்று இரவு 7 மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக, அவரது மகன் விஜய் வசந்த் தெரிவித்தார்.

பின்னர், காங்கிரஸ் கொடி போர்த்தப்பட்டு அப்போலோ மருத்துவமனையிலிருந்து தி.நகரில் உள்ள இல்லத்திற்கு வசந்தகுமார் எம்.பி.யின் உடல் கண்ணாடி பேழையில் வைக்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது. பின்னர், வசந்தகுமார் உடல் தியாகராயர் நகரில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. 

எம்.பி. வசந்தகுமார் மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர், ஆளுநர், முதலமைச்சர், தொடங்கி சினிமா பிரபலங்கள் வரை தங்களது இறங்கலைத் தெரிவித்து வருகின்றனர். அது குறித்து தற்போது பார்க்கலாம்..

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

இது தொடர்பாகக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ள இரங்கட்பாவில், “கன்னியாகுமரி எம்.பி. வசந்தகுமார் மறைவு செய்தி மிகவும் வருத்தமளிப்பதாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார். அவரை இழந்து வாழும், அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்” என்றும், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்.

பிரதமர் மோடி 

பிரதமர் மோடி தெரிவித்துள்ள இரங்கட்பாவில், “மக்களவை நாடாளுமன்ற உறுப்பினர் எச்.வசந்தகுமார் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். வணிக மற்றும் சமூக சேவை முயற்சிகளில் அவரது முன்னேற்றம் குறிப்பிடத்தக்கது. அவருடனான எனது தொடர்புகளின் போது, தமிழகத்தின் முன்னேற்றம் குறித்த அவரது ஆர்வத்தை நான் எப்போதும் பார்த்திருக்கிறேன். அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றும், குறிப்பிட்டுள்ளார்.

ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் 

ராகுல் காந்தி கூறியுள்ள இரங்கல் செய்தியில், “கொரோனா காரணமாகக் கன்னியாகுமரி எம்.பி. எச்.வசந்தகுமாரின் உயிரிழப்பு செய்தி அதிர்ச்சியளிக்கிறது. மக்களுக்குச் சேவை செய்வதற்கான காங்கிரஸ் சித்தாந்தத்திற்கான அவரது அர்ப்பணிப்பு நம் இதயங்களில் என்றும் நிலைத்திருக்கும். அவரது நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் 

அகில இந்திய காங்கிரஸ் கட்சி தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ள இரங்கற்பாவில், “வசந்தகுமார் மறைவால் நாங்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளோம். வீரமான காங்கிரஸ்காரர் ஆன வசந்தகுமார், மக்களுக்கான சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். காங்கிரஸ் கட்சிக்கும், அவரை இழந்து நிற்கும் தொண்டர்களுக்கு அவரது இழப்பு ஈடு செய்ய முடியாது” என்றும், கூறியுள்ளது.  

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி

வசந்தகுமார் எம்.பி. மறைவுக்கு காங்கிரஸ் கட்சியின் டிவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், “சிறந்த தலைவரும், கடின உழைப்பாளியுமான எச்.வசந்தகுமாரை இழந்து விட்டோம் என்றும், காங்கிரஸ் பேரியக்கமே நல்ல தலைவரை இழந்து நிற்கிறது” என்றும் கூறப்பட்டுள்ளது.
 
குலாம்நபி ஆசாத், காங்கிரஸ் மூத்த தலைவர்

குலாம்நபி ஆசாத் கூறியுள்ள இரங்கட்பாவில், “தனது வாழ்நாள் முழுவதும் தமிழக மக்களுக்குச் சேவை செய்தவர் வசந்தகுமார்” என்று, கூறியுள்ளார்.

ப.சிதம்பரம், முன்னாள் நிதியமைச்சர்

“அன்புத் தோழர் வசந்தகுமார் எம்.பி.யின் மறைவு எல்லோருக்கும் பேரதிர்ச்சியைத் தந்துள்ளது. ஆர்வமும், துடிப்பும், சிரிப்பும் நிறைந்து பம்பரமாகச் சுழன்று பணியாற்றும் பண்பு அவருக்கே உரித்தான குண நலன்கள். அவருடைய குடும்பத்தினருக்கும் தொகுதி மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும்  தெரிவித்துக் கொள்வதாக” முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். 

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கூறியுள்ள செய்தியில், “எம்.பி. வசந்தகுமாரின் குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் என்றும், எம்.பி. வசந்தகுமாரின் இழப்பு தமிழகத்திற்கும், காங்கிரஸ் கட்சிக்கும் பேரிழப்பு” என்றும், தெரிவித்துள்ளார். “ஏழை, எளிய மக்களுக்காக அர்ப்பணித்தவர் என எம்.பி.வசந்தகுமார்” என்றும், ஆளுநர் புகழாரம் சூட்டியுள்ளார்.

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ள இரங்கல் செய்தியில் உருக்கமாகப் பேசியுள்ள அவர், “ஆளுநராக இருந்தாலும் அண்ணன் மகளாக அழுது கொண்டிருக்கிறேன். பல பேருக்கு பணிகொடுத்த தர்மம் கூட உங்களைக் காப்பாற்றவில்லையே? சித்தப்பா, நீங்கள் இல்லை என்பதை என் மனது நம்ப மறுக்கிறது. கண்டிப்புடன் கண்ணீரை அடக்க முயற்சித்தாலும், கரைபுரண்டு கண்ணீர் பெருகுகிறது” என்று, மிகவும் உருக்கமாகக் கூறியிருக்கிறார்.

முதலமைச்சர் பழனிசாமி

முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ள இரங்கல் செய்தியில், “ வசந்தகுமாரின் மறைவு வேதனையளிக்கிறது. பொதுவாழ்வில் ஈடுபட்டு மக்களின் அன்பைப் பெற்றவர் வசந்தகுமார். விற்பனையாளராக வாழ்க்கை பயணத்தைத் தொடங்கி தனது கடின உழைப்பின் மூலம் வாழ்வில் உயர்ந்தவர் வசந்தகுமார். வசந்தகுமாரின் மறைவு காங்கிரஸ் கட்சிக்கும், தொகுதி மக்களுக்கும் பேரிழப்பு” என்றும், கூறியுள்ளார்.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ள இரங்கல் செய்தியில், “வசந்தகுமாரின் இழப்பால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் அவர் சார்ந்த இயக்கத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மு.க.ஸ்டாலின், திமுக தலைவர் 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ள இரங்கல் செய்தியில், “வசந்தகுமாரின் மறைவுச் செய்தி கேட்டு வேதனையடைந்தேன். விரைவில் வீடு திரும்புவார் என்ற நம்பிக்கை பொய்த்தது. கொரோனா அநியாயமாகப் பிரித்துச் சென்று விட்டது. பழகுவதற்கு இனிமையானவர், கடின உழைப்பு, சலியாத முயற்சியால் சாதித்து காட்டியவர். வசந்த் அன் கோ நிறுவனத்தைக் கடின உழைப்பால் உருவாக்கி முன்னுதாரணமாக விளங்கியவர்.

கன்னியாகுமாரி எம்.பி., ஆக நாங்குநேரி எம்.எல்.ஏவாக மக்கள் எளிதில் சந்திக்கும் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தவர். அவருக்கும் காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்குமான பாசப்பிணைப்பை நேரில் கண்டு வியந்திருக்கிறேன். அனைத்து கட்சி தொண்டர்களின் அன்பையும் பெற்றவராக திகழ்ந்தார். பொது வாழ்விற்கு இலக்கணமாகவும் எடுத்துக்காட்டாகவும் திகழ்ந்த அவரின் மறைவு, காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுள்ள ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. வசந்தகுமார் குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும் ஆழ்ந்த ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். வசந்தகுமாரின் மறைவு வேதனையளிக்கிறது”
என்று, திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

நாராயணசாமி, புதுச்சேரி முதலமைச்சர்

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ள இரங்கல் செய்தியில், “காங்கிரஸ் கட்சியில் வசந்தகுமாரின் புகழ் நிலைத்து நிற்கும். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தத் தூணாக இருந்தவர்” என்று, புகழாரம் சூட்டி உள்ளார்.

அமைச்சர் வேலுமணி

வசந்தகுமார் மறைவுக்கு அமைச்சர் வேலுமணி இரங்கல் தெரிவித்துள்ளார். “வசந்தகுமாரின் மறைவு அதிர்ச்சியும், மனவேதனையும் அளிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

வைகோ, மதிமுக பொதுச் செயலாளர்

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ள இரங்கல் செய்தியில், “ உறுதியான காங்கிரஸ் தலைவர். தன்னால் முடிந்த அளவுக்கு மக்களுக்கு உதவியவர். வசந்தகுமாரின் மறைவு காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல தமிழகத்திற்கும் இழப்பு” என்று, குறிப்பிட்டுள்ளார்.  

நடிகர் கமல்ஹாசன், தலைவர், மக்கள் நீதி மய்யம் 

“நடுத்தரக் குடும்பங்களின் வலியறிந்து, வியாபாரத்தை வளர்த்தவர். தன்னுடைய வளர்ச்சியோடு தன்னை சுற்றியிருந்தோரையும் முன்னேற்றியவர். அரசியலிலும் கறை படியாது வாழ்ந்து, மறைந்த திரு. வசந்தகுமார் அவர்களின் மறைவு தமிழகத்திற்கே இழப்பு” என்றும் தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரன், பொதுச்செயலாளர், அமமுக

காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் மறைவுக்கு டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார். “வணிகத்தில் தனக்கென ஒரு முத்திரை பதித்தவரும், உழைப்பு ஒன்றே வளர்ச்சிக்கு முதலீடு என்பதை நிரூபித்தவர் வசந்தகுமார் மறைவு வேதனை அளிக்கிறது என்றும், தனது புன்னகையால் அனைவரையும் வசீகரித்தவருமான எச்.வசந்தகுமாரின் இழப்பு காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல, தமிழகத்திற்கே ஏற்பட்ட பேரிழப்பு” என்றும் கூறியுள்ளார்.

ஜி.கே.வாசன், தமாகா தலைவர்

“வசந்தகுமார் ஒரு கடின உழைப்பாளி. எல்லோருடனும் அன்போடு பழக கூடியவர். பலர் வாழ்வில் முன்னேற உதவிக்கரம் நீட்டியவர். அவர், உழைப்பால் உயர்ந்தவர் என்ற சொல்லுக்கு உகந்தவர் எனவும் புகழாரம் சூட்டியுள்ளார். அவரது மறைவு தமிழக காங்கிரசுக்கும், அவர் சார்ந்திருக்கும் தொகுதிக்கும் மிகப் பெரிய இழப்பு” என்றும், வேதனை தெரிவித்துள்ளார்.

திருமாவளவன், தலைவர் - வி.சி.க.

“தொழிலதிபரும், மக்களவை உறுப்பினருமான வசந்த குமார் காலமானார் என்பது பேரதிர்ச்சியும் பெருங்கவலையும் அளிக்கிறது. அவரை சந்திக்கும் போதெல்லாம் தட்டிக் கொடுத்து ஊக்கமளிப்பவர். தன்னம்பிக்கை, விடா முயற்சி, கடின உழைப்பு ஆகியவற்றின் அடையாளம். வெற்றி வீரருக்கு எமது
வீரவணக்கம்” என்றும், திருமாவளவன் கூறியுள்ளார்.

விஜயகாந்த், தேமுதிக தலைவர் 

“நல்ல நண்பரும், பழகுவதற்கு இனிமையானவருமான வசந்த குமார் அவர்கள், எப்பொழுதும் சுறுசுறுப்பாகச் செயல்பட்டவர், தொழிலிலும் வெற்றிபெற்று, அரசியலிலும் வெற்றி கண்டவர். காங்கிரஸ் கட்சியின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான அவர், கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், காங்கிரஸ் கட்சித் தொண்டர்களுக்கும், உற்றார் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்” என்றும்,குறிப்பிட்டுள்ளார். 

கனிமொழி, திமுக எம்.பி. 

“எச்.வசந்தகுமாரின் மறைவு மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. உழைப்பால் உயர்ந்த எச்.வசந்தகுமார், பல லட்சம் இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக இருந்தவர்” என்று, நினைவு கூர்ந்துள்ளார். 

ரவிக்குமார் எம்.பி. 

“எச்.வசந்தகுமாரின் உழைப்பு பிரமிக்க வைத்தது. மக்களவையில் தொகுதி மக்களுக்காக ஓயாது குரல் கொடுத்தவர். மக்களுக்காகக் குரல் கொடுத்ததின் மூலம் பிரதமரின் தனி கவனத்தை ஈர்த்தவர்” என்று, புகழாரம் சூட்டியுள்ளார்.

காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி

”இந்த வெற்றிடத்தை யாராலும் நிரப்பவே முடியாது அண்ணாச்சி. அதிர்ச்சியிலிருந்து விடுபடவே முடியவில்லை. உங்கள் புன்னகையும், தன்னம்பிக்கையும், உழைப்பும், கட்சியின் மீதான பற்றும் காலத்தால் அழியாதது. அண்ணாச்சியின் குடும்பத்திற்கு மட்டுமல்ல காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களுக்கும் இது தனிப்பட்ட இழப்பு. ஆறுதல் சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. உங்கள் ஆன்மா அமைதிகொள்ளட்டும்” என்று, உருக்கமாகக் கூறியுள்ளார்.

கே.எஸ்.அழகிரி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ள இரங்கல் செய்தியில், “வசந்தகுமார் என்றால் காங்கிரஸ்; காங்கிரஸ் என்றால் வசந்தகுமார் என்றும்.. அரசியலால், தொழிலால், புகழால் உயர்ந்தவர் எச்.வசந்தகுமார்” என்றும், புகழாரம் சூட்டி உள்ளார். 

விஜயதரணி, காங்கிரஸ் எம்.எல்.ஏ. 

“எங்களுக்கு வழிகாட்டியாக இருந்தவர், கட்சியை விட்டுக் கொடுக்காதவர் என்றும், காங்கிரசையும், வசந்தகுமாரையும் பிரித்துப் பார்க்க முடியாது” என்றும், கூறியுள்ளார்.

பீட்டர் அல்போன்ஸ், காங்கிரஸ்

“பிரச்சனைகளைச் சிரித்த முகத்தோடு எதிர்கொண்டவர் வசந்தகுமார்” என்றும், குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த்

“அருமை நண்பர் வசந்தகுமார் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது. வசந்தகுமார் குடும்பத்தாருக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்” என்று கூறியுள்ளார்.

நடிகர் ராதா ரவி

“அண்ணன் வசந்தகுமார் எம்.பி காலமாகிவிட்டார் என்ற செய்திக் கேட்டு மிகவும் அதிர்ச்சியுற்றேன். அவர் மீண்டு வந்துவிட வேண்டும் என்று மனம் மிகவும் ஏங்கியது. எனது குடும்ப நண்பரை இழந்துவிட்டேன். ஒட்டு மொத்த தமிழகத்துக்கே அவருடைய இழப்பு ஈடுசெய்ய முடியாதது. ஏனென்றால், ஒவ்வொருவருடைய குடும்பத்திலும் கலந்துவிட்டவர் வசந்தகுமார். நம் வீட்டில் இருக்கும் ஏதோ ஒரு பொருள் அவரை நினைவுபடுத்தும். அந்தளவுக்குத் தமிழகத்தில் வியாபாரத்தில் கொடிகட்டிப் பறந்தார். மேலும் அவர் எனக்குத் தயாரிப்பாளரும் கூட, அவர் தயாரித்த படத்தில் நான் நடித்துள்ளேன்.  தன் வாழ்நாளில் அரசியல், தனிப்பட்ட வாழ்க்கை, தொழில் என அனைத்தையும் சீரான முறையில் கையாண்டவர் வசந்தகுமார். எப்போது சென்றாலும் சிரித்த முகத்துடன் வரவேற்பவர். அவர் முகத்தில் சிரிப்பு இல்லாமல் நான் பார்த்த நாட்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்தளவுக்குப் புன்னகையுடனே இருந்தவர். இப்போது அந்த சிரிப்பு இல்லாத முகத்தை நான் எப்படிக் காண்பேன். பணிவானவர், நேர்மையானவர், தொலைநோக்கு பார்வை கொண்ட மனிதர் என வசந்தகுமாரைப் பற்றி வார்த்தைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்” என்றும், நடிகர் ராதா ரவி புகழாரம் சூட்டியுள்ளார். 

கவிஞர் வைரமுத்து

“வசந்தகுமார் எம்.பி. மறைவு இதயத்தை ஒருகணம் அசைத்துவிட்டது. குமரியில் பிறந்து இமயம் வரை பரவிய கறுப்புத் தமிழர் காலமாகிவிட்டார். அவர் உழைப்புத் தேனீ. ஓயாக் கடல். அடித்தட்டு மக்களின் அன்பர். பூமிக்கு வந்த வசந்தமாய்ப் போய்விட்டார். அவர் புகழ் வாழ்க!” என்று புகழ் மாலை பாடியுள்ளார்.  

நடிகை குஷ்பு, காங்கிரஸ்

“வசந்தகுமார் மறைவு அதிர்ச்சியளிக்கிறது. மிகச்சிறந்த கடின உழைப்பாளரை நாம் இழந்து விட்டோம்” என்றும் நினைவு கூர்ந்துள்ளார். 

ஜாகுவார் தங்கம், சினிமா ஸ்டண்ட் மாஸ்டர்

“வசந்தகுமாரின் மறைவு காங்கிரஸ் கட்சிக்குப் பேரிழப்பு. நல்ல மனிதரை கொரோனா கொன்று விட்டது” என்று, சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம்
கூறியுள்ளார். 

இப்படியாக, குமரியின் நாயகனுக்குக் கண்ணீர் அஞ்சலிகள் பெருக்கெடுத்து வருகின்றன.

இதனிடையே, காங்கிரஸ் எம்பி எச்.வசந்தகுமார் இறந்த செய்தி கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த அவரது சகோதரர் குமரி அனந்தன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Leave a Comment