லெபானில் விபத்து ஏற்படுத்திய அமோனியம் நைட்ரேட், சென்னையிலும் டன் கணக்கில் இருக்கிறது!

லெபானில் விபத்து ஏற்படுத்திய அமோனியம் நைட்ரேட், சென்னையிலும் டன் கணக்கில் இருக்கிறது! - Daily news


கடந்த 3 நாட்களுக்கு முன் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் அமோனியம் நைட்ரேட் எனும் எரிபொருள் சேமிப்புக்கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்து அந்நாட்டில் மிகப்பெரும் சேதத்தை விளைவித்தது.

அணு ஆயுதங்கள் வெடித்து சிதறியதைப்போல் பயங்கரமான சத்தமும் நிலஅதிர்வும் பெய்ரூட்டில் இந்த குண்டுவெடிப்பு ஏற்படுத்தியிருந்தது. இதன் வீடியோ சாட்சியங்கள்யாவும், உலகையே அச்சுறுத்தியது.

விபத்தைத் தொடர்ந்து, லெபனான் பொதுப் பாதுகாப்புத் தலைவர் ஜெனரல் அப்பாஸ் இப்ராஹிம் குண்டு வெடிப்பு நடந்த பெய்ரூட் துறைமுகத்ததை பார்வையிட்டார்,

அப்போது அவர் கூறுகையில், ``வெடிகுண்டுகள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கிடங்கில் விபத்து ஏற்பட்டு வெடித்து சிதறியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. வெடித்து சிதறிய வெடி பொருள்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு பறிமுதல் செய்யப்பட்டது. 

அணு ஆயுதங்கள் வெடித்து சிதறியதைப்போல் பயங்கரமான சத்தமும் நிலஅதிர்வும் லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில் இந்த குண்டுவெடிப்பு ஏற்படுத்தி உள்ளது. இந்த வெடிவிபத்தால் ஏற்பட்ட நில அதிர்வு 234 கி.மீ. தொலைவில் உள்ள சைப்ரஸ் நாட்டில் உணரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த விபத்தில் தற்போது வரை 80 பேர் உயிரிழந்திருப்பதாகவும், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் லெபனான் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. சம்பவம் நடந்த இடத்தின் சுற்றளவு முழுவதும் கடும் சேதம் அடைந்துள்ளது. 200 மீ தொலைவில் உள்ள தீவிலும் விபத்தின் தாக்கம் உணரப்பட்டது.

வெடி விபத்து நடந்த கட்டடத்தின் அருகே 3 மணி நேரத்திற்கு முன்னதாக தீ விபத்து ஒன்று நடந்துள்ளது. அந்த தீயை அணைக்கும் பணியில் இருந்தவர்கள், வெடிவிபத்தால் மாயமாகியுள்ளனர். அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்ற அச்சம் நீடிக்கிறது.

விபத்து தொடர்பாக லெபனான் அரசு உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், துறைமுகத்தில் உள்ள சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த மிகவும் ஆபத்து நிறைந்த வெடிக்கக்கூடிய அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருளால் தான் இந்த கோரவிபத்து நடைபெற்றுள்ளதாக லெபனான் பிரதமர் ஹசன் டியப் தெரிவித்துள்ளார்.

”எந்தவித பாதுகாப்பு நடைமுறைகளும் பின்பற்றப்படாமல் மக்களுக்கு ஆபத்து தரக்கூடிய வகையில் பெய்ரூட் துறைமுகத்தில் உள்ள சேமிப்பு கிடங்கில் 6 ஆண்டுகளாக 2 ஆயிரத்து 750 டன் அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனால் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.

இந்த கொடூர விபத்துக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு உச்சபட்ச தண்டனையை கொடுக்கும் வரை நான் ஓயப்போவதில்லை’’ என்று அவர் கூறியிருந்தார்.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நடைபெற்ற அந்த வெடிவிபத்தில் அந்நகரம் மட்டுமல்லாது லெபனானின் ஒட்டுமொத்த சேமிப்பே 70 சதவீதம் சேதமடைந்ததாக தகவல் வெளியானது.

இதேபோன்ற அமோனியம் நைட்ரைட், சென்னையில் 5 ஆண்டுகளாக இருப்பது தற்போது தெரியவந்துள்ளது. சென்னையில் 740 டன் அமோனியம் நைட்ரேட் இருக்கின்றதாம். இவற்றை உடனடியாக அகற்ற வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைக்கின்றனர்.

2015-ம் ஆண்டு சென்னை துறைமுகத்தில் கண்டெய்னர் மூலமாக அமோனியம் நைட்ரேட் சட்டவிரோதமாக கொண்டுச் செல்லப்பட்டபோது சுமார் 740 டன் கைப்பற்றப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் இதை அப்புறப்படுத்தி வேறு வகையில் உரமாக பயன்படுத்தவேண்டும் என பாமக தலைவர் ராமதாஸ் ட்வீட் வழியாக இன்று வலியுறுத்தினார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “சென்னை துறைமுகத்தை ஒட்டிய கிடங்கு ஒன்றில் 740 டன் அமோனியம் நைட்ரேட் எனும் வெடிமருந்து 5 ஆண்டுகளாக இருப்பு வைக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. லெபனான் நாட்டில் மிகப்பெரிய வெடிவிபத்து ஏற்பட்டதற்கு இந்த வெடிமருந்து தான் காரணமாகும்.

சென்னை கிடங்கில் உள்ள அமோனியம் நைட்ரேட்டால் அதேபோன்ற வெடிவிபத்து ஏற்படும் ஆபத்து உள்ளது. அதைத் தடுக்க சென்னை கிடங்கில் உள்ள அமோனியம் நைட்ரேட் வெடிமருந்தை பாதுகாப்பாக அப்புறப்படுத்தி, உரம் தயாரிப்பு போன்ற பிற தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்

சென்னை கிடங்கில் உள்ள அமோனியம் நைட்ரேட்டால் அதேபோன்ற வெடிவிபத்து ஏற்படும் ஆபத்து உள்ளது. அதைத் தடுக்க சென்னை கிடங்கில் உள்ள அமோனியம் நைட்ரேட் வெடிமருந்தை பாதுகாப்பாக அப்புறப்படுத்தி, உரம் தயாரிப்பு போன்ற பிற தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று கூறியிருந்தார்.

பயிர்களுக்கு தழைச்சத்து கிடைப்பதற்காக அம்மோனியம் நைட்ரேட் உரமாக பயன்படுத்தப்படும் நிலையில், கட்டிடங்களை இடிக்கவும், பாறைகளை உடைக்க மற்றும் கிணறுகள் தோண்டுவதற்கு தேவையான வெடிபொருட்கள் தயாரிக்கவும் அம்மோனியம் நைட்ரேட் உதவுகிறது. இருப்பினும், அம்மோனியம் நைட்ரேட் எளிதாக வெடிக்கும் ரசாயனம் இல்லை என அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இப்படியான அம்மோனியம் நைட்ரேட்டை ஒரு அளவுக்கு மேல், ஓரிடத்தில் நீண்டகாலமாக வைத்திருந்தால், அது குறிப்பிட்ட அளவு வெப்பத்தை வெளியிடும் எனக் கூறப்படுகிறது. அதில் இருந்து வெளியாகும் வெப்பமே, நெருப்பாக மாறும் என்றும், அம்மோனியம் நைட்ரேட்டில் இருந்து ஆக்சிஜன் வெளியாகும் என்பதால், அதுவே தீ கொழுந்துவிட்டு எரிய வாய்ப்பாக இருக்கும் என்றும் கூறுகின்றனர். இது எரியும்போது சிவப்பு நிற புகையை வெளியிடும் என்றும், அதிக நச்சுத்தன்மை கொண்ட இந்த புகை மனிதர்களை நொடியில் கொல்லும் திறனுடையது என்றும் எச்சரிக்கின்றனர்.

சென்னையில் கடந்த 5 வருடங்களாக இந்த கெமிக்கல் சேமித்து வைக்கப்பட்டிருப்பதால், பலருக்கும் அச்சம் எழுந்தது. இதை தொடர்ந்து, சென்னை சுங்கதுறை அலுவலகம் சேமித்து வைக்கப்பட்டுள்ள அம்மோனியம் நைட்ரேட் குறித்து விளக்கம் கொடுத்துள்ளது. அதில், சென்னையில் சுங்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட 740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட் மணலியில் உள்ள சுங்கத்துறை சொந்தமான வேதிகிடங்கில் பாதுகாப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், மணலியில் உள்ள வேதிக்கிடங்கை சுற்றிலும் குடியிருப்புகள் இல்லை;  அதனால் மக்கள் அச்சப்பட தேவையில்லை எனவும் கடந்த ஆறு வருடமாக சேமித்து வைக்கப்பட்டுள்ள அம்மோனியம் நைட்ரேட் நிபுணர்களால் ஆய்வு செய்யப்பட்டு பாதுகாப்புடன் உள்ளதாகவும், மேலும் தற்போது கொரோனா காலம் என்பதால் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இ- ஆக்சன் முறையில் 740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட் ஏலம் விடும் நடவடிக்கையில் உள்ளது என சுங்கதுறை விளக்கம் தெரிவித்துள்ளது. 

இதைத்தொடர்ந்து சென்னை மக்கள் சற்றே பெருமூச்சு விட்டுள்ளனர்.

Leave a Comment