கோவையில் 13 வயது சிறுமியைக் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய காதலன், தனது நண்பருடன் இணைந்து அந்த சிறுமியை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை கவுண்டம் பாளையம் பிரபு நகர் பகுதியைச் சேர்ந்த 23 வயதான சந்தோஷ், அப்பகுதியில் உள்ள தனியார் மினரல் வாட்டர் நிறுவனத்தில் பணி ஆற்றி வருகிறார். 

இளைஞர் சந்தோஷ், அந்த பகுதியில் உள்ள பெரிய நாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமியைக் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி, கடந்த பல மாதங்களாக பின் தொடர்ந்து சென்று, தனது காதல் வலையில் வீழ்த்தி உள்ளார். இதனால், அந்த சிறுமியும் சந்தோஷை காதலிக்க ஆரம்பித்துள்ளார்.

இப்படியாக இருவரும் கடந்த சில நாட்களாக காதலித்து வந்த நிலையில், சிறுமியிடம் “வாழ்க்கை குறித்து நிறைய பேச வேண்டும்” என்று, சந்தோஷ் அந்த சிறுமியை தனியாக அழைத்துள்ளார். சிறுமியும், “காதலன் தானே அழைக்கிறான்” என்று நம்பி தனியாக வந்துள்ளார்.

அப்போது, கடந்த 4 ஆம் தேதி அன்று, காதலனைப் பார்க்க சிறுமி வந்துள்ளார். அந்த பகுதியில் உள்ள ஒரு பொதுவான இடத்திற்கு சிறுமி முதலில் வந்து நின்றுள்ளார். அந்த இடத்திற்கு வந்த சந்தோஷ், அந்த சிறுமியை அங்கிருந்து தனது இருசக்கர வானத்தில் அழைத்துக்கொண்டு, கவுண்டபாளையம் அருகில் உள்ள குப்பை கிடங்கு பகுதிக்கு சிறுமியை அழைத்துச் சென்று உள்ளார்.

ஆனால், அந்த இடத்தில் சந்தோஷின் நண்பர் சதீஷ், அங்கு ஏற்கனவே காத்திருந்திருந்துள்ளார். சந்தோஷ் தன் காதலியை அங்கு அழைத்து வந்ததும், சந்தோஷ்
மற்றும் அவரது நண்பன் சதீஷ் ஆகிய இருவரும் சேர்ந்து சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இதனையடுத்து, அவர்கள் இருவரும், சிறுமியிடம் “இது குறித்து வெளியே சொன்னால், கொலை செய்து விடுவோம்” என்றும், கடுமையாக மிரட்டி அனுப்பி உள்ளனர்.

இதனால், அழுதுகொண்டே வீடு திரும்பிய சிறுமி, இது தொடர்பாக தனது பெற்றோரிடம் அழுதுகொண்டே கூறி உள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், இது குறித்து அங்குள்ள காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த துடியலூர் அனைத்து மகளிர் காவல் துறையினர், சந்தோஷ் மற்றும் அவரது நண்பர் சதீஷ் ஆகிய இருவரையும் கைது செய்து, விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உண்மை என்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து, அவர்கள் இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனையடுத்து, அவர்கள் இருவரும் கோவை
மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 

இதனிடையே, 13 வயது சிறுமியைக் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய காதலன், தனது நண்பருடன் இணைந்து அந்த சிறுமியை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம், கோவையில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.