அதிமுக அவசர கூட்டத்தில் இபிஎஸ் - ஓபிஎஸ் இடையே மீண்டும் மோதல்?

அதிமுக அவசர கூட்டத்தில் இபிஎஸ் - ஓபிஎஸ் இடையே மீண்டும் மோதல்? - Daily news

அதிமுக அவசர ஆலோசனைக் கூட்டத்தில் வழிகாட்டுதல் குழு அமைக்கும் விவகாரத்தில் இபிஎஸ் - ஓபிஎஸ் தரப்பினருக்கிடையே கருத்து மோதல் ஏற்பட்டு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கொரோனா ஊரடங்கு காலத்திலும் தமிழகத்தின் அரசியல் தேர்தல் களம் தற்போது சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.

அதிமுக வின் அவசர உயர்மட்ட குழு ஆலோசனைக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் அமைந்து உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு முதலமைச்சரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி; அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் தலைமை தாங்கினர்.

இந்த கூட்டத்தில் துணை ஒருங்கிணைப்பாளர்களான கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, கடம்பூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர்களும், அமைப்புச் செயலாளர்களான பொன்னையன், உள்பட உயர்மட்ட குழு நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்திற்கு கலந்துகொள்வதற்காக, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கட்சி அலுவலகத்துக்கு வருகை தந்தார். அப்போது, அங்கு திரண்டிருந்த அவரது ஆதரவாளர்கள் “அம்மாவின் அரசியல் வாரிசு வாழ்க, நாளைய முதல்வர் வாழ்க” என்று கோஷங்கள் எழுப்பினர். அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் பழனிசாமியும், அங்கு வருகை தந்தார். அப்போது, அவரது ஆதரவாளர்கள், “தமிழகத்தின் நிரந்தர முதல்வர் வாழ்க, தமிழகத்தின் விடிவெள்ளி வாழ்க” என்று கோஷங்களை எழுப்பினர். 

கடந்த மாதம் “அதிமுக வின் முதலமைச்சர் வேட்பாளர் யார்?” என்ற அக்கட்சிக்குள் பிரச்சனை வெடித்த போது, அக்கட்சியின் அமைச்சர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான மாறுபட்ட கருத்துகளைத் தெரிவித்தனர். இதனால், அந்த கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டு முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் அக்கட்சியின் மூத்த அமைச்சர்கள் குழுவாகச் சேர்ந்து இருவரிடமும் தனித்தனியாக அவசர ஆலோசனைகள் நடத்தினர். இதன் காரணமாக, அதிமுக வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் இது போன்ற ஒரு பிச்சனை உருவாவதற்கான தூபம் போட்டது போல் ஆகிவிட்டது.

தொண்டர்கள் கோஷங்கள் எழுப்பிய விவகாரம் நேற்றைய உயர் மட்ட ஆலோசனைக் கூட்டத்திலும் எதிரொலித்ததாகத் தெரிகிறது. இதனால், அந்த கூட்டத்தில் காரசார விவாதமும் நடைபெற்றது.

மேலும், “நமது கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் எடுத்த தீர்மானத்தின் படி, கட்சிக்காக 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை நியமிக்க வேண்டும். அந்த கூட்டத்தின் ஆலோசனையின்படியே கட்சியும், ஆட்சியும் நடக்கவேண்டும். கட்சியில் நாங்கள் சேரும்போது இப்படித்தான் முடிவும் எடுக்கப்பட்டது. அதை ஏன் 

இன்னும் செய்யவில்லை? எனவே உடனடியாக அந்த 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை அமைக்கவேண்டும்” என்று, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும், அவரது ஆதரவாளர்களும் வலியுறுத்தினார்கள். 

இதற்குப் பதில் அளித்துப் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, “இப்போதைய நிலையில் அந்த குழுவை அமைக்க முடியாது. என்னை நம்பி ஏராளமானோர் கட்சியில் இருக்கிறார்கள். நான் யாரை அக்குழுவில் நியமிப்பது? எந்த அடிப்படையில் நிர்வாகிகளை அக்குழுவுக்காகத் தேர்வு செய்வது? எனவே அந்த குழுவை நியமிப்பது தற்போது சாத்தியம் இல்லை” என்று, திட்டவட்டமாகக் கூறிவிட்டார். இதனால், அவர்களுக்குள் காரசார விவாதாம் நடைபெற்றது.

இந்நிலையில், கட்சியின் செயற்குழு கூட்டம் வருகிற 28 ஆம் தேதி கூடும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதிமுகவின் இந்த கட்சியின் செயற்குழு கூட்டத்தில், அதிமுக தொடர்ச்சியாக 3 வது முறை வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் முனைப்பில் தீவிரம் காட்டி வருகிறது. ஆனால், வரும் தேர்தலில் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்ற ஒற்றை கேள்வியால், நேற்றைய தினம் அதிமுகவின் அவசர ஆலோசனைக் கூட்டமும் நடத்தப்பட்டது. ஆனால், எந்த முடிவும் எடுக்க முடியாத பட்சத்தில், கட்சியின் செயற்குழு கூட்டம் கூடி ஒரு முடிவைத் தீர்மானமாக எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதன் காரணமாக, இபிஎஸ் - ஓபிஎஸ் இடையே மீண்டும் மோதல் உருவாகி உள்ளதாக, அக்கட்சிக்குள் கிசி கிசுக்கப்படுகிறது. 

இதனிடையே, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டில் நேற்று இரவு மூத்த அமைச்சர்களான தங்கமணி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர். இதில், கட்சியின் உட்கட்சி விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment