கோவிட்-19 கொரோனா வைரஸ் உலக அளவில் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்டோரின் உயிரைப் பறித்துள்ளது. உருவாகி ஆறு மாதத்தில் இத்தனை உயிர்களைப் பலிவாங்கியுள்ள கொரோனா, மாபெரும் கொள்ளைநோயாக உருமாறியுள்ளது என்பது மறுப்பதற்கில்லை.

அந்தவகையில், கொரோனாவுக்கான தடுப்பு மருந்துகளைக் கண்டறிய ஆய்வாளர்கள் முனைப்பாக உள்ளனர். அதேநேரம் உயிரிழப்புகளைத் தவிர்க்கவேண்டி, கொரோனாவை குணப்படுத்தும் அல்லது கொரோனா தீவிரத்தைக் குறைக்கும் மருந்துகளைக் கண்டறிவதிலும் அனைவரும் முனைப்பைக் காட்டி வருகிறார்கள்.

கோவிட்-19 வைரஸுக்கு எதிரான இந்த மருந்து கண்டுபிடிப்பின் நடவடிக்கைகள் அனைத்தும், தற்போது முழு வீச்சில் இறங்கியுள்ளன. இருப்பினும், இந்த வைரஸ் புதிய வகை என்பதாலும், இதன் தன்மை மாறிக்கொண்டே இருக்கிறது என்பதாலும் இதை முழுமையாகப் புரிந்து கொள்வதில் பல சிக்கல் இருப்பதாகச் சொல்கிறார்கள் அறிவியலாளர்கள். இதனால் மருந்து கண்டுபிடிப்பின் பணியும் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது.

கொரோனா பாதிப்பைக் குறைக்கும் மருந்துகளின், சீனாவில் வைரஸ் தொற்று உச்சத்திலிருந்த போது, ஹெச்.ஐ.வி. தொற்றுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படும் லோபினாவிர் மற்றும் ரெமெடிசிவிர் ஆகியவை பயன்படுத்தப்பட்டன.

அந்தநேரத்தில் இந்த மருந்துகளை அமெரிக்கா உள்படப் பல உலக நாடுகளும் தங்கள் நாட்டின் கொரோனா நோயாளிகளுக்கு வழங்கி வந்தன. 

இதைத்தொடர்ந்து, கோவிட் - 19 நோய் மலேரியா காய்ச்சலுக்கு ஒத்த பாதிப்புகளை ஏற்படுத்தியது தெரியவந்ததால், அதற்கு மருந்தாகப் பயன்படுத்தப்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயினை பயன்படுத்தலாம் என மருத்துவக் குழுக்கள் பரிந்துரைத்தனர். அதைத்தொடர்ந்து, கொரோனா சிகிச்சையிலிருந்த பலருக்கும் இந்த மருந்தும் பயன்படுத்தப்பட்டது. 

இந்த மருந்தை மருத்துவர்கள் பயன்படுத்தத் தொடங்கிய சில தினங்களில், உலக சுகாதார மையமும் ஹைட்ராக்ஸி குளோரோகுயினை கொரோனா சிகிச்சையில் பயன்படுத்தப் பரிந்துரைத்தது. இதைக்கண்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கொரோனாவுக்கு எதிரான கேம் சேஞ்சராக ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் இருக்கும் எனத் தெரிவித்திருந்தார்.

ஆனால், அங்கும் சிக்கல் ஏற்பட்டது.  கொரோனாவுக்கு எதிராகச் செயல்படுவதில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை எனக்கூறி, எதிர்ப்பு தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் சபை, ஹைட்ராக்ஸி குளோரோகுயினை கொரோனா நோயாளிகளுக்குப் பயன்படுத்துவதால், அவர்களில் இறப்பு விகிதங்கள் மற்றும் ஒழுங்கற்ற இதயத் துடிப்புகளையும் ஏற்படுத்துவதாகப் புகார் எழுப்பப்பட்டது. இதனிடையே, கொரோனாவுக்கு எதிராகச் செயல்படலாம் அல்லது செயல்படாமலும் போகலாம் எனக்கூறி உலக சுகாதார நிறுவனம், தனது கருத்தில் பின்வாங்கியது. 

சில தினங்களிலேயே, மீண்டும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்து கொரோனா வைரஸை தடுக்குமா, அதன் சிகிச்சைக்கு உதவுமா என்பது குறித்து மீண்டும் ஆராய்ச்சி செய்ய விரும்புவதாக உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் ஜென்ரல் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்தார். உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானியும், தமிழருமான சௌமியா சாமிநாதன் ஹைட்ராக்ஸிகுளோரோகுயினை தவிரப் பிற மருந்துகளுக்கான சோதனைகளையும் தாங்கள் செய்ய விரும்புவதாகச் சொல்லி, வேறு மருந்துகளையும் பரிந்துரைக்குமாறு உலக நாடுகள் அனைத்துக்கும் தெரிவித்தார். இப்படி கொரோனா தொற்றாளர்களுக்கு அளிக்கப்படும் மருந்துகள் தொற்றுக்கு எதிராகச் செயல்படுகிறதா இல்லையா என்பதை பாதிக்கப்பட்டவர்களுக்குத் தெரியப்படுத்துவது தங்களின் கடமை எனக் கூறினார் அவர். 

இப்படி ஹைட்ராக்ஸிகுளோரோகுயினை தொடர் ஆய்வுக்கு உட்படுத்தி வந்த உலக சுகாதார நிறுவனம், நேற்றைய தினம், ``இந்த மருந்து, எந்த பாதிப்பையும் குறைப்பதில்லை. குறிப்பாக இவை இறப்பைத் தடுப்பதில்லை. இந்த மருந்து மட்டுமல்ல, சீனாவில் பரிந்துரைக்கப்பட்ட ஹெச்.ஐ.வி. மருந்தும் எதையும் தடுப்பதில்லை. ஆகவே உலக மருத்துவர்கள் யாரும் இதை தங்களின் நோயாளிகளுக்குத் தரவேண்டாம். இது யாரையும் இறப்புக்கும் தள்ளவில்லை என்றாலும், க்ளினிக்கல் ட்ரையலில் இது பாதுகாப்பற்ற மருந்து எனத் தெரியவந்துள்ளது" எனக் கூறியுள்ளனர் அதிகாரிகள். 

இதைத் தொடர்ந்து, மருத்துவர்கள் இதன் உபயோகத்தை நிறுத்தியுள்ளனர். 

- ஜெ.நிவேதா.