தமிழகத்தில் நேற்று (செப் 12), 5,495 பேருக்கு கொரோனா தொற்று புதிதாக உறுதி செய்யப்பட்டது. அவர்களில், சென்னையில் 978 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதுவரை தமிழகத்தில் கொரோனா தொற்றால் 76 பேர் உயிரிழந்துள்ளனர். 

தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்தம் எண்ணிக்கை 4,97,066 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல மாநிலத்தில் மொத்த இறப்பு எண்ணிக்கை 8,307 ஆக உயர்ந்தது.

அதேநேரத்தில் நேற்று மட்டும் 6,227 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள். இதன்மூலம், இதுவரை மொத்தம் 4,41,649 பேர் குணமடைந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர். 47,110 பேர் மருத்துவமனை மற்றும் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

நேற்றைய தினம் 88,562 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டது. இதுவரை தமிழகத்தில் 58,19,012 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது.

மாநிலம் முழுக்க, கொரோனா தடுப்புக்கான பணிகள் அரசு சார்பில் வேகமாக நடைபெற்று வருகின்றன. அதன் ஒருபகுதியாக புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணி குறித்த ஆய்வு கூட்டம், இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழக சுகாதாரத்துறை மற்றும் மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நிருபர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர்,

``தமிழகத்தில் உருவாக்கப்பட்ட வலுவான சுகாதார கட்டமைப்பால்தான் கொரோனா இறப்பு விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் ஆர்.டி. பி.சி.ஆர். மூலம் 85 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வரும் ஒரே மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.

தமிழகத்தில் 2 ஆயிரம் மினி கிளினிக் மூலம் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இவை விரைவில் செயல்பாட்டுக்கு வந்து விடும். அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தடுப்பூசி வரும் வரை முகக்கவசத்தை கட்டாயம் பொதுமக்கள் அணிய வேண்டும். கொரோனா தடுப்பு பணிகளுடன் மலேரியா, டெங்கு போன்ற மழைக்கால நோய் பரவல் தடுப்பு பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனைகள் சேவை மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும். கொரோனா சிகிச்சைக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூலித்த 4 தனியார் மருத்துவமனைகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற குற்றச்சாட்டுகள் மேலும் வந்தால் இன்னும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்"

இவ்வாறு அவர் கூறினார்.

இருப்பினும், கடந்த்அ சில தினங்களுக்கு முன் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், உலக சுகாதார நிறுவனத்தின் அதிகாரிகள், மாஸ்க் அணிவதால் கொரோனா வைரஸ் பரவாது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை எனக்கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அவர்கள் அவ்வாறு குறிப்பிட காரணம், தொற்றைப் பரப்பக்கூடிய நுண்ணிய எச்சில் மற்றும் சளி துளிகளைத் தடுக்கும் ஒரு தடையாக மாஸ்க் உள்ளது என்பது சமீபத்திய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. மற்றபடி கொரோனா பரவலை மாஸ்க் தடுக்குமா என்றால் அது கேள்விக்குறிதான்.

உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மருத்துவ மாஸ்க்கை அணிய வேண்டும் எனவும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ’’மக்கள் பொது இடங்களில் மாஸ்க் அணிவதை அந்தந்த நாடுகளின் அரசுகள் ஊக்குவிக்க வேண்டும் என நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்’’ என்கிறார் உலக சுகாதார நிறுவனத்தை சேர்ந்த மருத்துவர் மரியா.

எப்படியிருந்தாலும், மாஸ்க் அணிவதால் முழு பாதுகாப்புடன் இருப்பதாக மக்கள் உணர வேண்டாம் என்றும், கொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்குப் பரவுவதை மாஸ்க் குறைக்கும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

‘’மாஸ்க் மட்டுமே கோவிட் 19 வைரஸிடம் இருந்து உங்களை பாதுகாக்காது’’ என்கிறார் உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரெயெசஸ். இப்போதைய குறைந்தபட்ச நடவடிக்கையாக மாஸ்க் இருந்துவருகின்றது என்பதால், அதை அவர்கள் முன்னிறுத்தி பரிந்துரைக்கின்றனர்.