விழுப்புரம் பாஜக மாவட்ட தலைவர் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய மகளிரணி பொதுச்செயலாளர், கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டதால் அதிரடியாக அந்த கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். 

விழுப்புரம் மாவட்ட பாஜக வில் தான், பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு, புயலை கிளப்பி இருக்கிறது.

விழுப்புரம் மாவட்ட பாஜக வின் மகளிரணி பொதுச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வருகிறார் காயத்திரி. அங்குள்ள கண்டாச்சிபுரம் பகுதியைச் சேர்ந்த பாஜக வின் மாவட்ட மகளிரணி பொதுச் செயலாளர் காயத்திரி, “விழுப்புரம் மாவட்ட பாஜக தலைவர் வி.ஏ.டி. கலியவரதன் மீது பாலியல் புகார், பண மோசடி மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி பாஜக தலைமைக்கு, பரபரப்பான புகார் கடிதம் அனுப்பி வைத்தார். இந்த கடிதம், அந்த கட்சியின் சக உறுப்பினர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

அந்த பாலியல் குற்றச்சாட்டுக் கடிதத்தில், “நான் விழுப்புரம் மாவட்ட மகளிர் அணி பொதுச் செயலாளராக உள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ள அவர், “எனக்கு மாவட்ட தலைவி பொறுப்பு வாங்கி தருவதாகக் கூறி, விழுப்புரம் மாவட்ட தலைவர் வி.ஏ.டி. கலியவரதன் 5 லட்சம் ரூபாய் பணம் பெற்றுள்ளார்” என்று குற்றம்சாட்டி உள்ளார்.

மேலும் “என்னை மிரட்டி பல முறை அவர் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார்” என்றும், பகிரங்கமாகவே காயத்திரி குற்றம்சாட்டி இருந்தார். 

அத்துடன், “இந்த பாலியல் பலாத்கார அநியாயங்களை வெளியே சொன்னால், என்னை கொலை செய்து விடுவதாகவும்” தொடர்ச்சியாக என்னை மிரட்டி வருகிறார்” என்றும், கூறியுள்ளார். 

“என்னைப் போன்று பல பெண்களின் வாழ்க்கையில் அவர், தொடர்ச்சியாகச் சீரழித்து உள்ளார் என்றும், இதனால் அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்றும், அந்த கடிதத்தில், அவர் பரபரப்பான குற்றச்சாட்டைக் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த பாலியல் குற்றச் சாட்டுக் கடிதமானது, விழுப்புரம் மாவட்ட பாஜகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது, இதனால், சம்மந்தப்பட்டவர் மீது சட்டப்படியான நடவடிக்கை பாயலாம் என்றும் கூறப்பட்டது. 

மேலும், கடந்த வாரம் தமிழகம் வந்த அமித்ஷா, டெல்லி திரும்பியதும், இந்த பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுக்கள் பற்றி மேலிடம் விசாரணை நடத்தும் என்றும், நடவடிக்கை எடுக்கும் என்றும் பாஜக வட்டாரத்தில் பேசப்பட்டது. ஆனால், இந்த புகார் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதாக பாதிக்கப்பட்ட பாஜக மாவட்ட மகளிரணி பொதுச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வருகிறார் காயத்திரிக்கு தெரிய வந்தது. இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அவர், நேரடியாக மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்தார். இதனால், பாஜக வட்டாரத்தில் மேலும் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதனையடுத்து, “விழுப்புரம் மாவட்ட மகளிர் அணி பொதுச் செயலாளர் காயத்திரி ஐயப்பன், கட்சிக்கு களங்கமும் அவப்பெயர் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக கூறி கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக” தமிழக பாஜக தெரிவித்து உள்ளது. 

அத்துடன், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட காயத்திரியிடம் பாஜக நிர்வாகிகள் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது” என்றும், தமிழக பாஜக தலைலை கூறியுள்ளது. இந்த சம்பவம், தமிழக பாஜகவில் கடும் அதிர்ச்சியையும், சலசலப்பையும் ஏற்படுத்தி உள்ள நிலையில், மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.