2 மகன்களை விசாரணைக்கு அழைத்துச் சென்று போலீசார் கொடுமைப்படுத்தியதாகப் பகிரங்க குற்றச்சாட்டிய பெண் ஒருவர், போலீசார் முன்னிலையில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை சுத்தமல்லியில் போலீசார் முன்னிலையில் தான், இப்படி ஒரு கொடூர சம்பவம் அரங்கேறி உள்ளது.

நெல்லை சுத்தமல்லி சத்யா நகரை சேர்ந்த சகுந்தலாவின் இளைய மகன் பிரதீப் மீது, ஏற்கனவே போக்சோ வழக்கு உள்ளது. இந்த நிலையில், தற்போது திருட்டு வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார். 

இதே வழக்கில் சகுந்தலாவின் மூத்த மகன் பிரசாந்த்தைக் கைது செய்ய இன்று காலை சுத்தமல்லி காவல் நிலைய ஆய்வாளர் குமாரி சித்ரா தலைமையிலான போலீசார், அவரது வீட்டிற்குச் சென்றனர்.

இதனால், அதிர்ச்சியடைந்த அவரது தாயார், “எந்த காரணமின்றி தனது மகன்களை போலீசார் கைது செய்வதாக” தாயார் சகுந்தலா குற்றம்சாட்டினார்.

இதனையடுத்து, தனது மூத்த மகன் பிரசாந்த்தை போலீசார் கைது செய்ய விடாமல் தடுத்து உள்ளார். அப்போது, சகுந்தலாவை காவல் துறையினர் தரக்குறைவாகத் திட்டியதாகக் கூறப்படுகிறது. 

ஏற்கனவே, மகன்களின் கைதால் அக்கம் பக்கத்தினரால் கடும் ஏளனத்திற்கு ஆளான சகுந்தலா, போலீசார் திட்டியதன் மூலம் மேலும் அவமானத்திற்கு உள்ளானார். இதனையடுத்து, அவமானம் தாங்காமல் காவல் ஆய்வாளர் முன்னிலையில் வீட்டுக்குள் சென்று சகுந்தலா, தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

சகுந்தலாவின் உடலில் தீ பற்றி எரிந்த நிலையில், வலி தாங்காமல் துடித்து அவர், இங்கும் அங்குமாக ஓடிய படியே அலறியபடியே வீட்டை விட்டு வெளியே ஓடி வந்துள்ளார். அப்போது, அவரை போலீசார் மற்றும் அக்கம் பக்கத்தினர் காப்பாற்ற முயன்றனர். ஆனால், போலீசார் தீயை அணைப்பதற்குள் அவர் உடல் முழுவதும் எரிந்து உள்ளது. 

இதனால், உடல் முழுவதும் தீயால் கருகிய நிலையில் இருந்த சகுந்தலாவை மீட்ட போலீசார், பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தகவல், அப்பகுதி முழுவதும் காட்டு தீ போல் பரவியது.

இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், சுத்தமல்லி காவல் நிலையத்தில் விசாரணை நடத்தி வருகிறார். 
சகுந்தலாவின் குற்றச்சாட்டு, அதைத் தொடந்து நேர்ந்த அவரது உயிரிழப்பு குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், காவல் நிலையத்தில் பணியில் இருந்த சக போலீசாரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.

அதாவது, “கடந்த 3 ஆம் தேதி, சுத்தமல்லியில் 13 சவரன் நகை, லேப்டாப் கொள்ளை அடிக்கப்பட்டது. இந்த வழக்கில், சந்தேகத்தின் அடிப்படையில் பிரதீப், அன்புராஜ், அருள் ராஜ் ஆகிய 3 பேரிடமும்” போலீசார் விசாரணை நடத்தினர். இதில் தாங்கள் திருடியதை அவர்கள் 3 பேரும் ஒப்புக் கொண்டனர். அதன் பேரில்3 பேரையும் நேற்று போலீசார் கைது செய்தனர். 

இதனையடுத்து, விசாரணைக்காக பிரதீப்பின் சகோதரர் பிரசாந்தை இன்று காலை காவல் துறையினர் அழைத்து வரச் சென்றனர். அங்கு ஏற்பட்ட களேபரத்திற்கு பின்னர் சகுந்தலாவின் வீட்டிலிருந்து 100 மீட்டர் தொலைவில் போலீசார் சென்ற நிலையில், தனது வீட்டுக்குள் சென்ற சகுந்தலா தீக்குளித்திருக்கிறார் என்றும், விசாரணையில் கூறப்படுகிறது. 

மேலும், “காவல் துறை கண்ணெதிரே சகுந்தலா தீக்குளிக்கவில்லை என்றும், இது குறித்துத் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும்” மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்தார். இந்த சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பரரபப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

இதனிடையே, தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கடந்த ஜூன் மாதம் தந்தை - மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் போலீஸார் தாக்கியதால் கோவில்பட்டி சிறையில் அடுத்தடுத்து உயிரிழந்த நிலையில், போலீசார் பற்றிய மதிப்பீடு பொது மக்கள் மத்தியில் சற்று குறைந்து காணப்பட்டு வரும் நிலையில், போலீசாரால் ஏற்படும் இது போன்ற மரணங்கள், அவர்கள் மீதான நன்மதிப்பை மேலும் குறைத்துக்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.