வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் மொத்த பரப்பளவு 5 கிலோமீட்டர். அதை  2 கிலோ மீட்டராக குறைத்து தமிழக வனத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

உலக சுற்றுச்சூழல் தினத்தில் காடுகளையும் இயற்கையையும் பாதுகாப்போம் என உறுதியேற்றதுமே,  பறவைகள் சரணாலயம் குறிவைக்கப்பட்டிருக்கிறது. கொரோனாவால்  ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்போது  உயிரியல் முக்கியத்துவம் வாய்ந்த முக்கியமான  30 காடுகளை தனியாருக்கு தரும் முயற்சிகள் மத்தியில் நடந்துவருகின்றது.  

தனியார் மருந்து நிறுவனத்திற்காக வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் எல்லையை  குறைக்கும் முயற்சியில் அரசு இறங்கியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் பிரசித்திபெற்றது.  ஆண்டுதோறும்  கனடா, சைபீரியா, பங்களாதேசம், பர்மா, ஆஸ்திரேலியா முதலிய நாடுகளில் இருந்து பறவைகள், அக்டோபர் முதல் மார்ச் வரையிலான பருவத்தில்  பறவைகள் வேடந்தாங்கலில் தங்கிச் செல்கின்றன. 

வேடந்தாங்கல் சரணாலயம் ஐந்து கிலோமீட்டர் சுற்றளவில் உள்ளது. அதன் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு தனியார் மருந்து கம்பெனி பல ஆண்டுகளுக்கு முன்பு நிலம் வாங்கி அதற்கான கட்டிடமும் கட்டியுள்ளது.

சட்டத்துக்கு புறம்பாக வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு உட்பகுதியில் தனியார் மருந்து நிறுவனம் (sun pharmaceutical) கட்டிடம் கட்டியுள்ளது. இந்த தனியார் நிறுவனத்திற்கு ஆதரவாக தமிழக அரசின் வனத்துறை கடந்த மார்ச் 19 ம் தேதி அன்று வேடந்தாங்கல் பறவை சரணாலயத்தின் ஐந்து கிலோ மீட்டர் எல்லையை இரண்டு கிலோ மீட்டராக சுருக்கி வரையறை செய்துள்ளது.

தனியார் மருந்து நிறுவனத்திற்கு ஆதரவாக தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து மத்திய அரசின் அனுமதிக்காக அனுப்பியுள்ளது. தமிழக அரசின் இத்தகைய நடவடிக்கைக்கு சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.