மத்திய அரசு நிறைவேற்றிய 3 வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதுவரை 4 கட்ட பேச்சுவார்த்தைகளில் எந்த உடன்பாடும் எட்டப்படாத நிலையில் பேச்சுவார்த்தை 5ம் கட்டத்தில் உள்ளது. விவசாயச் சங்க பிரதிநிதிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு நிராகரித்து வருவதால், நாளுக்கு நாள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.

விவசாயிகளுடனான இன்றைய பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்ததை தொடர்ந்து, அடுத்தகட்ட பேச்சுவார்த்தை டிசம்பர் 9 ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் இந்த விவசாயிகளின் போராட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவளித்து வருகின்றன. 

தமிழகத்திலும், திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்தி தம் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளன. இன்றைய தினம் திமுக சார்பில், கருப்புக்கொடி போராட்டம் நடைபெற்றிருந்தது.

இருப்பினும்  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, விவசாய மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் விவசாய மசோதா எதிர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், ”விவசாயிகளை திசைதிருப்ப எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றன. தமிழகத்திலும் விவசாயிகளை திசை திருப்ப தி.மு.க, கூட்டணி கட்சிகள் முயற்சிக்கின்றன. இதை, தமிழக விவசாயிகள் உணர்ந்துள்ளனர். அவர்கள் ஏமாற மாட்டார்கள்” என்று கூறியுள்ளார்.

மேலும், புதிய விவசாய சீர்திருத்த சட்டங்களால் விவசாயிகள் அடையப் போகும் நன்மைகளை விவசாயிகளிடம் எடுத்துரைக்க வரும் 8ம் தேதி முதல் மக்கள் இயக்கம் நடத்த உள்ளதாகவும் அதில் பாஜக நிர்வாகிகள் சென்று விவசாயிகளை சந்தித்து எடுத்துச் சொல்வார்கள் என்றும் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

``மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களும் விவசாயிகளுக்கு நன்மை தரக்கூடியது. இடைத் தரகர்களே இல்லாமல் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை, விரும்பிய நபர்களிடம் விற்பனை செய்ய இந்த சட்டங்கள் வழி செய்கின்றன. விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், அரசியல் ஆதாயத்துக்காக காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகளின் தூண்டுதலால் டெல்லியில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

வேளாண் சட்டங்களை வைத்து தமிழக மக்களை திசைதிருப்ப திமுக ஏற்கெனவே முயற்சித்து தோல்வி அடைந்தது. தற்போது டெல்லி போராட்டத்தை வைத்து மீண்டும் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது.

வேளாண் சட்டங்கள் குறித்தும், அதனால் கிடைக்கும் நன்மைகள் குறித்தும் விவசாயிகள், பொதுமக்களிடம் பிரச்சாரம் செய்யும் வகையில் டிச.8 முதல் பாஜக சார்பில் மக்கள் தொடர்பு இயக்கம் நடைபெற உள்ளது. பாஜகநிர்வாகிகள் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செய்து விவசாயிகளை சந்தித்து இந்த சட்டங்கள் குறித்து எடுத்துரைப்பார்கள்.

ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். அந்த வகையில், கட்சி தொடங்க ரஜினிக்கு உரிமை உள்ளது. தமிழகத்தில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும். அதில் சந்தேகம் இல்லை. கூட்டணி குறித்து பாஜக தேசிய தலைமை முடிவெடுக்கும். ரஜினி கட்சியுடன் கூட்டணியா என்பதை தலைமைதான் முடிவு செய்யும். திருச்செந்தூரில் வரும் 7-ம் தேதி நடைபெறும் வெற்றிவேல் யாத்திரை நிறைவு விழாவில் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் பங்கேற்கிறார்"

இவ்வாறு அவர் கூறினார்.