10,11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இந்தாண்டு ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் சூழலில், 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ஜூன் 15 ஆம் தேதி நடத்த தமிழக அரசு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர்.

TN SSLC Public exam Canceled - TNGovt

இதனிடையே, அரசு தேர்வுத்துறையில் இணை இயக்குநருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதுடன், தேர்வுத்துறையில் பணியாற்றும் ஊழியர்கள் 
மேலும் 4 பேருக்கு கொரோனோ உறுதி செய்யப்பட்டது. 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நெருங்கி வரும் சூழலில், தேர்வுத்துறை ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் கொரோனோ அச்சம் மேலும் அதிகரிக்கச் செய்தது.

இதனிடையே, சென்னை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நேற்று விசாரிக்கப்பட்ட நிலையில், “10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்த தமிழக அரசு ஏன் அவசகம் காட்டுகிறது” என்று, சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

மேலும், "10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ஜூன் 15ம் தேதி நடத்த அனுமதிக்க முடியாது என்றும், 9 லட்சம் மாணவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த அனுமதிக்க முடியாது” என்றும் கூறிய நீதிமன்றம், வழக்கை வரும் 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அத்துடன் கல்வித்துறை அதிகாரிகளோடும் ஆலோசனைகள் நடத்தப்பட்டன. 

TN SSLC Public exam Canceled - TNGovt

இந்நிலையில், சற்றுமுன் காணொலி காட்சி மூலம் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, “10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக” அறிவித்தார்.

குறிப்பாக, “காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வின் மதிப்பெண் அடிப்படையில் 80 சதவீதம் மதிப்பெண் வழங்கப்படும் என்றும், வருகை பதிவேடு அடிப்படையில் 20 சதவீதம் மதிப்பெண் வழங்கப்படும்” என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

மேலும், “ஒத்திவைக்கப்பட்ட 11 ஆம் வகுப்புத் தேர்வும் ரத்து செய்யப்படுவதாகவும்” முதலமைச்சர் பழனிசாமி கூறினார். 

அதேபோல், “12 ஆம் வகுப்புக்கான மறுதேர்வுகள் சூழலுக்கேற்ப பின்னர் அறிவிக்கப்படும்” என்றும், முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.

இதனிடையே, சென்னை உள்ளிட்ட இடங்களில் கொரோனா வைரஸ் மேலும் பரவும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறிய கருத்தை ஏற்று, அதன்படியே இந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.