நடிகர் வரதராஜன் தவறான தகவல்களை அளித்துள்ளதால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று சென்னையில் தீவிரமாக பரவி வரும் நிலையில், தமிழகத்தில் மருத்துவ வசதிகள் எப்படி இருக்கிறது என்பது பற்றி நடிகர் வரதராஜன், வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். 

TN minister Vijayabaskar case Varadharajan coronavirus

அதில் உருக்கமா பேசியிருந்த நடிகர் வரதராஜன், “எங்கள் குடும்பத்து நெருங்கிய நண்பர் ஒருவருக்கு காய்ச்சல் வந்து, சுவாசக் கோளாறு ஏற்பட்டு கொரோனா வைரஸ் பரவி இருப்பது உறுதியானதாகவும், ஆனால் அவருக்கு எந்த மருத்துவமனையிலும் படுக்கை கிடைக்கவில்லை” என்றும் குறிப்பிட்டுள்ளார். 

“இது குறித்து அரசு அலுவலர்கள், மருத்துவமனை உரிமையாளர்கள் என பலரிடம் பேசிப் பார்த்தோம் என்றும், அப்போதும் படுக்கை கிடைக்கவில்லை” என்றும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.

குறிப்பாக, “மருத்துவமனைக்கு அழைத்து வராதீர்கள், அழைத்து வந்து என்ன செய்வது என மருத்துவர்களே கேள்வி கேட்கிறார்கள்” என்றும், அவர் தெரிவித்திருந்தார்.

இதனிடையே, இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடையே பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “சென்னையில் மட்டும் அரசு மருத்துவமனைகளில் 5,000 படுக்கைகள் உள்ளதாக” குறிப்பிட்டார்.

TN minister Vijayabaskar case Varadharajan coronavirus

“தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சையளிக்க தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் போதிய படுக்கைகள் உள்ளதாகவும், கொரோனாவுக்கு சிகிச்சையளிக்க தமிழகத்தில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாகவும்” அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

மேலும்,“பேரிடர் காலத்தில் டிவி நடிகர், பத்திரிகையாளர் வரதராஜன் தவறான தகவலை அளித்துள்ளார் என்றும், வரதராஜன் மீது தொற்றுநோய் சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதிப்படத் தெரிவித்தார்.

அத்துடன், “கொரோனா தொடர்பாக வதந்திகளை பரப்பினால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும், அமைச்சர் விஜயபாஸ்கர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இதனால், நடிகர் வரதராஜன் மீது விரைவில் வழக்குப் பதியப்பட்டு, விசாரணை நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.