“உலகம் முழுவதும் Made in Tamilnadu என்ற குரல் ஒலிக்க வேண்டும்” என்று, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டு உள்ளார். 

சென்னை கலைவாணர் அரங்கில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் “ஏற்றுமதியில் ஏற்றம் முன்னணியில் தமிழ்நாடு” என்ற மாநாட்டை சற்று முன்பாக தொடங்கி வைத்தார். 

இவற்றுடன், “சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் ஏற்றுமதி கையேட்டை ஆரம்பித்து வைத்த முதலமைச்சர், 21 ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனங்கள், அரசு நிறுவனங்களின் கண்காட்சியையும்” முதலமைச்சர் தொடங்கி வைத்தார். 

இதில், தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.

இந்த நிகழ்ச்சியில், ஏற்றுமதி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் துவங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.

இந்திய சுதந்திர தின விழாவின் 75 வது வருடத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு, மத்திய அரசு மற்றும் பல்வேறு ஏற்றுமதி குழுமங்கள் இணைந்து ‘‘வர்த்தகம் மற்றும் வணிக வாரம்” நிகழ்வினை நடத்துகின்றன.

அந்த வகையில் தான், “ஏற்றுமதியில் ஏற்றம்  முன்னணியில் தமிழ்நாடு” என்கிற தமிழ்நாடு ஏற்றுமதி மாநாட்டு இன்று நடத்தப்பட்டது.

இந்த விழாவில் “ 'தமிழ்நாடு ஏற்றுமதி  மேம்பாட்டுக் கொள்கை' மற்றும் 'குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான ஏற்றுமதி கையேடு' ஆகியவற்றையும்” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

அத்துடன், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ரூ.2,210 கோடி மதிப்பிலான 24 தொழில் முதலீடுகளுக்கு ஒப்பந்தம் கையெழுத்தானது. இவற்றுடன், 24 தொழில் முதலீடு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 41,695 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வழிவகை செய்யப்பட்டது. 

இந்த மாநாட்டில் பேருரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழக தொழில் துறையில் உலகம் இருக்கும் வகையில் இலக்கு இருக்க வேண்டும்” என்று, குறிப்பிட்டார். 

“உலக வர்த்தக சூழலுக்கு ஏற்ப மதிப்புக் கூட்டுப் பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும்” என்று பேசிய முதலமைச்சர், “காஞ்சிபுரம், ஆரணி ,சின்னாளப்பட்டி சேலைகள் உட்பட புவிசார் குறியீடு பெற்ற பொருட்களுக்கு வெளிநாடுகளில் வரவேற்பு உள்ளது என்றும், தமிழகத்தில் மின் சார்ந்த ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும்” என்றும், கூறினார். 

“ஏற்றுமதியை அதிகரிக்கத் தலைமை செயலாளர் தலைமையில் மாநில ஏற்றுமதி மேம்பாட்டுக் குழு அமைக்கப்படும் என்றும், தமிழகத்தில் மோட்டார் வாகனங்கள், தோல் உற்பத்தி பொருட்கள் அதிகம்” என்றும், அவர் பேசினார்.

குறிப்பாக, “Made in India என்பதை போல, Made in Tamilnadu என்று சொல்லும் நிலை இங்கு வர வேண்டும்” என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

மேலும், “வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் பொருளாதார வளர்ச்சியைத் தமிழகம் அடைய வேண்டும்” என்றும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, உலக அளவில் வர்த்தகம் மற்றும் வணிகத்தில் தமிழ்நாட்டை முன்னணி மாநிலமாக மாற்றுவதைக் குறிக்கோளாகக் கொண்டு இந்த மாநாடு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.