ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில் மோசடியாக வேலை செய்து ஒரு கோடி ரூபாய் சம்பளம் பெற்ற மோசடி ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தரப் பிரதேசம் மாநிலம் லக்னோவில் உள்ள கஸ்தூர்பா காந்தி பலிகா வித்யாலயா பள்ளியில் அனாமிகா சுக்லா, முழு நேர ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

அதே நேரத்தில் அம்பேத்கர் நகர், சாரண்புர், பிரயக்ராஜ், அலிகார் உள்ளிட்ட அந்த மாநிலத்தின் 25 மாவட்டங்களில் உள்ள பள்ளியிலும் அவர் பணியாற்றி வருவது தற்போது தெரியவந்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநில கல்வித்துறையின் கீழ் செயல்படும் பள்ளி ஆசிரியர்களின் தரவுகள் அடங்கிய ஒரு தளம் ஒன்று, தற்போது புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. அந்த இணையத்தளத்தில் ஆசிரியர்கள் பள்ளிகளில் எப்போது சேர்ந்தார்கள், ஆசிரியர்களின் ஊதியம், அவர்களின் பணி உயர்வு உள்ளிட்ட அனைத்து விதமான தகவல்களும் அந்த தளத்தில் இடம் பெற்றிருந்தன. 

இந்த இணையத்தளத்தின் படி, அனாமிகா என்ற ஆசியர், அந்த மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள சுமார் 25 பள்ளிகளில் பணியாற்றுவது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால், அதிர்ச்சியடைந்த அந்த மாநில கல்வித்துறை அதிகாரிகள், இது எப்படி சாத்தியம் என்பது குறித்து விசாரணை நடத்த, சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

TN teacher works in 25 schools one crore rupees fraud

மேலும், 25 பள்ளிகளில் பணியாற்றி உள்ள ஆசிரியை அனாமிகா, கடந்த 13 மாத ஊதியமாக ஒரு கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளதும் இதன் மூலம் தெரியவந்துள்ளது.

அத்துடன், ஆசிரியை மோசடி செயலில் ஈடுபட்டுள்ளதால், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த மாநில கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், ஆசிரியை மோசடியில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டதால், போலீசார் அவரை கைது செய்தனர். 

அதேபோல், கடந்த 13 மாதங்களாக நடைபெற்ற இந்த நூதனமான மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக, அந்த மாநிலத்தின் மைன்புரியை சேர்ந்த ராஜு என்பவரையும் போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். 

இந்த மோசடி வழக்கில், இருவரிடமும் தீவிரமாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், “இந்த மோசடிக்காக அனாமிகா ஒரு லட்சம் ரூபாய் மட்டுமே லஞ்சம் கொடுத்துள்ளதாக” போலீசாரின் விசாரணையில் தற்போது தெரியவந்துள்ளது.

இதனிடையே, நல்ல விசயங்களைப் போதிக்க வேண்டிய ஆசிரியர் ஒருவரே, செய்யும் தொழிலை வைத்தே, நூதனமான முறையில் மோசடியில் ஈடுபட்ட சம்பவம், அந்த மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.