“தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகள் டாஸ்மாக் பெரும் நஷ்டத்தில் இயங்கியதாக” தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று, நீண்ட நெடுங்காலமாகப் போராட்டங்கள் எல்லாம் நடைபெற்று வந்தன. எனினும், இந்த போராட்டங்கள் யாவும் எந்த வெற்றியும் பெறாமல் அப்படியே ஓய்ந்து தான் இருக்கிறது. 

தமிழ் நாட்டில் பூரண மதுவிலக்கு போராட்டம் தோல்வி அடைய முக்கிய காரணமே, “தமிழக அரசுக்கு பெரும் வருவாயாக டாஸ்மாக் வருமானம் மட்டுமே இருப்பதாகவும், டாஸ்மாக் வருமானத்தை வைத்து தான், பொது மக்களுக்குத் தமிழக அரசால் பல்வேறு இலவசத் திட்டங்களை வழங்க முடிகிறது என்றும், அதற்கு மாறாகத் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தினால், தமிழக அரசு வருவாய் இன்றி, ஆட்டம் கண்டு விடும்” என்ற கருத்தும் கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில் தான், “தமிழகத்தில் 5 ஆண்டுகள் டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்கியதாக” தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாகத் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதாவது, “தமிழகத்தில் டாஸ்மாக் விற்பனை குறித்து” சென்னையைச் சேர்ந்த காசிமாயன் என்பவர் ஆர்டிஐ யில் கேட்ட கேள்விக்கு டாஸ்மாக் நிர்வாகம் அளித்துள்ள பதில் தான் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் அளித்திருக்கிறது. 

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ள தகவலின் படி, “கடந்த 2010 - 11 ஆம் ஆண்டுகளில் 3.56 கோடி ரூபாயும், 2011-12 ஆம் ஆண்டுகளில் 1.12 கோடி ரூபாயும், 2012-13 ஆம் ஆண்டுகளில் 103.64 கோடி ரூபாயும், 2013-14 ஆம் ஆண்டுகளில் 64.4 கோடி ரூபாயும், 2019-20 ஆம் ஆண்டுகளில் 64.44 கோடி ரூபாயும் நஷ்டத்தில் இயங்கியதாக” தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
 
குறிப்பாக, தமிழகத்தில் அதிகம் வருவாய் வரும் துறைகளில் ஒன்றாகத் திகழும் டாஸ்மாக்கில், இத்தனை கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக, டாஸ்மாக் நிர்வாகமே பதில் அளித்திருப்பது பொது மக்களிடையே, பல்வேறு சந்தேகங்களையும், கேள்விகளையும் எழுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, “நஷ்டத்தில் இயங்கும் டாஸ்மாக் கடைகளை படிப்படியாகத் தமிழகத்தில் குறைக்கலாமே” என்றும், பல்வேறு தரப்பினரும் தற்போது கருத்து தெரிவித்து வருகின்றனர்.