சட்ட விரோதமாக சூதாட்ட கிளப் நடத்தி சீட்டு விளையாடியதாக நடிகர் ஷியாம் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். 

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, தமிழகம் உட்பட உலகமே வீடுகளில் முடங்கிப் போய் உள்ளன. இதனால், பலரும் வீட்டை விட்டு வெளியே செல்ல பயந்து தங்கள் வீடுகளிலேயே தங்கி வருகின்றனர். விதிமுறைகளை மீறி வெளியே செல்வோர்களை போலீசார் கைது செய்தும், அபராதம் விதித்தும் வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் உள்ள நடிகர் ஷாம்க்கு சொந்தமான, அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள வீட்டில் சட்டவிரோதமாகச் சீட்டுச் சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதனையடுத்து நேற்றிரவு போலீசார் அடுக்குமாடி குடியிப்பில் உள்ள நடிகர் ஷாம்க்கு சொந்தமான வீட்டில் திடீரென நுழைந்து அதிரடியாகச் சோதனை செய்தனர். அப்போது, அந்த அடுக்குமாடி குடியிருப்பின் முதல் தளத்தில் உள்ள நடிகர் ஷாம்க்கு சொந்தமான அவரது வீட்டில்; நடிகர் ஷாம் உட்பட 13 பேர் சீட்டு விளையாடி சூதாட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது தெரிய வந்தது.

இதனை அடுத்து, நடிகர் ஷாம் உட்பட சீட்டு விளையாடிக்கொண்டிருந்த 13 பேரையும் போலீசார் கைது செய்தனர். அத்துடன், சீட்டு விளையாடி சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த அவர்களிடம் இருந்து பணம், சீட்டுக் கட்டுகள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும். தொடர்ந்து பல நாட்களாக இந்த அடிக்கடி குடியிருப்பில் ஏராளமான நடிகர்கள், இயக்குனர்கள், தொழில் அதிபர்கள் என்று பலர் இது போன்று சட்ட விரோதமாக சீட்டு விளையாட்டின் மூலம் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது. அத்துடன், இந்த அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டை நடிகர் ஷாம் சூதாட்ட கிளப் போல் தொடர்ந்து பல மாதங்களாக நடத்தி வந்ததும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டது. 

குறிப்பாக, அந்த அடுக்கு மாடி குடியிருப்பில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப் பற்றி, அந்த வீட்டில் கடந்த சில மாதங்களாக யார் யார் வந்து சென்றார்கள் என்பது குறித்தும், ஆராய்ந்து வருகின்றனர். இதன் படி, சிசிடிவியில் சிக்கும் பிரபலங்கள் மீதும் விசாரணை நடத்தப்படும் என்றும், அல்லது வழக்குப் பதிவு செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. இதனால், நடிகர் ஷாம் வீட்டிற்கு வந்து சென்றவர்கள் தற்போது பீதியடைந்துள்ளனர்.

ஏற்கனவே காவல் துறைக்கு இந்த சட்ட விரோத சூதாட்டம் குறித்த தகவல் தெரிந்தும், போலீசார் கண்டு கொள்ளவில்லை எனக் குற்றச்சாட்டும் இருந்து வந்தது. 

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட நடிகர் ஷாம் உட்பட 13 பேரும் காவல் நிலைய ஜாமீனில் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 

முக்கியமாக, இனி இது போல் சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபட மாட்டோம் என்று நடிகர் ஷாம் உட்பட 13 பேரும் காவல் நிலையத்தில் எழுது கொடுத்துவிட்டு வீடு திரும்பி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனிடையே, தனக்குச் சொந்தமான அடுக்கு மாடி குடியிருப்பில் பணம் வைத்து சூதாட்டம் விளையாடிய புகாரில், நடிகர் ஷாம் உள்பட 13 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம், திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.