அண்ணா பல்கலைக்கழகத்தில் அப்துல் கலாமுக்கும், காந்தி மண்டபத்தில் கட்ட பொம்மனுக்கு சிலை வைக்கப்படும் என்று, தமிழக அரசின் அறிவித்துள்ள நிலையில், சத்துணவு ஊழியர்களுக்கான ஓய்வு வயது 60 ஆகவும் உயர்த்தி” முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில், ஒவ்வொரு நாளும் பல்வேறு புதிய அறிவிப்புகளைத் தமிழக அரசு அடுத்தடுத்து வெளியிட்டு வருகிறது. 

அதன்படி, தமிழக சட்டப்பேரவை இன்று காலை கூடியதும் செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. 

அப்போது செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுப் பேசினார்.

அதில், “தாய்நாட்டின் விடுதலைக்காகப் போராடிய தியாகிகள், மொழிப்போர் தியாகிகள், தலை சிறந்த இலக்கியப் படைப்பாளிகள், சமூக நீதிக்காக போராடியவர்கள், திராவிட இயக்க முன்னோடிகள் ஆகியோர்களைப் போற்றும் வகையில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிலைகள் நிறுவப்படும்” என்று, குறிப்பிட்டார்.

அதன் படி, “அண்ணா பல்கலைக்கழகத்தில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமிற்கு சிலை அமைக்கப்படும்” என்று, அறிவித்தார்.

“கடலூரில் சுதந்திரப் போராட்ட பெண் தியாகி அஞ்சலை அம்மாளுக்கு சிலை அமைக்கப்படும் என்றும், சென்னை ராணி மேரி கல்லூரியில் ரவீந்திரநாத் தாகூருக்கு சிலை அமைக்கப்படும்” என்றும், கூறினார்.

“சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டப வளாகத்தில் வீரபாண்டிய கட்ட பொம்மனுக்கு சிலை அமைக்கப்படும் என்றும், காந்தி மண்டபத்தில் மருது சகோதரர்களுக்கு திருவுருவச் சிலை அமைக்கப்படும் என்றும், தமிழறிஞர் மு.வரதராசனார் அவர்களுக்கு ராணிப்பேட்டை மாவட்டத்தில் சிலை அமைக்கப்படும்” என்றும், தெரிவித்தார்.

“சென்னை மாகாணத்தின் முன்னாள் முதல்வர் டாக்டர் ப.சுப்பராயனுக்கு சென்னையில் சிலையும், நாமக்கல் நகரில் அரங்கமும் அமைக்கப்படும் என்றும், கீழ்பவானி பாசன திட்டம் உருவாகக் காரணமாக இருந்த தியாகி ஈஸ்வரனுக்கு சிலை மற்றும் அரங்கம் அமைக்கப்படும்” என்றும், கூறினார்.

அத்துடன், “இந்தி திணிப்பை எதிர்த்து முதலில் உயிர் தியாகம் செய்த மொழிப்போர் கீழபழுவூர் சின்னசாமிக்கு திருவுருவச் சிலை அமைக்கப்படும்” என்றும், அமைச்சர் சாமிநாதன் பேசினார்.

அதன் தொடர்ச்சியாக, சட்டசபையில் விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்றை தினம் பல அறிவிப்புகளை அறிவித்தார்.

அதில், 110ன் கீழ் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசிய போது, “ தமிழகத்தில் போராட்ட காலங்களில் ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் கைவிடப்படும் என்றும், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களின் வேலைநிறுத்த காலம், பணிநீக்க காலம் வேலை நாட்களாகக் கருதப்படும்” என்று, அறிவித்தார். 

மேலும், “ஓய்வு பெறும் நாளில் தற்காலிக பணியமர்த்தப்படும் முறை ஒழிக்கப்படும் என்றும், பணியின் போது காலமான அரசு ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்வதில் உள்ள சிக்கல்களைத் தீர்க்கும் வகையில் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும்” என்றும், குறிப்பிட்டார்.

“அரசு பணியாளர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் மகன், மகள்கள் சேர்க்கப்படும் என்றும், சத்துணவு சமையல் ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 58 ல் இருந்து தற்போது 60 ஆக உயர்த்தப்படுகிறது என்றும், இதன் மூலமாக அரசு ஊழியர்களின் உற்ற நண்பனாகத் தமிழ்நாடு அரசு செயல்படுகிறது” என்றும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்.