ஜூன் 15 ஆம் தேதி 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்த அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவி வரும் சூழலில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ஜூன் 15 ஆம் தேதி நடத்த தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

10thPublicExam

இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வைக் கைவிட வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இதனிடையே, அரசு தேர்வுத்துறையில் இணை இயக்குநருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அத்துடன், தேர்வுத்துறையில் பணியாற்றும் ஊழியர்கள் மேலும் 4 பேருக்கு கொரோனோ உறுதி செய்யப்பட்டது. 

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நெருங்கி வரும் சூழலில், தேர்வுத்துறை ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் கொரோனோ அச்சம் மேலும் அதிகரிக்கச் செய்தது.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு இன்று விசாரிக்கப்பட்டது. அப்போது, “10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்த தமிழக அரசு ஏன் அவசகம் காட்டுகிறது” என்று, சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

highcourt

மேலும், "10ம் வகுப்பு பொதுத் தேர்வை ஜூன் 15ம் தேதி நடத்த அனுமதிக்க முடியாது என்றும், 9 லட்சம் மாணவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த அனுமதிக்க முடியாது” என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

அத்துடன், “ஜூலை 2 வது வாரத்தில் தேர்வு நடத்தலாமா என்பது குறித்து தமிழக அரசு, இன்று பிற்பகல் 2.30 மணிக்குள் பதிலளிக்க” சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.