``1 ரூபாய் அபராதம்! தவறினால் 3 ஆண்டுகள் வழக்கறிஞராக பணிபுரியத் தடை" - பிரசாந்த் பூஷனுக்கான தீர்ப்பு

``1 ரூபாய் அபராதம்! தவறினால் 3 ஆண்டுகள் வழக்கறிஞராக பணிபுரியத் தடை

கடந்த ஜூன் மாதம், இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே, ஒரு உயர்தர மோட்டார் சைக்கிளில் இருப்பது போன்ற படம் மற்றும் நாட்டின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இதுவரை இருந்த நான்கு பேரின் பங்களிப்பு குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பிரசாந்த் பூஷண் தமது டிவிட்டர் பக்கத்தில் கருத்துகளைப் பதிவு செய்திருந்தார்.

இது தொடர்பாக மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் மஹேக் மஹேஸ்வரி, கடந்த ஜூலை 2-ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் பிரசாந்த் பூஷணுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு மனுவைத் தாக்கல் செய்தார்.

அதில், `கடந்த ஜூன் 29-ஆம் தேதி தமது டிவிட்டர் பக்கத்தில் பிரசாந்த் பூஷண், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரூ. 50 லட்சம் மதிப்பிலான பாஜக தலைவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளுடன் நாக்பூரில் உள்ள ராஜ் பவன் வளாகத்தில் ஹெல்மெட் இல்லாமல் ஓட்டுகிறார். அதுவும் உச்ச நீதிமன்றத்தை முடக்கி விட்டு குடிமக்கள் நீதி பெறும் அடிப்படை உரிமையை மறுக்கும் நிலையில்' என்றவாறு குறிப்பிட்டிருந்தார்.

அப்படியான சூழலில், இன்று அவருக்கு தண்டனை அறிவிப்பதற்காக உச்ச நீதிமன்றத்தில் நடந்த விவாதத்தில், தன்னை குற்றவாளி என்று அறிவிக்கும் தீர்ப்புக்கு எதிரான தம்முடைய சீராய்வு மனுவை விசாரித்து தீர்ப்பளிக்கும் வரை தனக்கு தண்டனை அறிவிக்கக்கூடாது என்று பிரசாந்த் பூஷன் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் அதை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள மறுத்தது. தண்டனை அறிவித்த பிறகுதான் தீர்ப்பு முழுமை பெறும் என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.

நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச் முன்பாக இந்த விசாரணை நடைபெற்றது. பிரசாந்த் பூஷன் சார்பில் வழக்குரைஞர் துஷ்யந்த் தவே வாதிட்டார். விசாரணையின் போது, 

``மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் வரை தண்டனை இருக்காது என்று உறுதி தருகிறேன். நீங்கள் எங்களிடம் சரியாக, நியாயமாக நடந்துகொள்ளாவிட்டாலும் நாங்கள் உங்களிடம் நியாயமாகவே நடந்துகொள்வோம்" என்று குறிப்பிட்டார் நீதிபதி அருண் மிஸ்ரா.

துஷ்யந்த் தவே, ``குற்றவாளி என்று தீர்ப்புரைத்தலும், தண்டனை வழங்குவதலும் இரண்டு தனித்தனியான விஷயங்கள். மறு சீராய்வு செய்வதற்கான எனது முறையீடு மிகவும் சரியானது, தண்டனை வழங்குவது தள்ளிவைக்கப்படலாம். அப்படி தண்டனையைத் தள்ளிவைப்பதால் வானம் ஏதும் இடிந்துவிழாது" என்றும் குறிப்பிட்டார்.

இதுபற்றி பேசிய பிரசாந்த் பூஷன், "நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டில் என் மீது குற்றம் உறுதி செய்யப்பட்டிருப்பதற்காக நான் வேதனைப் படுகிறேன். இந்த வேதனை எனக்கு தண்டனை விதிக்கப்படும் என்பதற்காக அல்ல. நான் மிகத் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளேன் என்பதற்காக" என்று நீதிமன்றத்தில் குறிப்பிட்டார். மேலும் ``ஜனநாயகத்தையும் அதன் விழுமியங்களையும் பாதுகாக்க வெளிப்படையான விமர்சனம் அவசியம் என்று கருதுகிறேன். என்னுடைய ட்விட்டர் பதிவுகள் என்னுடைய கடமையை நிறைவேற்றும் முயற்சிகளே. அமைப்பு மேம்படுவதற்காகப் பணியாற்றும் முயற்சி என்றே என்னுடைய ட்வீட்டுகள் பார்க்கப்படவேண்டும்" என்று வாதிட்டார் பிரசாந்த் பூஷன்.

ஆகஸ்ட் 20 ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ``நான் கருணை காட்டும்படி கேட்கவில்லை. பெருந்தன்மை காட்டும்படி கேட்கவில்லை. தண்டனை எதுவாக இருந்தாலும் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வேன்" என்று உச்ச நீதிமன்றத்தில் கூறி, தீர்ப்புக்காக காத்திருந்தார் பிரசாந்த் பூஷன். மேலும் இதற்கு தான் மன்னிப்பு கேட்டால், தனது மனசாட்சியையும், நீதிமன்றத்தையும் அவமதிப்பதாக அமையும் என்று அவர் கூறியிருந்தார்.

இதன்பிறகும்கூட, மன்னிப்பு கேட்க பிரசாந்த் பூஷனுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டன. ஆனால் அனைத்து முறையும் அவர் திட்டவட்டமாக மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். 

அதைத்தொடர்ந்து இன்று (ஆகஸ்ட் 31) பிரசாந்த் பூஷனுக்கான தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து, இன்று ``பிரசாந்த் பூஷன் 1 ரூபாய் அபராதம் கட்ட வேண்டும். செப்டம்பர் 15-ம் தேதிக்குள் 1 ரூபாய் கட்டத் தவறினால் 3 மாதம் சிறை தண்டனை மற்றும் 3 ஆண்டுகள் வழக்கறிஞராக பணிபுரியத் தடை ஆகியவை அமல்படுத்தப்படும்" என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment