அன்னா ஹசாரே நடத்திய போராட்டத்தின் பின்னணியில் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். இருந்தது என்று, பிரசாந்த் பூஷண் அதிர்ச்சிக்கரமான தகவலை வெளியிட்டு உள்ளார்.

ஊழலுக்கு எதிராக போராடி வரும் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, கடந்த 2011 ஆம் அண்டு ஊழலுக்கு எதிரான போராட்டத்தை நடத்திய போது, நாடு முழுவதும் அவருக்கும் மிகப் பெரிய அளவில் ஆதரவு பெருகியது.

மஹாத்மா காந்தியைப் போலவே கதர் ஆடை, கதர் வேட்டி, தொப்பி என நாட்டு மக்களுக்கு தன்னுடைய உண்ணாவிரத போராட்டத்தின் மூலம் நன்கு  அறிமுகமானவர் அன்னா ஹசாரே. டெல்லி ராம்லீலா மைதானத்தில் லட்சக்கணக்கான மக்களை திரட்டி, அவர் மேற்கொண்ட போராட்டம் நாட்டின் இன்னொரு சுதந்திரப் போராட்டம் என்ற ஒரு எழுச்சியை மக்களிடத்தில் உண்டாக்கியது.

இந்த போராட்டத்தில் சமூக ஆர்வலர் மேதா பட்கர், இப்போது டெல்லி முதலமைச்சராக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால், புதுவை ஆளுநராக தற்போது உள்ள கிரண்பேடி, உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் உள்ளிட்டோர் அன்னா ஹசாரே உடன் இணைந்து போராட்டத்தில் முன்னெடுத்துச் சென்றனர்.

அன்னா ஹசாரே நடத்திய போராட்டத்தின் காரணமாகவே, அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியானது, அடுத்த முறை சந்தித்த தேர்தலில் படுதோல்வி அடைந்து. பாஜக வெற்றிப் பெற்றது.

இதனையடுத்து, கிரண்பேடி பாஜகவில் இணைந்தார். அரவிந்த் கெஜ்ரிவால் தனி கட்சி தொடங்கி டெல்லி முதலச்சராக செயல்பட்டு வருகிறார். ஆனால், அன்னா ஹசாரே மட்டும் தற்போது தனித்துவிடப்பட்டவராக இருக்கிறார்.

இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், “பாரதிய ஜனதா கட்சியும், ஆர்.எஸ்.எஸ். இயக்கமும் சேர்ந்தே, அன்னா ஹசாரே நடத்திய ஊழலுக்கு எதிராக போராட்டத்தை பெரிதாக்கியதாக” அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். 

“காங்கிரஸ் கட்சியின் ஆட்சியை அகற்றவும், அந்த போராட்டத்தின் மூலம் தங்களுக்கு முழு ஆதாயம் கிடைக்க வேண்டும் என்ற சுய நோக்கத்திற்காக மட்டுமே, பாரதிய ஜனதா கட்சியும், ஆர்.எஸ்.எஸ். இயக்கமும் அந்த போராட்டத்திற்கு அதிக அளவிலான ஆதரவு கொடுத்து களம் மிறங்கியதாகவும்” கூறியுள்ளார்.

“ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் இருந்த சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவுக்கு, இந்த அரசியல் சதுரங்க விளையாட்டு பற்றி தெரியாது என்றும், ஆனால் அவருடன் இருந்த அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இது குறித்து நன்றாக எல்லாம் தெரியும்” என்றும், குறிப்பிட்டார்.

“அன்னா ஹசாரேவுடன், ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்ட பிறகே, அதன் தாக்கத்தில் 'ஆம் ஆத்மி கட்சி' என்ற தனிக் கட்சியை தொடங்கி, பின் நாட்களில் அவர் டெல்லி முதலமைச்சர் ஆனார் என்றும், ஆனால் கட்சிக்காக வகுக்கப்படட கொள்கைகளை அவரே குப்பையில் தூக்கி வீசியதால் தான், நான் அரவிந்த் கெஜ்ரிவாலிம் இருந்து முற்றிலும் விலகி வந்தேன்” என்றும், பிரசாந்த் பூஷண் தெரிவித்தார். இதனால், நாடு முழுவதும் உள்ள பொதுமக்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.