“குமரி கண்டம் குறித்த ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்றும், அப்போது தான் தமிழன் உலகின் முதல் நிலை மனிதனாக உயர்ந்து நிற்பான்” என்றும், முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார்.

தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் தமிழக சட்டப் பேரவை கூட்டத் தொடரில், 110 விதியின் கீழ் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “ஆதிச்சநல்லூர், கீழடி உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வில் கிடைத்த அரிய பொருட்களை அழகுற காட்சி படுத்தும் விதமாக திருநெல்வேலி நகரில் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன வசதிகளோடு அருங்காட்சியகம் அமைக்கப்படும்” என்று, அறிவத்தார்.

இவற்றுடன், “சங்ககாலத் துறைமுகம் முசிறி தற்போது பட்டணம் என்ற பெயரில் கேரள மாநில அமைந்துள்ளது என்றும், சேர நாட்டின் தொன்மை இணையும் பண்பாட்டையும் அறிந்து கொள்ளும் வகையில் கேரள மாநில தொல்லியல் வல்லுநர்களுடன் இணைந்து அங்கு ஆய்வு பணி மேற்கொள்ளப்படும்” என்றும், அறிவித்தார்.

அதே போல, “ஆந்திர மாநிலத்தில் உள்ள வேங்கி, கர்நாடக மாநிலத்தின் தலைகாடு மற்றும் ஒரிசா மாநிலத்தில் உள்ள பாலூர் ஆகிய வரலாற்று சிறப்பு இடங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்” உள்ளிட்ட பல்வேறு புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அத்துடன், “திருச்சி மாவட்டம் சிறுகனூரில் பெரியாருக்கு 100 கோடியில் 95 அடியில் சிலை வைக்கப்படும்” என்றும், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியிருந்தார்.

இந்த நிலையில் தான், திருச்சியில் பெரியார் சிலை வைப்பதற்கு, இந்து மக்கள் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. 

இதனையடுத்து, “திருச்சியில் பெரியாருக்கு சிலை வைக்கக்கூடாது” என்று கூறி, அக்கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தார்.

இந்த சூழலில், நாகர்கோவில் வடசேரி பகுதியில் விநாயகர் சதுர்த்தி பூஜையில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், “பெரியாருக்கு சிலை அமைப்பதில் தவறில்லை” என்று, குறிப்பிட்டார்.

அத்துடன், “மறைந்த தலைவர்கள் உடைய நல்ல கருத்துக்களை ஏற்று பின்பற்ற வேண்டும் என்றும், வ.உ. சிதம்பரனாருக்கு சிலை மற்றும் மணிமண்டபம் குறித்து முதல்வர் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது” என்றும், கூறினார்.

குறிப்பாக, “கீழடியில் கிடைக்கும் ஆதாரங்கள் பெருமைக்குரிய ஒன்று என்றும், அது போல் 'குமரி கண்டம்'  குறித்தும் ஆய்வு நடத்தப்பட வேண்டும்” என்றும், அவர் வலியுறுத்தினார்.

“ 'குமரி கண்டம்' குறித்து ஆய்வு மேற்கொண்டால், தமிழன் உலகின் முதல் நிலை மனிதனாக உயர்ந்து நிற்பான் என்பதில் சந்தேகமில்லை” என்றும் பொன். ராதாகிருஷ்ணன், தமிழக அரசுக்கு தனது ஆலோசனைகளை வழங்கினார்.

முக்கியமாக, “ தமிழை வளர்த்த மதுரையை, தமிழின் தலைநகராக தமிழக அரசு அறிவிக்க வேண்டும்” என்றும், தமிழக அரசை பொன். ராதாகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார்.