பெரியார் பிறந்த நாளையொட்டி தமிழக அரசு சார்பில் முதல் முறையாக இன்று சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்கப்படுகிறது.

பகுத்தறிவு தந்தை பெரியாரின் 143 வது பிறந்த நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மரியாதை செலுத்தினார். 

பகுத்தறிவு பகலவன், சுயமரியாதை சுடர் தந்தை பெரியாரின் 143 வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. 

அதாவது, “பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17 ஆம் தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும்” என்று, தமிழக அரசு அறிவித்த நிலையில், இன்றைய தினம் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு அனைத்து அரசு அலுவலகங்களிலும் நடைபெற்றது.

அதன் படி, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், தந்தை பெரியாரின் திரு உருவச்சிலைக்கும், அவர் படத்திற்கும் மலர்த் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அத்துடன், பெரியார் திடலில் அமைந்துள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு கி.வீரமணி, வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

மேலும், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, சசிகலா மலர்தூவி உள்ளிட்டோரும், தந்தை பெரியானரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். 

அதன் தொடர்ச்சியாக, சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள தந்தை பெரியார் திருவுருவ சிலைக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி சற்று முன்பாக மரியாதை செலுத்தினார். 

அப்போது, பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி, தமிழக அரசு சார்பில் முதல் முறையாக சமூக நீதி நாள் உறுதிமொழி நிகழ்வு தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது” என்று, குறிப்பிட்டார்.

அதே நேரத்தில், இன்று தலைமைச் செயலகம் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. 

அதன் படி, சென்னை கோட்டை வளாகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

“சமூக நீதியையே அடித்தளமாக கொண்ட சமுதாயம் அமைக்கும் எனது பயணம் தொடர இந்த நாளில் உறுதியேற்கிறேன்” என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியேற்றுக்கொண்டார்.

“பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும் என்ற அன்பு நெறியை எனது வாழ்வியல் வழி முறையாக கடைபிடிப்பேன் என்றும், யாதும் ஊரே யாவரும் கேளிர் எனும் பண்பு நெறியை எனது வாழ்வின் வழி முறையாக கடைபிடிப்பேன்” என்றும், மு.க.ஸ்டாலின் உறுதி ஏற்றார்.

“சுயமரியாதை, ஆளுமைத் திறனும், பகுத்தறிவுக் கூர்மைப் பார்வையும் கொண்டதாக எனது செயல்பாடுகள் அமையும் என்றும், சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் கொள்கைகளுக்காக என்னை நான் ஒப்படைத்துக் கொள்வேன்” என்றும்” அவர் கூறினோர். 

“மானுடப் பற்றும் மனிதாபிமானமும் ஒன்றே எனது ரத்த ஓட்டமாக அமையும்” என்றும், தலைமைச் செயலக வளாகத்தில் உறுதிமொழி ஏற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, “சமூக நீதி என்பது பேதங்களைப் பேணுவதன்று; பேதங்கள் நீங்கப் பாலங்கள் அமைப்பது” என்று வைரமுத்து கருத்து தெரிவித்துஉ ள்ளார்.