“மாணவர்களின் வீடுகளுக்கே சென்று பாடம் கற்பிக்கும் ‘மக்கள் பள்ளி’ என்ற திட்டத்தைச் செயல்படுத்த” பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று காரணமாகப் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்த நிலையில், நடப்பு கல்வியாண்டில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்குக் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. 

அத்துடன், 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் 1ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்றும், அரசு அறிவித்து உள்ளது.

அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்குக் கல்வித் தொலைக்காட்சி மூலம் பாடம் நடத்தப்பட்டாலும், அவர்களிடம் கற்றல் குறைபாடுகள் இருப்பது தற்போது கண்டறியப்பட்டது. 

இதனால், அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் குறைபாடுகளை போக்குவதற்கு நடப்பு கல்வியாண்டிற்கான பட்ஜெட்டில் 200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் தான், பள்ளிக் கல்வித் துறை மாணவர்களின் கற்றல் குறைபாடுகளைத் தீர்க்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அதன் அடிப்படையில், “கொரோனா தொற்று பரவல் காரணமாக 1 முதல் 8 ஆம் வகுப்புகள் வரை அரசுப் பள்ளிகளில் படிக்கும் கற்றல் இடைவெளி மற்றும் கற்றல் இழப்பைக் குறைப்பதற்காகத் தினமும் ஒரு மணி முதல் ஒரு மணி நேரம் 30 நிமிடங்கள் வரையில் தன்னார்வலர்களைக் கொண்டு குறைதீர் கற்றல் செயல்பாடுகளை மேற்கொள்ளும் வகையில் மக்கள் பள்ளி என்கிற திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

அதன் படி, வரும் 2 ஆம் தேதி நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் இந்த திட்டம் குறித்தும் பள்ளிக் கல்வித் துறை குறித்தும் விவாதிக்கப்பட இருக்கிறது. 

மக்கள் பள்ளித் திட்டம் அனைத்து அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி நலனுக்காக செயல்படுத்தப்பட இருக்கிறது. எனவே கிராமசபை கூட்டத்தில் இது குறித்தும் விவாதிக்கப்பட வேண்டும் என்றும், கல்வித் துறை அலுவலர்கள் கிராமசபை கூட்டங்களில் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்க வேண்டும்” என்றும், பள்ளிக் கல்வித் துறை அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது.

மேலும், “தஞ்சாவூர், திருச்சி, விழுப்புரம், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, நீலகிரி, கடலூர், திண்டுக்கல் ஆகிய 8 மாவட்டங்களில் முதற் கட்டமாக இந்த திட்டம் முதலில் செயல்படுத்தப்படும் என்றும், அதன் பிறகு அக்டோபர் 18 ஆம் தேதி இந்த திட்டம்  ஆரம்பிக்கப்பட உள்ளது என்றும், அதன் தொடர்ச்சியாகவே தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும்” என்றும், பள்ளிக் கல்வித் துறை அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.