தமிழ்நாட்டில் முதல் முறையாக ஒருவருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா என்னும் கொடிய தொற்று நோய், புதிது புதிதாக உருமாறி தற்போது ஒமைக்ரான் வகை வைரசாக மாறியிருக்கிறது.

அந்த வகையில், தற்போது புதிதாக மாறியுள்ள கொடிய வைரசான ஒமைக்ரான், உலக முழுவதும் கிட்டதட்ட 70 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி உள்ளது. இதனால், உலக மக்களை மீண்டும் இந்த கொரோனா வைரஸ் அச்சுறுத்த தொடங்கி உள்ளது.

“உருமாறிய வைரஸ்களான ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா வைரஸ்களை விட இந்த புதிய உருமாறிய வைரஸ், அதிபயங்கரமானது” என்று, மருத்துவர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். 

அத்துடன், “உலகிலேயே முதல் முறையாக இங்கிலாந்தில் ஒமிக்ரான் வைரஸ் தொற்றுக்கு முதல் உயிரிழப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு  நிகழ்ந்து” ஒட்டுமொத்த உலக நாடுகளையும் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. 

இந்த நிலையில் தான், “தமிழ்நாட்டில் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக” மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதிப்படுத்தி இருக்கிறார்.

இது குறித்து பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழகத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், அதுவும் நைஜிரியாவில் இருந்து வந்தவருக்கு கொரோனா தொற்று  கண்டறியப்பட்டது” என்றும், தெரிவித்தார்.

“நைஜீரியாவில் இருந்து வந்த நபரோடு தொடர்பில் இருந்த மேலும் 7 பேருக்கு புதிய வகை கொரோனா இருக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது” என்றும், அவர் கூறினார். 

“ஒமைக்ரான் உறுதியான நபருடன் தொடர்பில் இருந்த 7 பேரின் மாதிரிகளும் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது என்றும், ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ள நபர் லேசான அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருகிறார்” என்றும், அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், “வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் 41 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது” என்றும், அவர் கூறினார்.

மேலும், “வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 41 பேருக்கு இது வரை கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது என்றும், இந்தியாவில் 9 மாநிலங்களில் ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது” என்றும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

முக்கியமாக, உலகில் 77 நாடுகளில் ஒமிக்ரான் தொற்று இது வரை பரவியிருக்கும் நிலையில், இந்தியாவில் கர்நாடகா, ஆந்திரா, கேரளா , தெலுங்கானாவை தொடர்ந்து தமிழகத்திலும் தற்போது ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது, தமிழக மக்களை சற்று அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.

இதன் மூலமாக, இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 73 ஆக அதிகரித்து உள்ளது.

இதனிடையே, தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 640 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 11 உயிரிழந்து உள்ளனர். இவற்றுடன், கொரோனா தொற்றில் இருந்து 692 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.