தென்கிழக்கு வங்கக்கடலில் 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

வங்க கடலில் கடந்த 23 ஆம் தேதி உருவான நிவர் புயல், நேற்று அதிகாலை 2.30 மணிக்கு புதுவை - மரக்காணம் இடையே கரையைக் கடந்தது.

இந்த நிவர் புயலானது திருவண்ணாமலை, வேலூர் வழியாக தெற்கு ஆந்திராவுக்கு நகர்ந்து சென்றது. இதன் காரணமாக, புதுச்சேரி, விழுப்புரம், சென்னை செங்கல்பட்டு, திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 3 நாட்களாக இடைவிடாமல் கன மழை கொட்டி தீர்த்தது. கன மழை காரணமாக, அந்த மாவட்டத்தின் பல பகுதிகள் தண்ணீர் மூழ்கித் தத்தளித்து வருகின்றன. 

காஞ்சிபுரம் உள்ளிட்ட சில இடங்களில் முக்கிய பாலங்களில் தண்ணீரில் மூழ்கி உள்ளதால், அந்த பகுதியைச் சுற்றி உள்ள கிராமங்களுக்குச் செல்லும் சாலைகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால், அந்த பாலத்தைத் தாண்டி உள்ள பல கிராமங்கள் தனி தீவு போல காட்சி அளிக்கின்றன. பல இடங்கள் ஏரிகள், குளங்கள் முற்றிலும் நிரம்பி வழிவதால், வெள்ள அபாய எச்சரிக்கை பல பகுதிகளுக்கு விடப்பட்டுள்ளது. அத்துடன், பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் மாவட்டம் நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 

மேலும், நிவர் புயல் கரையைக் கடந்து சென்ற சுவடு கூட இன்னும் மறையாத நிலையில், “வங்கக் கடலில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக” சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

அதன் படி, “தென் கிழக்கு வங்கக் கடலில் தமிழகத்தை ஒட்டி பகுதிகளில் வரும் 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது” என்று, வானிலை ஆய்வு மையும் தெரிவித்து உள்ளது.

“இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவான பிறகு, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும், புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழக பகுதியை நோக்கி வரும் 30 ஆம் தேதி நகரும்” என்றும், தெரிவிக்கப்பட்டு உள்ளது. . 

“இந்த புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், தமிழகத்தில் டிசம்பர் ஒன்றாம் தேதி முதல், டிசம்பர் 3 வரை கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும்” சென்னை வானிலை ஆய்வு மையம் சுட்டிக்காட்டி உள்ளது.

மேலும், “இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்று தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்து பின்னர் புதுச்சேரி நோக்கி நகரும்” என்றும், வானிலை மையும் கூறியுள்ளது.

“ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோர பகுதிகளில் ஒட்டி நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வட தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யும்” என்றும், வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டு உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பகுதியில் 23 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது என்றும், வானிலை மையும் சுட்டிக்காட்டி உள்ளது. 

அத்துடன், “வட கிழக்கு பருவ மழைக் காலத்தில் சராசரியாக 34 சென்டி மீட்டர் மழைப் பொழிவு இருக்கும் என்றும், ஆனால் கடந்த 1 ஆம் தேதி முதல் இன்று வரை 29 சென்டி மீட்டர் மழை மட்டுமே பெய்து உள்ளது என்றும், இது இயல்பை விட 15 சதவீதம் குறைவு” என்றும், சென்னை வானிலை ஆய்வு மையம் சுட்டிக்காட்டியிருக்கிறது.