திருச்சியில் 4 வருடமாகக் காதலித்து நெருங்கிப் பழகிவிட்டுக் கழற்றி விட்ட காதலனை, ஸ்கெச் போட்டு ரவுண்டு கட்டிய காதலி போலீசில் மாட்டி விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

திருச்சி மாவட்டம் சந்து தெருவைச் சேர்ந்த 27 வயதான ராம், அதே பகுதியில் நகை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு ஃபேஸ்புக் மூலமாகப் புதுக்கோட்டை இலங்கைத் தமிழர் முகாமில் வசித்து வரும் ஜனனி என்ற இளம் பெண்ணுடன் நட்பு அறிமுகம் ஏற்பட்டு உள்ளது. இந்த அறிமுகம் நாளடைவில் நட்பாக மாறி, அந்த நட்பு இவர்களுக்குள் காதலாக மாறி உள்ளது.

இதனால், கடந்த 4 வருடங்களாகவே ராம் - ஜனனி, இருவரும் காதலித்து வந்து உள்ளனர். இருவரும் ஜோடியாக ஊர் சுற்றி ஜாலியாக சுற்றி வந்த நிலையில், அவர்களுடைய நண்பர்கள் வீட்டிற்குச் செல்வதும், அங்குச் சென்று அடிக்கடி தங்கி இருப்பதையும் காதலர்கள் இருவரும் வழக்கமாகக் கொண்டு உள்ளனர். 

இதனால், காதலர்கள் இருவருக்குள்ளும் நெருக்கம் அதிகமானது. இப்படி நண்பர்கள் வீட்டிற்குச் சென்று ஒன்றாக ஒரே அறையில் தங்கும் நெருக்கம் அவர்களை இணைபிரியாமலேயே செய்திருந்தது. 

இந்நிலையில், காதலன் ராம் திடீரென ஒரு குண்டை தூக்கிப் போட்டு உள்ளார். “எனது வீட்டில் பெண் பார்த்து உள்ளனர். அந்த பெண்ணையே நான் திருமணம் செய்து கொள்ள இருக்கிறேன். அதனால், இனி நாம் அதிகமாகச் சந்தித்துக்கொள்ள வேண்டாம். இப்போது உள்ள இந்த சந்திப்பே நமக்கான கடைசி சந்திப்பாக இருக்கட்டும்” என்று, கூறியுள்ளார்.

இதனைச் சற்றும் எதிர்பார்க்காத ஜனனி, காதலனின் இந்த பேச்சால் கடும் அதிர்ச்சியில் உறைந்து போனார். அதனையடுத்து, சற்று நேரத்தில் நிதானத்திற்கு வந்த ஜனனி, தன் காதலன் ராமிடம் எவ்வளவோ பேசி மன்றாடிப் பார்த்தும், காதலன் எதையும் காது கொடுத்துக் கூட கேட்க வில்லை என்று தெரிகிறது. 

இதனையடுத்து, ஒன்று புரியாமல் காதலி ஜனனி அழவும், காதலன் ராம் தன் பாட்டிற்கு, தன் வீட்டிற்குப் புறப்பட்டுச் சென்றுள்ளான்.

அதே நேரத்தில் காதலன் ராமின் வீட்டில் திருமண ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்றுக்கொண்டு இருந்தது. இதனால், இனியும் பொறுமையாக இருந்தால் ஒன்றும் நடக்காது என்று, முடிவு செய்த இளம் பெண் ஜனனி, தன் காதல் விவகாரம் குறித்து, அங்குள்ள புதுக்கோட்டைக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இதனையடுத்து, ராமின் காதல் விவகாரம் ராமிற்குப் பார்க்கப்பட்ட பெண்ணுக்கும், பெண் வீட்டாருக்கும் தெரிய வந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த பெண் வீட்டார், திருமணத்தை அப்படியே நிறுத்தி விட்டார்கள். இதனைத்தொடர்ந்து, இளம் பெண் ஜனனி அளித்த புகாரின் பேரில், காதலன் ராமை விசாரிக்கக்  காவல் நிலையம் வர வேண்டும் என்று, போலீசார் அழைத்துள்ளனர். ஆனால், வருவதாகச் சொல்லிவிட்டு ராம், காவல் நிலையம் பக்கமே செல்லவில்லை. 

இதனால், இன்னும் என்ன செய்யலாம் என்று யோசித்த இளம் பெண் ஜனனி, திருச்சி கன்டோன்மென்ட் மகளிர் காவல் நிலையத்தில் மீண்டும் ஒரு புகார் அளித்தார். அப்போது, வேறு வழியின்றி காதலன் ராம், காவல் நிலையத்திற்கு வந்து உள்ளார். அப்போது, காதலன் ராம் மீது FIR பதிவு செய்யப்படாமல் இருந்து உள்ளது. இதனைத் தெரிந்து கொண்ட காதலன் ராம், காவல் நிலையத்திலிருந்து நைசாக நழுவப் பார்த்து உள்ளார். இதைக் கவனித்த காதலி ஜனனி, ராமைப் கொத்தாகப் பிடித்து மீண்டும் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதனையடுத்து, காதலர்கள் இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு, FIR பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

அப்போது, காவல் நிலையத்தில் காதலியிடம் பேசிய ராம், “தனக்குத் தண்டனை கிடைத்தாலும் பரவா இல்லை. உன்னை மட்டும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்” என்று, காதலன் ராம் ஆவேசமாகக் கூறி உள்ளான். ஆனால், “என்னை காதலன் ராமுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்றும், அவன் மறுக்கும் பட்சத்தில் அவனுக்கு உரியத் தண்டனை பெற்றுத்தர வேண்டும்” என்றும், காவல் துறையினரிடம் ஜனனி வலியுறுத்தினார்.

இதனையடுத்து, காதலர்கள் இருவரும் அடிக்கடி சென்று ஒன்றாகத் தங்கியிருந்ததாகக் கூறப்படும் நண்பர்களின் வீடுகளிலும், காவல் துறையினர் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.