திருத்துறைப்பூண்டியில் 13 வயது சிறுமியை பலாத்காரம் வன்கொடுமை செய்ய முயன்ற இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்துள்ள உப்பூர் மெயின் ரோடு பகுதியில் செந்தில் குமார் - இந்திரா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு 13 வயதில் ஒரு சிறுமியும், 7 வயதில் ஒரு சிறுமி என 2 பெண் குழந்தைகள் உள்ளன.

இதனிடையே, கொரோனா காரணமாகப் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால், சிறுமிகள் இருவரும் வீட்டில் இருந்துள்ளனர்.

அப்போது, வீட்டில் நீண்ட நேரம் இருந்த அந்த 13 வயது சிறுமி, வீட்டிற்கு வெளியே விளையாட வந்துள்ளார். அப்போது, பக்கத்து வீட்டைச் சேர்ந்த லட்சுமணன் என்ற இளைஞர், சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றதாகத் தெரிகிறது.

இதனால், அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி, சத்தம் போட்டுக் கூச்சலிட்டுள்ளார். இதனையடுத்து, லட்சுமணன், அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். இதனையடுத்து, வீட்டிற்கு வந்த சிறுமி, தன் பெற்றோரிடம், லட்சுமணன் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதைக் கூறி அழுதுள்ளார். இதனால்,  அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், அங்குள்ள திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், லட்சுமணனை போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாகக் கைது செய்தனர். இதனையடுத்து, அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சிறுமியை அவன் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதை ஒப்புக்கொண்டான். இதனையடுத்து, அவனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

அதேபோல், தமிழகத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக அனைத்து மக்கள் அரசியல் கட்சித் தலைவர் ராஜேஸ்வரி பிரியா குற்றம் சாட்டி உள்ளார். அத்துடன், பாலியல் குற்றங்களில் தொடர்புடையவர்கள் தயவு தாட்சண்ணியமின்றி கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டிடும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாகத் தமிழக அரசுக்கு அவர் எழுதி உள்ள கடிதம் தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகத்தில் தொடர்ச்சியாக பாலியல் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே வருவதாகக் கவலை” தெரிவித்தார்.

குறிப்பாக, “ கொரோனா காலத்தில் குழந்தைகள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகளும், அது சார்ந்த நிகழும் கொலைகளும் அதிகரித்துள்ளதாகவும்” அவர் வேதனை தெரிவித்தார்.

மேலும், பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபட்டோருக்குச் சிறப்பு நீதிமன்றங்கள் மூலம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து 2 மாதங்களுக்குள் தண்டனை பெற்றுத்தர வேண்டும்” என்ற பரிந்துரையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், அவர் தமிழக அரசுக்குக் கோரிக்கையாக அளித்துள்ளார்.