திருமண வயதை அடையாத சிறுமிக்கு திருமணம் செய்ய முயன்ற 3 பேரை, குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

மதுரை ஜெய்ஹிந்த்புரம் பிரதான சாலையில் அமைந்துள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் 18 வயது கூட நிரம்பாத சிறுமி ஒருவருக்குத் திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முயல்வதாக அங்குள்ள திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய பெண்கள் நல அலுவலர் யோகம்மாள் புகார் அளித்திருந்தார். 

இது குறித்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மதுரை நகர அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், விசாரணை மேற்கொண்டனர். 

போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அந்த பெண் 18 வயது பூர்த்தியாகாத மைனர் பெண் என்பது தெரிய வந்தது. 

இதனால், போலீசார் அந்த திருமணத்தை நடத்த முடியாது என்று தெரிவித்தனர். இதன் காரணமாக, போலீசாருக்கும் திருமண வீட்டாருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.

இதனையடுத்து, பொன்மேனி சொக்கலிங்க நகரைச் சேர்ந்த மணமகன் 27 வயதான வினோத் குமார், அவரது தாயார் 45 வயதான ராஜேஸ்வரி, ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகரைச் சேர்ந்த 43 வயதான சுமதி ஆகிய 3 பேரையும் குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம் 2006 இன் படி, இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

இதனிடையே, சிறுமி ஒருவருக்குத் திருமணம் நடத்த முயன்ற சம்பவம், மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதே போல், ஆந்திரா மாநிலத்தில் 5 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திரா மாநிலம் காக்கி நாடாவில் தூங்கிக்கொண்டிருந்த 5 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

அதாவது, ஆந்திர மாநிலம் காக்கிநாடா கோலிபேட்டையை சேர்ந்த பில்லிராஜூ என்பவரது 5 வயது மகள், நேற்று இரவு தனது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது, அடையாளம் தெரியாத நபர், வீடு புகுந்து சிறுமியை கடத்தியதாகத் தெரிகிறது. 

இதனையடுத்து, காலையில் சிறுமியை காணவில்லை என்று, அவரது பெற்றோர் கடும் அதிர்ச்சியடைந்து உள்ளனர். இதனையடுத்து, சிறுமியின் பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள் அந்த பகுதி முழுவதும் மாயமான சிறுமியைத் தேடி உள்ளனர்.

அப்போது, அந்த பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் மாயமான சிறுமியை அவர்கள் மீட்டு உள்ளனர். 

இதனையடுத்து, சிறுமியிடம் அவரது உறவினர்கள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், “அடையாளம் தெரியாத நபர்களால் சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு ஆளானது” தெரிய வந்தது. 

இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். அந்த மர்ம நபர் குறித்து, பாதிக்கப்பட்ட 5 வயது சிறுமி போலீசாரிடம் முழு விபரங்களையும் தெரிவித்தார். இதனால், அந்த பகுதியில் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.