“நீலகிரியில் உலவும் ஆட்கொல்லி புலியை கொல்ல வேண்டாம்” என்று வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ள நிலையில், “புலியை கொல்லும் திட்டம் ஏதும் இல்லை” என்று, தமிழ்நாடு வனத்துறை தெரிவித்து உள்ளது.

முதுமலை புலிகள் காப்பகம் பகுதியில் உள்ள மசினகுடி வனப்பகுதியை ஒட்டிய கிராமத்தினரைச் சேர்ந்த 4 பேரை, வனத்திலிருந்து வெளியே வந்த புலி ஒன்று தாக்கி கொன்று உள்ளது. மனிதர்கள் தவிர, அப்பகுதியில் 30 க்கும் மேற்பட்ட கால்நடைகளையும் அந்த புலி கொன்றது. இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த பகுதி கிராம மக்கள், ஆட்கொல்லி புலியை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க பலகட்ட போராட்டங்களை நடத்தினர்.

இதனையடுத்து, பொதுமக்களின் வேண்டுகோளுக்கு ஏற்று புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடிவு செய்து, 3 வன கால்நடை மருத்துவ குழு மற்றும் 100 க்கும் மேற்பட்ட வனத்துறையினர், புலியை தேடும் பணியில் கடந்த ஒரு வார காலமாக ஈடுபட்டு வந்தனர். 
இப்படியாக, கடந்த 11 நாட்களாக ஆட்கொல்லி புலியானது, வனத்துறையினருக்குப் பல முறை தென்பட்ட போதிலும் அடர்ந்த புதர்களில் மறைந்து கொண்டு வனத்துறையினருக்குக் கடுமையாகப் போக்கு காட்டி வந்தது.

மசினகுடி - மைசூரு சாலையில் வனத்துறை சோதனைச் சாவடியில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வனப்பகுதியில் ஒரு புலி நடந்து செல்வதாக தகவல் கிடைத்த நிலையில், சீனிவாஸ் மற்றும் உதயன் ஆகிய கும்கி யானைகள் மீது வனத்துறையினர் இருக்கைகள் அமைத்து, அதன் மீது ஏறி வனத்துறைக்குள் சென்றனர். 

அத்துடன், தமிழக முதன்மை வன உயிரின பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் மற்றும் மயக்க ஊசி செலுத்தும் துப்பாக்கிகளுடன் கால்நடை டாக்டர்கள் கும்கி யானைகள் மீது ஏறி அமர்ந்து சென்றனர். தொடர்ந்து புலி நடந்து சென்றதாக கூறப்பட்ட வனப்பகுதிக்கு விரைந்து சென்ற அவர்கள், அங்கு டிரோன் கேமரா மூலமாகவும் புலியை தேடி வருகின்றனர். இந்த தேடுதல் வேட்டையில் மோப்ப நாய்களும் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.

இதனால், விரைவில் புலி பிடிபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அதே நேரத்தில், மசினகுடி பகுதியில் முகாமிட்டுள்ள புலியை சுட்டுப்பிடிக்க உத்தரவிடப்பட்ட நிலையில், அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. 

புலியை சுட்டிப்பிடிக்கும் இந்த முடிவுக்கு தமிழகம் முழுவதும் பரவலாக எதிர்ப்புகள் கிளம்பியது.

இதனையடுத்து, புலியை சுட்டுப் பிடிக்கும் உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் 2 வழக்குகள் தொடர்பட்டன. அதில், இந்திய கால்நடைகளுக்கான மக்கள் அமைப்பின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, இன்று நீதிபதிகள் சஞ்சீவ் பேனர்ஜி, ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. 

அப்போது? தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “இந்த புலியை கொல்வதற்காக சுட்டுப்பிடிக்கும் உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என்றும், அதை உயிருடன் பிடிப்பதே நோக்கம்” என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து தலைமை நீதிபதி, 'நீலகிரியில் உலவும் புலி ஆட்கொல்லி புலியாக இல்லாமலும் இருக்கலாம் என்றும், அதனால் இந்த புலியை கொல்ல வேண்டாம்” என்றும், அறிவுரை வழங்கினார். 

அத்துடன், “புலியை பிடிக்கும் பணியின் போது மற்ற விலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்த கூடாது என்றும், புலியின் நடவடிக்கை குறித்து ஆய்வு செய்து அதை பிடித்து உரிய சிகிச்சை வழங்க வேண்டும்” என்றும் நீதிபதி தெரிவித்தார். 

“இந்த புலியை பிடித்து சிகிச்சை அளித்தது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்றும் தமிழக வனத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை தசரா விடுமுறைக்கு பிறகு ஒத்திவைத்தனர்.

இதனிடையே, “புலியை கொல்லும் திட்டம் ஏதும் இல்லை என்றும், அதனை உயிரோடு பிடிக்கவே உத்தரவிடப்பட்டு உள்ளதாகவும்”  தமிழ்நாடு வனத்துறை, சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.